தொடர்கள்
கதை
கன்னித் தீவு - எம்.ஆர். மூர்த்தி

20240828085729990.jpeg

அன்று ஞாயிற்றுக் கிழமை மத்தியானம். மனைவி தட்டில் கொட்டியதை வயிற்றில் கொட்டிக் கொண்டு கட்டிலில் விழுந்தேன். கண்ணயர்ந்தேன். உடனே கனவு. ஓவராக சினிமா பார்ப்பதாலோ என்னவோ எனது கனவுகளில் கூட விளம்பரம்-டைட்டில்ஸ்-இடைவேளை-சஸ்பென்ஸ்-கிளைமாக்ஸ் எல்லாம் இருக்கும். இடையில் விழிப்பு வந்து தண்ணீர் குடித்துவிட்டு படுத்தால், கனவு கரெக்டாக விட்ட இடத்திலிருந்து தொடரும். அன்றையக் கனவில், எம். கே. தியாகராஜ பாகவதர், தன் வெண்புரவியில் பவனி வந்தபடி, தன் ஜில்பாவைக் கோதியபடி, ஹேர் ஆயிலுக்கு விளம்பரம் கொடுத்தார். சோப்பு விளம்பரத்தில் கொல்லங்குடி கருப்பாயி….மெயின் கனவு துவங்கியது.

நான் மெரீனா பீச்சில் அலைகளூடே தன்னந்தனியாக வாக்கிங் சென்று கொண்டிருந்தேன். மயக்கும் மாலைக்கு ஏற்ற பூர்விகல்யாணி ராகத்தை காது கிழிய உரக்க பாடியபடி நடந்தேன். எதிரே ஒரு கும்பல் வாயடைத்து, மெய்மறந்து என்னிசையை … இன்னிசையை கேட்டுக் கொண்டிருந்தது. உற்றுப் பார்த்தால்… அரியக்குடி, செம்மங்குடி, லால்குடி, குன்னக்குடி, காரைக்குடி. திடீரென யாரோ என் பெயர் சொல்லி கூவி அழைப்பது போலிருந்தது.

20240828085800249.jpeg

ஒரு கட்டிளங்குமரி, அதுவும் தனியாக , ஒரு படகிலிருந்து என்னைக் கையசைத்து அழைத்தாள். அத்தனை பேரழகை நான் இதுவரை கண்டதேயில்லை. வயது பதினெட்டு கூட இருக்காது…… பதினேழரை இருக்கலாம்…. நான் படகில் தாவி ஏறினேன். அந்தக் குமரி திடீரென மாயமாக மறைந்தாள். உடனே படகு, ஒலிம்பிக் ஸ்பீடில் தலை தெறிக்கப் பறந்தது. நான் என்ன கத்தியும் பயனில்லை. சற்று தூரம் சென்றதும், கீ குறைந்த பொம்மை போல செயலிழந்து, என்னைக் கடலில் கவிழ்த்துவிட்டு மறைந்தது. எதிர்க்கட்சியினரால் கவிழ்க்கப்பட்ட ஆளுங்கட்சி முதல்வர் போல நான் நிலை குலைந்தேன். நான்கு திசைகளிலும் தண்ணீர்… தண்ணீர்… அடியில்…? ஆம்… அங்கும் தண்ணீர். வாயில் உப்புக் கரித்தது. கடல் நீரா… என் கண்ணீரா என்று தெரியவில்லை. நீரில் நீந்தி, மிதந்து, களைத்து, துவண்டு மயக்கமுற்றேன். விடிகாலை சூரியன் சுள்ளென முகத்திலடிக்க, கண் திறந்தேன். ஒரு கடற்கரையில் ஒதுங்கியிருப்பதை உணர்ந்தேன்.

சற்றுத் தொலைவில், இருபது முப்பது இளம் பெண்கள் தேவதைகள் போல நடனமாடிக் கொண்டிருந்தனர். ஏதோ பாரதிராஜா ஷுட்டிங் என்று நினைத்து புலியூர் சரோஜாவைத் தேடினேன். ஒரு தேவதை என்னருகே வந்தாள். சினிமாவில் கேட்பது போல, “ நான் எங்கிருக்கிறேன்…? “ என்று ஈனஸ்வரத்தில் கேட்டேன்.

“ நீ இருப்பது கன்னித்தீவு “ என்றாள் அந்தக் காரிகை. “ தினத்தந்தி கன்னித்தீவா…. சிந்துபாத், லைலா, ஒத்தைக் கண் அசுரன் எல்லாரும் சௌக்கியமா…? “ என்றேன். அவள் முறைத்தாள். “ மிஸ்டர்…. இங்குள்ளவர்கள் எல்லாருமே கன்னிகள்…. ஆண்களே கிடையாது…. இதிலிருந்து என்ன

தெரிகிறது ?” என்றாள். “ இங்கு பார்பர் ஷாப்பே இருக்காதே “ என்றேன்.

அவள் இன்னும் என் அருகில் வந்து, “ என் பெயர் கிளிக்கன்னி “ என்றாள். “

” நீதான் இங்கு விஸிட் செய்திருக்கும் முதல் ஆண் மகன்…”

“ அதெல்லாம் இருக்கட்டும் முதலில் என்னை வீட்டுக்கு அனுப்பித் தொலை…என் மனைவி காத்திருப்பாள்….அவளுக்கு பசி தாங்காது…. நான் போய்தான் சமையல் செய்யணும்….”

“ அத்து மீறி எங்கள் தீவுக்கு வந்த உன்னை அத்தனை சீக்கிரம் விட்டுவிடுவேனா…? சரி…சரி…. அதை எங்கள் இளவரசியே முடிவு செய்யட்டும்….” அவள் கை அசைவில் ஒரு ஹெலிகாப்டர் வந்தது. அதில்…. அதில்…. ஓட்டுனரே இல்லை….இருவரும் அமர, ஹெலிகாப்டர் கிளம்பியது. “ நேற்று மாலையிலிருந்து ஒண்ணும் சாப்பிடவில்லை…சூடா ரெண்டு இட்லி சாம்பார், காப்பி… பில்டர் காப்பி இருந்தால்… ” என்று சொல்லி முடிப்பதற்குள் அவைகள் கிளியின் கைகளில். பிரமித்து விட்டேன். ஒரு நொடி நான் இங்கேயே செட்டில் ஆகிவிட்டால் என்ன என்று தோன்றியது.

ஏவிஎம் ஸ்டூடியோவில் தோட்டாதரணி போட்ட செட் மாதிரி ஒரு பிரம்மாண்டமான அரண்மனையில் ஹெலிகாப்டர் இறங்கியது. “ இங்கேயே இரு… இளங்கன்னி…. அதான் எங்கள் இளவரசி உன்னை சில நொடிகளில் சந்திப்பாள்.” என்று கூறி, மறைந்தது கிளி. ஒரு இருநூறு வயது மதிக்கத்தக்க குடுகுடு கிழவியுடன் மீண்டும் பிரசன்னமானாள் கிளிக்கண்ணி.

‘ இவர்தான் இளங்கன்னி… இத்தீவின் இளவரசி..” என்றாள். “ கிளாட் டு மீட் யூ கெயவி…” என்று கை கொடுத்தேன். “ கிழங்கன்னி… சாரி… இளங்கன்னி… நான் வீடு போய் சேரணும்… சட்டு புட்டுன்னு அனுப்பு “ என்றேன்…. இனிமேல் கனவிலும் இப்பக்கம் தலை வச்சு படுக்க மாட்டேன். கிழவி குறும்பாக சிரித்து என்னைப் பார்த்து கண்ணடித்தாள். “ சே… ஒரு விவஸ்தையே இல்லை… கண்ணடிக்கற வயசா இது….?

“ நண்பரே… எங்கள் தீவில் புகுந்த முதல் ஆண்மகன் நீ…. உன்னை எப்படி சும்மா விடுவது…. “ கிழவி, கிளி காதில் ஏதோ ஓதியது. கிளி என்னை தரதரவென இழுத்து ஒரு அறையுள் தள்ளி திரும்புவதற்குள், கதவு தாளிட கிளி பறந்துவிட்டது. பிரம்மாண்டமான கட்டிலும் மெத்தையும் அலங்கரிக்கப் பட்டிருந்தன. திடீரென கிழவி என் முன் தோன்றி, கைகளைத் தன் மேல் படர, அவள் வாலைக் குமரியாக மாறிவிட்டாள். ஏதோ விட்டலாச்சார்யா படம் பார்ப்பது போலிருந்தது. திடுக்கிட்டேன். அவள்… அவள்… அதே பெண்…. மெரினாவில் என்னை அழைத்து … பின் மறைந்த மாய மோகினி…

“ சண்டாளி…. பெருச்சாளி…என்னை ஏமாற்றி சிறையெடுத்த கிழடே….என்னைப் போகவிடு… “ என்று கத்தினேன். அவள் ஒரு மோகனப் புன்னகை வீசி, என்னை கட்டிலில் வீழ்த்தினாள்.

“ பாவி… மூதேவி…. காமப் பிசாசே….என்னை என்ன செய்யப் போகிறாய்….? ‘ என்று கத்தினேன். அவள் காமாக பதில் சொன்னாள்….

“ என்ன செய்யப் போகிறேனா…? எனக்கு எப்படி தெரியும்…? இது உன்னோட கனவுடா முண்டம்…. ! ”