தொடர்கள்
அரசியல்
பாட்டாளி மக்கள் கட்சியை எதிர்க்க தயாராகும் திமுக-விகடகவியார்

20241029150558661.jpg

"எட்டாவது வருஷத்தில் விகடகவி, இந்தாருங்கள் முந்திரி கேக் சாப்பிடுங்கள் "என்று கொண்டு வந்து வைத்தார் ஆபீஸ் பையன். வாழ்த்து சொல்லிவிட்டு, முந்திரி கேக்கை வாயில் போட்டு மென்றார் விகடகவியார்.

"காலச்சக்கரம் ரொம்ப பாஸ்ட் இப்போதான் ஆரம்பிச்ச மாதிரி தெரியுது எட்டு வருஷம் ஓடிச்சு" என்று சொல்லி விஷயத்துக்கு வந்தார்.

"பாட்டாளி மக்கள் கட்சி மீது குறிப்பாக டாக்டர் ராமதாஸ் மீது செம காண்டில் இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின் "என்று ஆரம்பித்தார் விகடகவியார்

. 'ஏன் என்ன ஆச்சு ? என்று நாம் கேட்டோம்.

"அமெரிக்க நீதிமன்றத்தில் இந்திய தொழிலதிபர் அதானி மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் அதில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெயரும் இருக்கிறது. இதை மின்சார வாரிய அமைச்சர் செந்தில் பாலாஜி உடனே மறுத்து விட்டார்

. ஜூலை 10-ஆம் தேதி சென்னை வந்த அதானி முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார்.

இது பற்றி முதலமைச்சர் விளக்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டிருந்தார் டாக்டர் ராமதாஸ்.

நவம்பர் 25-ஆம் தேதி ஒரு நிகழ்ச்சிக்காக முதல்வர் ஸ்டாலின் சோழிங்கநல்லூர் வந்த போது நிருபர்கள் அவரிடம் ராமதாஸ் அறிக்கை பற்றி கேள்வி கேட்டார்கள்.

அதற்கு அவர் "அவருக்கு வேற வேலை இல்லை, டெய்லி ஒரு அறிக்கை விட்டுக்கிட்டு இருப்பாரு இதுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை "என்று கோபமாக சொன்னார்.

இந்த விஷயத்தை டெல்லியில் தொலைக்காட்சியில் பார்த்த அன்புமணி ராமதாஸ் முக்கிய நிர்வாகிகளை தொடர்பு கொண்டு ஐயாவை ஸ்டாலின் அவமானப்படுத்தி விட்டார்.

இதைக் கண்டித்து போராட்டம் நடத்துங்கள். ஸ்டாலின் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் அவருக்கு எதிராக கருப்பு கொடி காட்டுங்கள் என்று உசுப்பி விட்டார்.

இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பாமகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி தரவில்லை. அதையும் மீறி அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய போது அவர்கள் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்" என்றார் விகடகவியார்.

"முதல்வருக்கு எதிராக கருப்பு கோடி காட்டுவார்களா" என்று நாம் கேட்க வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டத்தில் ஈடுபட்ட போது சுட்டுக் கொல்லப்பட்ட 21 சமூக நீதி தியாகிகள் மணிமண்டபத்தை முதல்வர் ஸ்டாலின் 28-ஆம் தேதி திறக்க இருந்தார்.

இந்த மணிமண்டபம் கோரிக்கை ராமதாஸ் வைத்தது அப்போது ஸ்டாலின் ராமதாஸ் இருவரும் இணக்கமாக இருந்தார்கள். அதனைத் தொடர்ந்து இதற்கு ஸ்டாலின் அனுமதி தந்தார்.

அதன் பிறகு ஸ்டாலினை விமர்சனம் செய்து டாக்டர் ராமதாஸ் நிறைய பேசி விட்டார்.

எனவே அவரை கிட்டத்தட்ட கண்டுகொள்ளாமல் இருந்தார் ஸ்டாலின்.

வன்னிய போராட்ட தியாகிகள் விழாவுக்கு ஆரம்பத்தில் டாக்டர் ராமதாஸையும் அழைப்பதாக இருந்தது. இப்போது மழை காரணமாக அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் என்று முதலமைச்சர்க்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சி தீவிரமாக இருப்பதால் அடுத்த நிகழ்ச்சி நடக்கும்போது டாக்டர் ராமதாசை அழைப்பார்களா என்பது சந்தேகம் தான்.

டாக்டர் ராமதாசை ஆளும் அரசு அழைக்காது என்று முடிவு செய்துவிட்ட பாட்டாளி மக்கள் கட்சி விழுப்புரத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் என்று வந்தாலும் அன்று கருப்புக்கொடி காட்ட திட்டம் போட்டு வைத்திருக்கிறது" என்றார் விகடகவியார்.

இந்த சர்ச்சையில் டாக்டர் ராமதாஸ் ஆதரவாக பாரதிய ஜனதா அறிக்கை வெளியிட்டது. எடப்பாடி கண்டு கொள்ளவில்லை.

டாக்டர் ராமதாஸுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டு இதன் மூலம் அவர்கள் இணக்கமாக வந்து விரைவில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ராஜ்யசபா பதவி காலம் முடிவடையும் நிலையில் இருக்கிறது. அவர் வந்து ராஜ்யசபா வாய்ப்பு கேட்டு அழுத்தம் தருவார் என்பதால் அதிமுக இந்த சண்டையை கண்டு கொள்ளவில்லை என்கிறது அதிமுக தரப்பு.

"சரி உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விஷயத்துக்கு வாரும் "என்று நாம் சொன்னதும்... நீர் முரசொலி பார்க்கவில்லையா

32 பக்கம் விசேஷ சிறப்பு இதழ் உதயநிதி ஸ்டாலினுக்காக வெளியிட்டு இருக்கிறார்கள்.

முதல்வருக்கு கூட அவர் பிறந்த நாளில் இந்த அளவுக்கு கௌரவம் கிடைத்ததாக தெரியவில்லை.

வருங்காலத்தில் அரசியல் முடிவு எடுக்கும் இடத்தில் இளையவர் தான் இருப்பார் இப்போதே அவரை தாஜா செய்து கொள்வோம் என்று மூத்த தலைவர்கள் அவரிடம் இணக்கம் ஆகிவிட்டார்கள்.

இவர்களுக்கெல்லாம் எதிர்காலத்தில் உதயநிதி ஸ்டாலின் வாய்ப்பு தருவாரா என்பது சந்தேகம் அவர் கணக்கே வேற என்கிறார்கள் இளைஞர் அணியினர் "என்று சொல்லிவிட்டு புறப்பட்டார் விகடகவியார்.