தொடர்கள்
ஆரோகியம்
வெற்றிலையின் பெருமை- ஆனந்த் ஶ்ரீனிவாசன்

20241029184919945.jpg

மனிதனால் பேணி வளர்க்கப்பட்ட பயிர்களில் முக்கியமான பயிர் வெற்றிலை. வெற்றிலைக் கொடி பல்லாண்டு வளரும் பயிர்.

மகாபாரதம் இராமாயணம் நூல்களில் இது தாம்பூலமாகப் பேசப்படுகிறது.

நமது தினசரி வாழ்க்கையில் வெற்றிலை கொடுத்து உபசரிப்பு என்பது ஒரு முறை.

சிறப்பு நிகழ்ச்சிகள், கல்யாணம், மற்றும் விசேஷ நிகழ்ச்சிகளில் வெற்றிலை பாக்குக் கொடுப்பது இன்றும் தொடர்கிறது .

திருமணம் நிச்சயம் ஆகும் சமயத்தில் இரு வீட்டாரும் வெற்றிலை தட்டு

மாத்துக்கோங்க என்று வைதிக வாத்தியார் சொல்வதுண்டு.

ஒவ்வொரு இந்து பண்டிகை கொண்டாடப்படும் நேரத்தில் நைவேத்தியம் பண்ணும் போது மற்ற பதார்த்தங்களுடன் பழம், வெற்றிலை பாக்குச் சமர்ப்பிப்பது தொன்று தொட்டு வரும் பழக்கம்.

அடைக்காய் திருத்தி நான் வைத்தேன்

பெரியாழ்வார் 2ம் பத்து 3ம் திருமொழி முதல் பாட்டில் கண்ணனுக்குத் திருவாராதனத் தின் போது போஜயாசனம் சமர்ப்பித்த பிறகு இந்தப் பாசுரத்தைச் சொல்லித்தான் சுருளமுது என்னும் வெற்றிலையைச் சமர்ப்பிக்கின்றார்கள்.

பேய்ப் பால் முலையுண்ட பித்தனே கேசவ நம்பீ!

உன்னைக்காது குத்த

ஆய்ப்பாலர்பெண்டுகள் எல்லாம் வந்தார் !!

அடைக்காய் திருத்தி நான் வைத்தேன் .!!!.

வெற்றிலை, இனம் மதம் ஜாதி குலம் கோத்திரம் போன்ற வருணா சிரமப் பிரிவுகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டது. இதை யாரும் வேண்டுமானாலும் தொடலாம், தொட்ட பின்னரும் சாப்பிடலாம் . இது பொற்குடம் போன்று யார் தொட்டாலும் அதற்கு அசுத்தி ஏற்படாது.

உமிழ் நீரில் உள்ள மிகுதியாக அமிலத்தை வெற்றிலையுடன் உண்ணும் போது சுண்ணாம்பு அதைச் சமப்படுத்தி விடுகிறது. வெற்றிலையில் அடங்கியுள்ள பச்சையம் Chlorophyll பற்களுக்குப் பலம் ஊட்ட வல்லது.

இந்தியாவில் 13 மாநிலங்களில் 41 Hectare பரப்பில் வெற்றிலை பயிரிட ப்படுகிறது.

திருமணக் காலத்தில் கணவன் மனைவிக்குப் பெண்ணின் சகோதரன் தாம்பூலம் மடித்துக் கொடுக்க வேண்டும்.என்கிற விதியை வேதங்கள் குறிப்பிடுகின்றன.

தமிழ் இலக்கியத்தில் வெற்றிலையை அடகு, மெல்லடகு,அடைசாகம் பாசிலை திரையல் ,பாக்கிலை மெல்லிலை என் பெயர்களில் அழைத்தனர்.

சங்க காலத்தில் வெற்றிலயோடு பாக்கும் சேர்த்து உண்ணும் பழக்கம் இருந்தது என்பதைச் சிலப்பதிகாரம் மூலம் அறிய முடிகிறது.

மதுரைப் புரஞ்சேரியில் கோவலன் தங்கிய பொழுது கண்ணகி அவனுக்கு வெற்றிலை மடித்துக் கொடுக்கிறாள்.

அம்மன் திரைய லோடு அடைக்காய் ஈந்து என இளங்கோ அடிகள் குறிப்பிடுகிறார்.

பாசிலைத் திரையலும்

பனிதமும் படைத்து என மணிமேகலை குறிப்பிடுகிறது.

கும்பகோணம் வெற்றிலை மிகவும் புகழ் பெற்றது .காரம் இல்லாமலும் சப்பென்று இல்லாமலும் இருக்கும்.இந்த வெற்றிலையை மெல்லுபவர்களுக்கு ஒரு சிறப்பு உணர்ச்சியை எழுப்பும். திண்டுக்கல் வெற்றிலை சின்னதாக இருக்கும்.

ற்றிலையுடன் சேரும் மூணாவது பொருள் சுண்ணாம்பு Calcium Oxide (CaO) நீருடன் HoH கலக்கும் போது கால்சியம் ஹைட்ராக்சைடு (Ca(OH)உண்டாகிறது. இதுவே சுண்ணாம்பு ஆகும்.

வெற்றிலை பாக்குடன் கல் சுண்ணாம்பு அல்லது முத்துச் சுண்ணாம்பு போடுவது தான் சிறப்பு.

முத்துச் சுண்ணாம்பை நீரில் கொடுக்க வாத ரோகமும் , நெய்யில் கொடுக்க, வெப்பமும், மோரில் கலந்து கொடுக்கப் பித்த ரோகங்களும் நீங்கும்.

இந்தச் சுண்ணாம்பு,வெற்றிலை களிபாக்கு,கொட்டைப்பாக்கு சேர்ந்து பயன்படுத்தினால் பித்த உபாதைகள் நீங்கும் , பல் இறுகும்,காசம் ,மந்தம், விக்கல் முதலிய நோய்கள் நீங்கும்.உடல் உரம் பெறும்..

அந்தக் காலத்தில் கணவனுக்குச் சாப்பிட்டவுடன் மனைவி வெற்றிலை மடித்துக் கொடுத்து நாம் பார்த்துருப்போம்.

வெற்றிலைக்கு நரம்பில் விஷம். எனவே கொழுந்து வெற்றிலையைச் சுத்தப்படுத்தி மிதமான சுண்ணாம்பு தடவி களிப்பாகு அல்லது

கொ ட்டைப்பாக்குக் கொடுப்பது வழக்கம்.அப்படியே மனைவி தானும் மென்று நாக்கை பார்த்துக் கொள்வாள். நாக்குச் சிவந்திருந்தால் அதற்கு உன் மேல் கணவன் ஆசையாக இருக்கிறான் என்று பெரியோர்கள் சொல்வதுண்டு

.எனக்குத் தெரிந்து 85வயது பாட்டி வெற்றிலை போட்டுக்கொண்டு இருந்தார். அவருக்கு எந்த மூட்டு வலியும் வந்தது கிடையாது.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள அக்ரஹாரத்தில் பொதுவான வீட்டில் சீட்டு கச்சேரி நடைபெறும். வெற்றிலைதான் அங்குப் பிரதானம்.

அந்தக் காலப் பெண்மணிகளுக்குத் தினமும் வெற்றிலை போட்டுக் கொண்டு வந்த்ததால் கால்சியம் சத்து நிறையக் கிடைத்தது. அவர்களுக்கு எந்த மூட்டு வலியும் வந்தது இல்லை

இனியாவது நாம் மருத்துவக் குணம் நிறைந்த வெற்றிலை போடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வோமா?.

.