ருக்கு, காபி கொடேன் என கேட்ட அய்யாசாமிக்கு கிடைத்தது என்னவோ ருக்குவிடமிருந்து திட்டுதான்.
ஆமாம்,உங்களுக்கு வேளைவேளைக்கு காபி, சாப்பாடு என பண்ணிப்போடறதிலே என் வாழ்க்கை பூரா கழிஞ்சுடும் போலிருக்கு,என் மனதிற்குப் பிடித்ததை செய்ய முடியறதா ? என புலம்பினாள் ருக்கு.
உன்னை என்ன கட்டிப்போட்டா வச்சியிருக்கேன்
எத்தனை சுதந்திரம் கொடுத்திருக்கேன் தெரியுமோ ?! என்றார் அய்யாசாமி
என்னது கொடுத்திருக்கேளா ? இதுவே ஆதிக்கம்தானே ?
உங்கிட்டே வம்பிற்கு வரலையாக்கும்! எது சரின்னு படறதோ தாராளமாக செய் என்று சொன்னவர் சற்று யோசித்து,
அதிலேயும் அதிகாரமா என கேட்பாய், நானும் உங்கூடமாட இருந்து உதவிகள் செய்யறேன் என்றதும், இதுதான் அய்யாசாமி எங்களுக்கு வேணும் என்றாள் ருக்கு.
என்ன செய்யப்போறதா உத்தேசம் ?
பள்ளி மாணவர்களுக்கு டியூசன் எடுக்கலாம்னு இருக்கேன் என்றாள் ருக்கு.
கரெக்ட், பெற்ற அறிவினைப் பிறருக்குத் திரும்பக் கொடுப்பதுதான் அதன் பயன் என யாரோ சொல்லியிருக்கா...யாரு ? விழித்தார்.
யோசிச்சுண்டே 8, 9,10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டியூசன் எடுக்கப்படும் என்று போர்டு பண்ணி வாசலில் மாட்டிடுங்கோ என்றாள், சரி ஆகட்டும் என்றார் அய்யாசாமி.
வளர்ந்து வரும் நகர்ப்பகுதி அது என்பதால் இரண்டே நாட்களில் முப்பதிற்கும் மேற்பட்ட தாய்மார்கள் வந்து பிள்ளைகளுக்காக விசாரித்துச்சென்றனர். அனைவரிடமும் அலைபேசி எண்களைப் பெற்றுக்கொண்ட ருக்கு வாட்ஸ்ஆப்பில் தகவல் பறிமாறுவதாக கூறி அனுப்பிவைத்தாள்.
பார்த்தியோன்னோ?! போர்டு வச்சது யாரு? என்று பெருமை பீற்றிக் கொண்ட அய்யாசாமி, இத்தனை பேரை எப்படி ருக்கு சமாளிக்கப் போகிறாய் எனக் கேட்டார்.
எழுத்துத்தேர்வும் நேர்முகத்தேர்வும் கட்டாயம் உண்டு என்றாள்.
பசங்களுக்கா ? பாவம் அதுகள் என்ற அய்யாசாமியிடம்
இல்லை பெற்றோர்களுக்கு என்றாள் ருக்கு.
ஆஹா....ஏதோ வித்தியாசமாய் யோசிக்கிறாள் என்பது மட்டும் தெரிந்தது அய்யாசாமிக்கு.
இன்னொரு உபகாரம் பண்ணணும் நீங்கள் என்றாள் ருக்கு
அதென்ன ?
5 கேள்விகள் தயார் பண்ணி இருக்கிறேன், டைப் பண்ணி எடுத்துண்டு வாங்கோ என்று அனுப்பினாள் ருக்கு
1. தந்தையின் படிப்பு, தொழில் மற்றும் வருமானம் என்ன ?
தாயின் படிப்பு தொழில் மற்றும் வருமானம் என்ன ?
2. உங்களுக்குப்பிடித்து தொடர்ந்துப் பார்க்கின்ற தொலைக்காட்சித் தொடர்கள் ஏதேனும் ஐந்து.
3.பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் இருக்கிறீர்களா ? எவற்றில் அதிக நேரம் பயணம் செய்வீ்ர்கள்.
4. உங்கள் பிள்ளைகள் கடினம் என நினைக்கும் பாடம் எது ?
5. உங்கள் பிள்ளைகளை டியூசனுக்கு சேர்க்க ஒரு பாடத்திற்கு எத்தனை ரூபாய் மாதத்திற்கு பீஸாக எனக்கு கொடுப்பீர்கள். என ஐந்து கேள்விகள் தயாராகின.
தேர்வு நாளன்று வந்த பெற்றோர்கள் எண்ணிக்கை ஐம்பதை தாண்டியதைக் கண்ட ருக்குவிற்கு கொஞ்சம் சங்கடமாகத்தான் இருந்தது. இருந்தாலும் நல்ல விஷயம்தானே செய்யப்போகிறோம் என தைரியமும் வந்தது.
“நன்றாக படிச்சவங்களாம்! நல்லாவே சொல்லிக் கொடுப்பாங்களாம்!
என்றும், முகத்தைப் பார்த்தாலே தெரிகிறது சரஸ்வதிகடாட்சம் என தாய்மார்கள் பேசியதையெல்லாம் கேட்டுக்கொண்டே சென்ற அய்யாசாமி சுற்றி வந்து சிலருக்கு தேர்வில் உதவிகளும் செய்தார். “
பாஸ் மார்க் எவ்வளவு மாமா என கேட்டவர்களிடம், யாரு அதிகமாக மார்க் எடுக்கிறாளோ அவாளுக்குத்தான் முன்னுரிமை, அதானே உலக வழக்கம் என்றார்.
ஒரு வழியாக தேர்வு முடிந்தது.முடிவினை அரை மணிநேரத்தில் சொல்லிவிடுகிறேன் என்று அனைவரின் விடைத்தாளோடு தனி அறைக்குச் சென்றாள் ருக்கு.
சரியாக அரை மணிநேரத்தில் வந்த ருக்கு, முடிவினை தெரிவிக்கத்
தொடங்கினாள்.
1.குறைந்த சம்பளத்தில் வேலைப்பார்க்கும் கணவன்,மனைவியின் பிள்ளைகள்.
2.சிங்கிள் பேரண்ட் பிள்ளைகள்.
3. டீவியே இல்லாத வீடு, சீரியலே பார்க்காத அம்மாவின் பிள்ளைகள்.
4. குழந்தைக்கு எந்த பாடம் கடினம் என தெரிந்து குறிப்பாக எழுதியவர்களின் பிள்ளைகள்
5. குறைந்த தொகையாக ஒரு பாடத்திற்கு நூறு ரூபாய் மட்டுமே தருவதாகச் சொன்னவர்கள் ஆக மொத்தம் பத்து மாணவர்களை மட்டும் தேர்வுச்செய்திருந்தாள் ருக்கு. இவர்களுக்கு விலையில்லாமல் நான் பாடத்தினை சொல்லித் தருகிறேன் என்றவள், கணவன் மனைவி இருவம் படித்து, நல்ல வருமானம் வருகின்ற வேலையில் இருந்துக்கொண்டு வீட்டிற்கு வந்தபின்பும் பிள்ளைகளை கவனிக்காமல் மொபைல், தொலைக்காட்சி சீரியலில் தொலைந்துப் போவதற்காகவே அதிகத் தொகை தர முன் வந்தவர்களுக்கும், தனது பிள்ளகளின் எதிர்காலம் பற்றி கவலையில்லாதவர்களுக்கும், இங்கு அனுமதியில்லை..என திருப்பியனுப்பினாள்.
அப்ப அதிகம் மார்க் எடுத்தவாளெல்லாம் தேர்வாகலையா ? கேட்டார் அய்யாசாமி
அவாளெல்லாம் பெயில், குறைந்த மார்க் எடுத்தவாதான் பாஸ் என்றாள் ருக்கு.
கேள்விகளை அவுட் பண்ணியும் புண்ணியமில்லையே என புலம்பினார் அய்யாசாமி.
தெரியும்ணா... நீங்க எந்தெந்த மாமிக்கு சொல்லிக்கொடுத்தேள்னு, கொஞ்சம் உள்ள வரேளா ? என கூப்பிட்டாள் ருக்கு.
Leave a comment
Upload