லேசாக இருமினாலே இடி இடிப்பது போல் சப்தம் காதில் விழுகிற அளவுக்கு அங்கு நிசப்தம்.
மார்கழிக் குளிர்காற்று அப்பப்போ அலை போல் பொங்கி வந்து, கார் ஜன்னல் வழியே நுழைந்து,முகத்தில் உராய்ந்து,குளிர வைத்துப் பின் அவசர கதியில் வெளியே செல்லுகிறது.
மூர்த்தி கண் விழித்தான் . மெதுவாக தலையைக் கொஞ்சம் திருப்பிக் கொண்டான் . தலைவலி கொஞ்சம் குறைந்தது போல் இருந்தது. காரின் முன் சீட்டில் டிரைவர் குமரன் படுத்திருந்ததைப் பார்த்தான்.
ஆயாசத்துடன் மூர்த்தி, தன் சக்தியை எல்லாம் சேர்த்து மெதுவா 'குமரா' என்று டிரைவரை அழைத்துப் பார்த்தான். எந்த பதிலும் இல்லை. பத்து நிமிஷத் துக்குப்பின் இடது கையை சிரமத்துடன் நீட்டி ( வலது கை கொஞ்சம் திறந்திருந்த பின் கதவின் இடுக்கில் மாட்டிக்கொண்டிருந்தது) குமரனின் மூக்கை அடியில் தொட சுத்தமாக மூச்சு காற்று இல்லாதது தெரிந்தது.
குமரன் அமரன் ஆகிவிட்டதை அறிவித்தது.
குமரன் உடல், இன்னும் கொஞ்சம் மீதியிருந்த வெப்பத்துடன் 'ரிகர் மார்ட்டிஸு 'க்கு காத்துக் கொண்டிருந்தது.
"அடப்பாவி... போயிட்டியா!"
எத்தனை மணி இருக்கும்.? ரெண்டு, மூணு, நாலு... தெரியல. ஒரே இருட்டு. எப்போ வண்டி பள்ளத்துல விழுந்தது? நேற்று இரவா? போன ஜென்மமா ?....
" குமரா! எதிர லாரி "என்று, தான் அலறியது மூர்த்திக்கு ஞாபகம் வந்தது. பின் கார் உருண்டது, ஒண்ணு ரெண்டு என்று குட்டிக்காரணம் போட்டது, . ஒரு பெரிய சத்தம்.அப்புறம் ஒண்ணும் நினைவில்லை..
இப்போ நாம எங்க கிடக்கோம் .?
ஏதோ ஒரு பள்ளம். பத்தடியா இருக்கலாம். பாதாளமாயும் இருக்கலாம். நாம விளுந்தது எவனுக்காவது தெரியுமா.? இனிமேலாவது கண்டுபிடிப்பானுவளா.
இல்ல அனாதைப் பொணம் போல் போகவேண்டியத் தானா?. ஒளுங்கா தகனம் பண்ணாட்டி பேயா அலையணு மாமே? சரி.இப்போ நாம பேயா? மனுசனா.?....என் செல் போன் எங்கே? இடக்கையை ஆட்ட முடியுதே! அப்போ உயிர் இருக்குது.மத்த கை கால் எதையும் அசைக்க முடியலே. . குமரன் செத்துட்டான். நான்பிழைப்பேனா?
மூர்த்தியின் எண்ண ஓட்டம் தொடர்ந்தது.
அடுத்த மாசம் சென்னை ஹை கோர்ட்ல அந்த ஏற்காடு பக்க நூறு ஏக்கர் கேசு , நமக்கு தோதா தான் முடியும் .. மூணு வருஷமா இதற்கு என்னா செலுவு, எத்தினி பொய்யி, பொய் சட்சிங்க , எத்தினி கோடி லஞ்சம்... எவ்வளோ அடி தடி வெட்டு குத்து எல்லாம் செஞ்சிருக்கிறோம்.
அரசாங்க நெலம். ஆனா ஈஸியா ஆட்டையப்போடலாம் என்று தான் செஞ்சோம். ஆனா இன்னிக்கு தான் இப்போ தான் புரியுது . இதெல்லாம் பெரிய தப்பு இல்லையா ? நம்ம புள்ளங்க, பேரப்பசங்க எல்லாம்
ஒளுங்கா இருக்கவேணாவா ? நாம மேல போயி நரகத்துல எண்ணெய் கொப்பரைல சிப்ஸ் ஆவணுமா?
நாளைக்கு பொழச்சு கெடந்தா நாம கேஸ வாபஸ் வாங்கிகினு வந்துடனும். .கடைசில நாம என்னாத்த கைல எடுத்துகினு போகப்போகிறோம்.?..சே. இந்த அறிவு ஏன் நமக்கு முன்னாலேயே வரல.
நாளைக்கு இத்த சரிபண்ணிடலாம்.
இது சத்தியம்.
நம்ம பொண்ணு ஜமுனாவோட ஆசை தப்புன்னு நினைச்சேன் இன்னா தான் படிச்ச புள்ளையா இருக்கட்டுமே அந்த.. அவன் பேரு இன்னா.. சஞ்சையா புஞ்சையா .! அந்த இந்திக்கார பையன்...ஜாதி இன்னா?... யாருக்கு தெரியும் ?
நம்ம வீட்டுக்குள்ள சேத்துக்கிட்டு நாம ஒண்ணா இருக்க முடியுமா.? நாளைக்கு நம்ம ஊர்ல இன்னா பேசுவாங்க..... இது எதையும் கண்டுக்காம, நான் வேண்டாம் என்று சொல்ல,சொல்ல,பிடிவாதமா அந்த பையனை தான் கட்டிப்பேன்குது ஜமுனா..
அவனை பொய் கேஸ்ல மாட்டி அஞ்சு வருஷம் உள்ளே தள்ளிடுவேன்னு நிஜமாவே சொன்னேன் . ஆனா ஜமுனா பயப்படல. நம்ம பொண்ணு இல்லயா! இப்போ நினைச்சுப்பாத்தா நான் எவ்வளவு அல்பமா நடந்துகிட்டு ருக்கேன்னு தெரியுது. . என் ஒரே பொண்ணு வாழ்க்கையை என்
ஜபர்தஸ்துக்க்காக அழிக்கலாமா?. ஜமுனா கண்ணு. என்ன மன்னிச்சுடு.நான் வந்ததும் (வந்தேன்னா!) அந்தப்பையனையே உனுக்கு ஜாம் ஜாம்னு கட்டிவைக்குறேன்.
இந்த,கஞ்சா கடத்தல், போதை சமாச்சாரம், மெத்,,அல்லாத்தயம் உட்டுடனும். டெல்லில இருந்து ஜெயிதீப் மெரட்டுவான்.25 வருஷ கூட்டு பிசினஸ். ஆனா நம்ம மனசு மாறிடுச்சு இல்லை. எல்லாத்தையும் விட்டுரலாம். ஜெய்தீப்போட பேசவேணாம். இ மெயில் அனுப்பி சமாதானமா பிரிஞ்சுடலாம்.
நம்ம கிட்ட இருக்கற எல்லா வெப்பனையும்,....செயின்,அருவா, கத்தி, கை துப்பாக்கிங்க ,ஒரு ஏ கே 47ம் சேர்த்து... நடு கடலுக்குள்ள போட சொல்லிடணும்.
ஆரணி பக்கம் ரிசார்ட்ல புதச்சு வெச்ச அம்பது கோடி கரன்சிய (எல்லாம் ரெண்டாயிரம் நோட்டு) பிரிச்சி எல்லா கோவில் உண்டிலயும் போடவைக்கணும். அஞ்சு கோடி திருப்பதில . நம்ம பாடிகார்ட் கம் மேனேஜர் லிங்கத்துக்கு செட்டில் பண்ணி பர்மனண்டா ஓய்வு கொடுக்கணும்..
இது எல்லாம் திருப்பதி பெருமாள் மேல ஆணையிட்டு சொல்லறேன்.செய்யறேன்.
இது சத்தியம்.
என்ன காப்பாத்துப்பா!
மேலேயிருந்து ஒரு சர்ச் லைட்டின் ஒளிப்பிழம்பு வண்டிக்கு அருகில் தரையப் பெருக்கின மாதிரி வந்து
பின் தண்ணீர் மேல் நகர்ந்தது. ஏதோ ஏரியோ குளமோ ஆறோ பக்கத்தில்.?
" இன்னும் கொஞ்சம் நீட்டமா லைட் அடிங்கடா. அப்பதான் கார் மேல் படும்.. தல சுத்துதே."...மூர்த்தி நினைவு இழந்தான்.
அடுத்த முறை வீசிய ஒளிக்கற்றை கார் ஜன்னலில் பட்டு மூர்த்தியின் முகத்தில் நின்றது.
ஒரு வாரம் கழிந்தது.
சென்னையின் மிகப்பெரிய ஆஸ்பத்திரி ஐசியூவில்.
மூர்த்திக்கு நேற்று முழு நினைவு வந்தது. இன்று பரவாயில்ல.இரண்டு காலிலும் எலும்பு முறிவு. வலது கையில் பெரிய காயம்.
காலையில் மூர்த்தியின் கட்சித் தலைவர், சில எம் எல் ஏக்கள்,சில கூட்டணி கட்சி தலைவர்கள், ஒன்றிரண்டு எதிர் கட்சி தலைகள் , ஒரு எம்பி, எல்லாம் வந்து பூங்கொத்து கொடுத்து,மூர்த்தி பிழைத்ததற்கு மூர்த்தியின் நியாயமான,நேர்மையான அரசியல் தான் காரணம் என்றனர்.
எல்லாரும் போனதும் மூர்த்தியின் உயிரான மேனேஜர் லிங்கம் வந்தான்.
லிங்கத்தை மட்டும் தனியா அழைத்துப் பேசினான் மூர்த்தி.
"இதெல்லாம் உடனே செய்யணும் லிங்கா. ஏற்காடு பக்கம் நூறு ஏக்கர் கேஸ் நமக்கு சாதகமா தான் முடியணும். வேணும்னா இன்னும் ரெண்டு மூணு கோடி கூட செலவு செய். சொதப்பக்கூடாது.
ஜமுனாவோட ஃபிரன்ட், அதான் அந்த வடக்கத்திக்கார புள்ள சஞ்சய்ய கஞ்சா கேஸ்ல, கூண்டாஸ் ல போட்டு உள்ள தள்ள ஏற்பாடு செய்..
டெல்லி ஜெய் தீப்ப கூப்பிட்டு சோமாலயா வேலை ஆராமிக்கலாம்னு சொல்லு . நான் ரெடி.அவன் கிட்ட இன்னும் ரெண்டு ஏ கே 47 கேக்கணும்.
கடைசியா ஆரணி ரிசார்ட்ல இருக்குற கோணிப் பைங்களிலிருந்து 5 கோடி மட்டும்.எடுத்து.....
..... ம்ம் வேணாம்...10 கோடி எடுத்து திருப்பதி உண்டில உடனே போட்டுருப்பா." என்று கூறி முடித்தான்.
பின் திருப்பதி வெங்கடாசலபதி கிட்ட மானசீகமா பேசினான்.
"கடவுளே. இந்த தடவை மன்னிச்சுடு. அடுத்த முறை திருந்தறேன் இப்போ அஞ்சு கோடிக்கு பதில் பத்து கோடி எடுத்துக்கோ. டீல்." என்றான்.
Leave a comment
Upload