''திருமாவளவன் ஆட்சியில் பங்கு பேச்சை எல்லாம் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறார் என்றெல்லாம் விமர்சனம் வருகிறது. எனக்கு கட்சி நலனும் முக்கியம்; கூட்டணி நலனும் முக்கியம். எல்லாவற்றையும் விட மக்கள் நலன் முக்கியம். அவசரப்பட வேண்டிய அவசியம் எனக்கில்லை. அவர்களுக்கு ஒரு மணி நேரத்திற்குள் விடை தெரியணும்; எனக்கு அவசரமில்ல. நாங்க யார்கிட்ட பேசவேண்டுமே அவர் கிட்ட பேசிக் கொண்டிருக்கிறோம். யார்கிட்ட தகவல் பரிமாறிக்கொள்ள வேண்டுமோ அவர்கிட்ட பரிமாறிக்கொள்கிறோம். அர்ஜூன் கூட பேச வேண்டுமானால் அவரிடம் பேசுவேன். ரவிக்குமாரிடம் பேச வேண்டுமென்றால் அவரிடம் பேசுவேன். விமர்சனம் செய்வோரிடம் பேச வேண்டும் என்கிற தேவை எனக்கென்ன இருக்கிறது?
டிவியில உட்கார்ந்துகிட்ட இருக்குறவங்களுக்கு எல்லாம் நான் சொல்லணும் என்கிற அவசியமில்ல. பொதுவெளியில் சொல்ல வேண்டிய தேவை என்ன இருக்கிறது?
ஆதவ் அர்ஜூன் ஒரு கருத்தைச் சொல்ல மற்ற பொதுச்செயலாளர்கள் ஒரு கருத்தைச் சொல்ல, கட்சிக்குள் குழப்பம், முரண்பாடு என்றெல்லாம் பேசத் தொடங்கிவிட்டார்கள். ஆதவ் அர்ஜூன் கட்சி நலன் சார்ந்து சிந்தித்தார். மற்ற பொதுச்செயலாளர்களோ கூட்டணி நலன் முக்கியம் என்று கூட்டணி முறிந்துபோனால் அடுத்து என்ன? என்று பெரிய கேள்விக்குறி எழுந்து நிற்கிறது. நாம் ஒரு பாதுகாப்பு இடத்தில் நிற்காமல் எந்த யுத்தத்தையும் நடத்தக்கூடாது. கண்ணுக்கு முன்னேதான் எதிரிகளை நிறுத்த வேண்டும். நம்மைச்சுற்றி எதிரிகளை நிறுத்திவிடக்கூடாது. நிறுத்த அனுமதிக்க கூடாது. நம்மைச்சுற்றி வளைக்க அனுமதிக்க கூடாது.
எலிக்கு கூட இந்த அறிவு இருக்கிறது. நான் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன். வரகு விவசாயம் பண்ணுவோம். வரகுக்காட்டில் நிறைய எலி உற்பத்தி ஆகும். எக்கச்சக்கமான வரகுகளை பிடிங்கிக்கொண்டு போய் எலிகள் தங்களின் வளைகளில் வைத்துக்கொள்ளும். நிலக்கடலை பயிரிட்டால் மரக்கா கணக்கில் கொண்டு போய் வளைக்குள் வைத்திருக்கும்.
அறுவடை முடிந்த பிறகு அந்த எலியை பிடிப்பதற்காக களைக்கொட்டு எடுத்துக்கொண்டு போவோம். எலிக்குழிகளை தேடிப்பிடிப்போம். அந்த எலிக்குழி வழியாக அந்த எலியை பிடிப்பதற்கு முன்பாக பொட்டான் வழியை தேடுவோம். பொட்டான் என்றால் பொய்யான வழி; வேறு வழி அல்லது ரகசிய வழி என்று கிராமத்தில் சொல்வார்கள். மாற்று வழியை ரெடி பண்ணி அதில் செத்தையை(வைக்கோல், குப்பை) போட்டு மூடி வைத்திருக்கும். ஒரு வழியாக யாரும் பிடிக்க முற்பட்டால் இந்த மாற்று வழியாக தப்பித்து ஓடுவதற்குத்தான் இந்த முன்னேற்பாட்டினை செய்து வைத்திருக்கும். எலிக்கு எவ்வளவு பெரிய அறிவு இருக்கிறது பாருங்க.
முக்கிய வழியை கண்டுபிடித்து களைக்கொட்டினால் கொத்திக்கொண்டே போகப்போக நம்மைப்பிடிக்க எவனோ வந்துட்டான், கொலைக்காரன் எவனோ வந்துட்டான் என்று நினைத்து சேகரித்து வைத்திருந்த தானியங்களை எல்லாம் அப்படியே போட்டுவிட்டு, படுக்கயறை செய்து அதில் படுக்க வைத்திருந்த குஞ்சுகளை எல்லாம் அப்படியே போட்டுவிட்டு மாற்றுவழியாக போய்விடும். அதனால் தான் முதலில் மாற்று வழியை அடைப்போம். அப்படியும் அது ரெண்டு மூன்று வழிகள் வைத்திருக்கும்.
எலியை பிடிக்கப் போகும்போது அதை கண்டுபித்து அடைக்காமல் வெட்டிக்கொண்டே இருந்தால் அது தப்பித்து விடும். எலியை பிடிக்க முடியாமல் அது சேகரித்து வைத்திருந்த வேர்க்கடலை, வரகு போன்றவற்றைத்தான் அள்ளிக்கொண்டு வர முடியும். வேறு வழியில்லை. எலிக்கே அந்த அறிவு இருக்கின்ற போது யுத்தக்களத்தில் நிற்கின்ற நமக்கும் அப்படி வழி தேவை . இதுக்கும் எவனாவது கதை கட்டுவான். யூக வாதங்கள் வரும். உணர்ச்சி வசப்படக்கூடாது. நம்மை எல்லோரும் குறைத்து மதிப்பிடுகிறார்கள். என்னால் அடித்துச்சொல்ல முடியும்; இன்றைக்கு கருத்தியல் அடிப்படையில் விவாதிக்கக் கூடிய அளவிற்கு வலிமைபெற்ற தலைவர்களைக் கொண்ட இயக்கம் விடுதலை சிறுத்தைகள் கட்சி’’.
Leave a comment
Upload