அன்று காலை மணி 10.30 இருக்கும். லாவண்யா அப்பொழுதுதான் பேங்க் கவுண்டரிலிருந்து பணத்தை எண்ணி வாங்கிக் கொண்டிருந்தாள்.அன்று மாலை அவளுக்கு மேரேஜ் ரிசப்ஷன் இருக்கு. அந்த செலவுக்குத்தான் இப்ப பணம் எடுக்க பேங்குக்கு வந்தாள்.கேஷிரியருக்கு பின்னால் இருந்த சிசிடிவி கேமராவை எதேச்சையாக பார்த்தாள். அதிர்ச்சி அடைந்தாள்.
மரத்தின் கீழே நிழலுக்காக நிறுத்தி வைத்திருந்த அவளுடைய ஸ்கூட்டியை எவனோ சுட்டு விட பார்க்கிறான். அவனும் 10 நிமிடமாக வண்டியின் சீட்டு மேல் இப்படியும், அப்படியுமாக உட்கார்ந்து கொண்டு ஹேண்டில் பேரை இப்படியும், அப்படியுமா திருப்பி சைடு லாக்கை உடைத்து வண்டியை எடுக்க பார்க்கிறான்.
’அப்படி சைடுலாக்க உடைத்தால் கூட வண்டியை தள்ளிக்கொண்டுத்தானே போக வேண்டும்? சாவிதான் தன்னிடம் இருக்கிறதே?’ அப்பாவியாக நினைத்தவள் கேஷியர் கூப்பிடவே வந்த வேலையை பார்த்தாள்.அமவுண்ட் அதிகம்.தன் எதிர்கால கணவன் வினோத்தை லாவண்யா சேஃப்டிக்கு பேங்குக்கு வரச்சொல்லி இருந்தாள். இதுவரை காணவில்லை.ஒரு வேளை மறந்து விட்டானோ? அப்படியெல்லாம் செய்ய மாட்டானே?ஒரு வேளை வெளியில் காத்துக் கொண்டு இருக்கிறானோ?
அடுத்த நிமிடம் அந்த திருடன் ஏதாவது போலி சாவி வைத்திருப்பானோ? என எண்ணி கலக்கமடைந்தாள் லாவண்யா. இந்த வேலையை பாதியில் விட்டுப் போகவும் முடியாது. ஒரு வழியாக வேலையை முடித்துக் கொண்டு கூட்டத்தை கீறி கொண்டு வங்கிக்கு வெளியே வந்தாள் லாவண்யா.
வண்டியை விட்ட இடத்தில் காணவில்லை.அதிர்ந்து போனாள் லாவண்யா.நாளைக்கு கல்யாணம்.இன்னிக்கு இப்படியாகி விட்டதே?. ரொம்பவும்தான் உடைந்து போனாள். கையில் இருந்த பணப்பையை கெட்டியாக மார்போடு அணைத்துக் கொண்டாள்.
அன்று மாலை லாவண்யாவுக்கும் வினோத்துக்கும் திருமண வரவேற்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஏராளமான நண்பர்கள், உறவினர்கள வந்திருந்து விழாவிற்கு பெருமை சேர்த்தார்கள். திடீரென்று வாசலில் போலீஸ் ஜீப் ஒன்று வந்து நின்றது. லாவண்யாவும் வினோத்தும் கலக்கமடைந்தார்கள். சிறிது நேரத்தில் உள்ளூர் டி.எஸ்.பி., ஒரு மலர்ச்சென்டோடு அவர்களிடம் வந்து தன்னுடைய வாழ்த்துக்களை கூறினார்.
எல்லோரும் அங்கு என்ன நடக்கிறது? என்று குழம்பிக் கொண்டிருந்தார்கள். மொளனத்தை கலைத்த டிஎஸ்பி சொன்னார்,’மணமக்கள் இன்று காலை காட்டிய திருடன் எங்களுக்கு அப்ரூவராக மாறிவிட்டான். எங்கெங்கு திருடி இருக்கிறான். யார் எல்லாம் கூட்டாளிகள் யார்?’ என்பதை எல்லாம் விவரமாகச் சொல்லி விட்டான். எங்கள் துறையின் இந்த சாதனைக்கு இவர்கள்தான் காரணம்.விரைவில் எங்கள் காவல் துறையின் சார்பில் இவர்களுக்கு விருது வழங்கப்படும்’என்று சொல்லி போஃட்டோவிற்கும் போஃஸ் கொடுத்து விட்டு சகாக்களுடன் புறப்பட்டார்.
அன்று காலை மணி 11 இருக்கும்…..
அப்போதுதான் லாவண்யாவின் போஃன் சினுங்கியது .அழைத்தது வினோத்துதான். அருகிலிருந்த ஓட்டலின் பேரைச் சொல்லி பதட்டப்படாமால் வரச்சொன்னான்.சொன்னபடி சென்றாள்.அவனுக்கு எதிரில் அவள் சிசிடிவியில் பார்த்த டிப்டாப் திருடன் உட்கார்ந்திருந்தான்.
’வா லாவண்யா.சார் கிட்ட ஒரு ஸ்கூட்டி இருக்காம். என் கிட்ட இருக்க சாவி கூட அதுக்கு பொருத்தமா இருக்கு.அதத்தான் உனக்கு வெல பேசிட்டு இருக்கேன்.’சொன்னது வினோத்.லாவண்யா நெலமய புரிந்து கொண்டாள்.ஆளுக்கொரு காஃபிய குடிச்சாங்க.
’வண்டிய பார்க்கலாமா?’ என்று கேட்டுக் கொண்டே லாவண்யாவும் வினோத்தும் டிப்டாப் பேர் வழியுடன் ஓட்டலுக்கு வெளியே வந்தார்கள். அப்போது வினோத்தின் போன் சிணுங்கியது.‘சார், ஹோட்டலுக்கு வெளியே தான் இருக்கேன். வாங்க’ என்று சன்னக் குரலில் சொன்னான் வினோத்.
உடனே அங்கே வினோத்தின் இரண்டு போலீஸ் நண்பர்கள் வந்தார்கள். அவர்களைப் பார்த்து இந்த டூவீலர் திருடன் அதிர்ச்சி அடைந்தான்.அவனுடைய சட்டை காலரை போலீஸ் பிடித்தது. அவனை அருகில் இருந்த போலீஸ் ஜீப்பில் ஏற்றி வைத்து வழியனுப்பியது.நடந்ததையெல்லாம் புரிந்து கொண்ட லாவண்யா அவனைப் பார்த்து புன்முறுவல் பூத்தாள்.
இதையெல்லாம் மேரேஜ் ரிசப்ஷன்ல நின்று கொண்டு நினைவில் அசை போட்டுக் கொண்டிருந்த லாவண்யா, வாழ்க்கையில் தனக்கும் ஒரு விருது வரப்போகிறது என்னும் பெருமிதத்தில், சபையென்றும் பாராமல் வினோத்தை அன்புடன் அனைத்துக் கொண்டாள்.
Leave a comment
Upload