தொடர்கள்
பொது
உலகின் 8 முக்கிய நிகழ்வுகள் -தில்லைக்கரசிசம்பத்

20241029153434192.jpg

1)தங்கச்சுரங்கத்தின் மேல் அமர்ந்திருக்கும் ஜப்பான்

குத்துமதிப்பாக $26,290,780,000 மதிப்புள்ள அடர் மாங்கனீஸ் முடிச்சுகள் மற்றும் மில்லியன் கணக்கில் மெட்ரிக் டன் எடையுடைய கோபால்ட் , நிக்கல் என அரியவகை உலோகங்கள் ஜப்பானின் நாட்டின் நிலத்திற்கு அடியில் இருப்பதாக தற்போது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இந்த மதிப்புமிக்க உலோகங்கள் பல்வேறு தொழில்நுட்ப கருவிகளின் உதிரி பாகங்கள் செய்வதற்கும், மின்சார வாகனம் (EV) பேட்டரிகள், ஜெட் என்ஜின்கள், எரிவாயு டர்பைன்கள்மற்றும் இரசாயன தொழிற்சாலைகளிலும் பயன் படுகின்றன. ஜப்பான் வருங்காலத்தில் இதை மட்டுமே கொண்டு இன்னும் வளம் பெற்று வளர்ச்சியுரும் என கணிக்கிறார்கள். ஜப்பானுக்கு மனிதர்கள் ஹிரோஷிமோ நாகசாகி என்கிற கொடூர தண்டனை கொடுத்திருந்தாலும் இயற்கை அன்னை அக்காயத்திற்கு மருந்தாக தனது வளங்களை அள்ளிக்கொடுத்திருக்கிறாள்.

2)மனித குழந்தையை வயிற்றில் சுமக்கும் பூனைப்பெண் ரோபாட்.

சுமார் 5 அடி 8 அங்குலம் உயரத்தோடு 55 கிலோ எடைக்கொண்ட பெண் ரோபாட்டை எலான் மஸ்க் உலகிற்கு அறிமுகம் செய்யவிருக்கிறார். இதை சும்மா “ வாம்மா மின்னல் “ என கூப்பிட்டால் போதும் “என்னங் மாமா” என டாண் என்று முன்னே வந்து நிற்கும். ஏற்கனவே 3 முறை திருமணம் செய்து தோல்வியில் முடிந்த அனுபவமோ என்னவோ இந்த ரோபாட்டுக்கு எரிச்சல் படுவது, முகத்தை சுழிப்பது, திட்டுவது என எதிர்மறை குணங்கள் இல்லாமல் முழுவதும் நேர்மறையாக உருவாக்கியுள்ளார் நமது எலான் மஸ்க். மிகவும் மென்மையான, உத்தரவுக்கு உடனே கீழ்படியும் ரோபாட்டாக,சமைக்க, வீட்டு வேலை பார்ப்பது, முதியோர்களை பராமரிப்பது என பல வேலைகளை செய்யும் இந்த ரோபாட்டுகளை உங்கள் காதலியாக, வாழ்க்கை துணையாகவும் வைத்துக்கொள்ளலாம் என்கிறார் எலான் மஸ்க். மனைவிகள் “நாங்கள் என்ன வெறும் குழந்தை பெறும் இயந்திரமா ?” என கணவர்களிடம் சண்டைப்போடுவார்கள். இப்போது நிஜமாகவே இவ்வகை ரோபோக்கள் மனித குழந்தையை வயிற்றில் 9 மாதமும் சுமந்து பெற்று தரும் என மஸ்க் கூறுகிறார். மரபணு ரீதியாக கருவில் இருக்கும் குழந்தையின் புத்திசாலித்தனம் போன்ற குணங்களை தூண்டுவதும், மரபணு நோய்கள் இருந்தால் அவைகளை களைவதும் இந்த ரோபாட்டுகளால் செய்ய முடியுமாம். இந்த பூனைப்பெண் ரோபாட்டுகள் 2026 ல் பயனுக்கு வரும் என சொல்லப்படுகிறது. நடப்பு காலத்தில் இளம்பெண்களுக்கு திருமணம் செய்வதில் ஈடுப்பாடு குறைந்துக்கொண்டே வர, அதே நேரத்தில் திருமணமான பெண்கள் விவாகரத்து செய்வதும் அதிகரித்திருக்கிறது. கூட்டிக்கழித்து பார்த்தால் கடைசியில் ஆண்கள் இந்த ரோபாட்டுகளுடன் தான் குடும்பம் நடத்துவார்கள் போலிருக்கிறது. உலகம் போகும் திசையை பார்த்தால், எலான் மஸ்க் செவ்வாய் கிரகத்துக்கு போவதற்கு முன்னரே பூமியின் சோலியை மொத்தமாக முடித்து விட்டு தான் போவார் என தாராளமாக நம்பலாம்.

3) அந்தரிக்ஷா அபியாஸ் 2024.

விண்வெளி பயிற்சி (Antariksha Abhyas ) என பொருள்படும் இந்த திட்டம் விண்வெளியில் நம் நாட்டு பாதுகாப்பு மற்றும் ராணுவ நடவடிக்கைகளில் இந்தியாவின் விண்வெளித் திறனைஒருங்கிணைக்க இந்திய அரசு செயல்படுத்தபோகும் ஒரு திட்டம் ஆகும். விண்வெளியில் ஏற்கனவே வல்லரசுகள் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் இந்தியாவின் இந்த முயற்சி நாட்டின் பாதுகாப்பிற்கு வலு சேர்க்கும் என கூறப்படுகிறது. இந்த பயிற்சியில் ராணுவம், கடற்படை மற்றும்விமானப்படையுடன் விண்வெளி பாதுகாப்பு நிறுவனம் மற்றும் அதன் தொடர்புடைய பிரிவுகள் பங்கேற்பார்கள்.

வளர்ந்து வரும் விண்வெளி ஆய்வுடன் , இந்திய இராணுவத்தின் தொழில்நுட்பங்களை ஒருங்கிணைப்பது இந்திய ராணுவத்திற்கு கூடுதல் பலனும், பலமும் அதிகரிக்கும். “ என இந்திய அரசு கூறுகிறது. எதிர்காலத்தில் விண்வெளியிலும் இந்தியா உலகின் தவிர்க்க முடியாத சக்தியாக உருவாக இத்திட்டம் முக்கியமானதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

4) இனி டெல்லி சான்ஃபரான்சிஸ்கோ பயணம் 30 நிமிடத்தில்..

கவிஞர் கண்ணதாசன் “ காலை ஜப்பானில் காஃபி.. மாலை நியூயார்க்கில் காபரே.. இரவில்தாய்லாந்தில் ஜாலி..” என 45 வருடங்கள் முன்பு பாடியதை எலான் மஸ்க் இன்று உண்மையாக்கி விட்டார். ஆம்.. பூமியின் எந்த நகரம் விட்டு நகரம் வேண்டுமானாலும் அதிகப்பட்சம் வெறும் 1 மணி நேரத்தில் சென்று விடலாம். எலானின் ஸ்டார்ஷிப்பில் ஒரே நேரத்தில் 1000 பயணிகள் பிரயாணம் செய்யலாம். பூமியின் சுற்றுப்பாதையை ஒட்டியவாரே இந்த ஸ்டார்ஷிப் செல்லும். இன்றைய காலக்கட்டத்தின் உலகிலேயே சக்தி வாய்ந்த மனிதரான எலான் மஸ்க்கால் செய்ய முடியாத விஷயங்களே இவ்வுலகில் கிடையாது என்ற நிலைமைக்கு வந்தாகி விட்டது.

5) காலநிலை மாற்ற அழிவை எதிர்ப்பதில் இந்தியாவுடன் இணைய பாகிஸ்தான் விண்ணப்பம்

கடந்த சில வாரங்களாக இந்தியாவின் டெல்லி போன்ற வட மாநிலப்பகுதிகள் கடுமையான காற்று மாசால் பாதிக்கப்பட்டிருக்கின்றன என செய்திகள் வெளியாயின. இந்தியாவை விட பாகிஸ்தானின் பஞ்சாப்,பெஷாவர், முல்தான், கைபர் பக்துன்க்வா போன்ற மாகாணங்களில் காற்று மாசின் அளவு 2000 ஆனது என அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அப்பகுதிகளில் கடுமையான ஊரடங்கு உத்தரவை பாகிஸ்தான் அரசு அமல்படுத்திஉள்ளது. தொழிற்சாலைகள் வணிக வர்த்தகங்கள், பள்ளி, கல்லூரிகள் முழுமையாக மூடப்பட்ட நிலையில் அலுவலகங்கள் 50% இயங்கிக்கொண்டிருக்கின்றன இரு வாரங்களுக்கு முன் அஜர்பைஜானின் பாகுவில் COP29 என அழைக்கப்படும் ஐக்கியநாடுகளின் காலநிலை மாற்ற மாநாடு நடைபெற்றது. அக்கூட்டத்தின் இறுதியில் “நிதி உதவி அளியுங்கள். இல்லையெனில் மனிதகுலத்திற்கு காலநிலையால் உண்டாகப்போகும்பேரழிவை எதிர்கொள்ளுங்கள்” என COP29 உலகிற்கு கடுமையான எச்சரிக்கை விட்டிருக்கிறது. பாகிஸ்தானும் அக்கூட்டத்தில் கலந்து கொண்டப்பின் காற்று மாசு விவகாரத்தில் இந்தியாவுடன் கைக்கோர்த்து இச்சவாலை எதிர்க்கொள்ள வேண்டி இந்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

6) நிலவில் ஆக்சிஜன் குழாய் பதிப்பு.

நிலவில் மனிதர்கள் வாழ, பல ஆராய்ச்சிகள் வெற்றிகரமாக நடந்து வரும் நிலையில் தற்போது நிலவின் தென்துருவத்தில் ஆக்சிஜன் குழாய்களைப் பதிக்க திட்டங்கள் தீட்டி வருகிறது நாசா. பூமியிலிருந்து நிலவுக்கு ஆக்சிஜன் கொண்டுப்போவது பெரும் செலவு மட்டுமின்றி அதிக ஆபத்தும் அடங்கி உள்ளது. நிலவுக்கு வளிமண்டலம் என பெரிதாக ஒன்றும் கிடையாது. பெரும்பாலும் ஹீலியம் , நியான் , ஆர்கான் மற்றும் ஹைட்ரஜன் தான் இருக்கிறது. அதனால் நிலவின் மண் மற்றும் மணலுக்கு அடியில் உள்ள கெட்டியான பாறையிலிருந்து மற்றும் தென் துருவத்தில் உறைந்திருக்கும் பனியிலிருந்து ஆக்சிஜனை பிரித்தெடுக்கலாம் என நாசா கருதுகிறது. ஆக்சிஜனை கொண்டு செல்லும் குழாயை கூட நிலவின் மண்ணில் அபரிதமாக கிடைக்கும் அலுமினியத்தை வைத்தே செய்யலாம் என யோசனை வைத்திருக்கிறது நாசா. சீக்கிரமே நிலவில் படுத்துக்கொண்டு வானில் பூமியை ரசிக்கலாம்.

7) நமீபியாவின் நிலத்தடி நீரை விஷமாக்க துடிக்கும் ரஷ்யா.

நமீபியா நாட்டில் கலஹரி பாலைவனத்தின் அடியில் பரந்து விரிந்திருக்கும் நிலத்தடி நீர் பாதை நமீபியா நாட்டில் மட்டுமல்லாமல் பக்கத்து போஸ்ட்வானா மற்றும் தென்ஆப்பரிக்கா வரை விரிவடைந்திருக்கிறது. இந்நிலையில்

அங்கே அமைந்திருக்கும் லியோநார்ட்வில்லே கிராமத்தில் திடீரென ஒரு நாள் கடைகளில், வீதிகளில் உலகின் முக்கிய யுரேனிய உற்பத்தி நிறுவனமான “ரோசடாம்” என்கிற ரஷ்ய அணுசக்தி நிறுவனம் பெயர் அச்சடித்த சுவரொட்டிகள் புதிதாக முளைத்தன. விஷயம் என்னவென்றால் இந்த கிராமத்தின் அடியில் தான் அணுஉலையின் எரிப்பொருளான யுரேனியம் எக்கச்சக்கமாக இருக்கிறது. அதற்காக இங்கே நுழைய இந்த ரஷ்ய நிறுவனம் முயற்சிக்கிறது. இந்த நிறுவனம் பூமிக்கு அடியில் கந்தக அமிலம் (sulphuric acid ) கலந்த கரைசலை செலுத்தி யுரேனியத்தை பிரிக்கும் முறையை பின்பற்றுகிறது. மேலும் யுரேனியத்தை குளிர்விக்க அதிகளவு நீர் தேவைப்படும். இந்த நிறுவனத்தை உள்ளே விட்டால் நமீபியாவின் தென்கிழக்கு பகுதியின் நிலத்தடி நீர் முழுவதும் பாழாகி மனிதர்கள்,கால்நடைகள் குடிக்க, விவசாயம் செய்ய நீர் லாயக்கின்றி போகும் என மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். “நமீபிய இளைஞர்கள் எல்லாம் போதை குடி என அடிமையாகி ஒருவருக்கு ஒருவர் சண்டைப்போட்டுக்கொண்டு சாகிறார்கள். ரஷ்ய நிறுவனம் வந்தால் அவர்கள் பிழைப்புக்கு ஒரு வழி ஆகும்” என லியோனார்ட்வில்லே கிராமத்தின் பஞ்சாயத்து தலைவி கூறுவதில் உண்மை இருக்கிறது. ஆனால் மில்லியன் ஆண்டுகளாக இந்த பூமியடியில் துளித்துளியாக சேமிக்கப்பட்ட அமிர்தம் போன்ற நிலத்தடி நன்னீரை மனிதனின் சுயநலத்துக்காக விஷமாக்குவதா? என்ற தார்மீக கேள்வி எழுகிறது.

இதற்கு அனுமதி அளிக்க நமீபிய அரசு நீண்டக்காலமாகவே தயங்கி கொண்டிருக்க, யுக்தியை மாற்றிய ரஷ்ய நிறுவனம் தற்போது நமீபிய அமைச்சர்களை அடிக்கடி ரஷ்யாவுக்கு அழைத்து நன்கொடை (!) , விருந்து என அளித்து மனதை மாற்ற முயற்சி எடுத்துக்கொண்டிருக்கிறது. ஒரு ஏழை தேசத்தை அதன் வளத்துக்காக ஒரு வல்லரசு சதி திட்டங்களோடு அங்கே களம் இறங்க முயற்சிப்பதை நமீபிய அரசு தடுக்கும் என நம்பலாம்.

8) அல்சீமர் வியாதியை வருவதை தாமதப்படுத்த முடியுமா?

அதிகரிக்கும் மக்கள்தொகை மற்றும் வயதானவர்களின் எண்ணிக்கையால் 2050 ல் உலகில் டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்டவர்கள் 152.8 மில்லியன்கள் இருப்பார்கள் என ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது.அதில் 70% அல்சீமர் வியாதி வந்தவர்களாக இருப்பார்கள். இந்த மூளை அழற்சிக்கு காரணமான, அங்கே படிந்திருக்கும் மைக்ரோக்லியா மற்றும் ஆஸ்ட்ரோசைட்டுகளை (microglia and astrocytes) குறிவைத்து செயல்படும், மூக்கின் வழியே உள்ளிழுக்கும் ஸ்ப்ரே மருந்தை அமெரிக்காவில் கண்டுப்பிடித்திருக்கிறார்கள். இந்த மருந்தை உபயோகித்தால் வயதானவர்களுக்கு வரும் அல்சீமர் வியாதியை 10 வருடமாவது தாமதப்படுத்தலாம் என்கிறார்கள். இப்போதெல்லாம் சர்க்கரை,இதய நோய் என பல வியாதிகளுடன் தான் வயோதிகம் அடைகிறார்கள். இதில் அல்சீமர் போன்ற வியாதிகளும் வருவது கொடுமை. இம்மாதிரி கண்டுப்பிடிப்புகள் மனித குலத்துக்கு வரமே!