தமிழ்நாட்டில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள எட்டுக்குடி முருகன் கோவில் மிகவும் பழைமையானது. இங்கு முருகன், வள்ளி தெய்வானையுடன் மயில் மீதமர்ந்து அருள்பாலிக்கின்றார்.
முருகனின் அறுபடை வீடுகளைத் தவிரப் பிரசித்தி பெற்றது எட்டுக்குடி முருகன் கோயில். இங்கு முருகனைக் காணவரும் பக்தர்களின் மனநிலைக்கு ஏற்ப தன் உருவத்தை மாற்றிக்கொண்டு காட்சியளிக்கின்றார். அருணகிரிநாதரால் பாடல் பெற்ற ஸ்தலம் . இந்த கோயிலைச் சுற்றி எட்டுத் திசைகளிலும் சிவஸ்தலங்கள் சூழ்ந்துள்ளது.மேலும் அஷ்ட லட்சுமிகளும் வணங்கிய சிறப்பு இத்தலத்திற்கு உண்டு.
ஸ்தல புராணம்:
கந்த புராணத்தில் கூறியுள்ளபடி இங்கு அருள்பாலிக்கும் முருகன் சூரபதுமனை அழிப்பதற்கு முன்பாகத் தேவேந்திரனாகிய மயில் மீது ஏறி அமர்ந்துள்ள மூர்த்தமாகக் காணப்படுகிறார். அம்பறாத் தூணியிலிருந்து (அம்பறாத் தூணி என்பது அம்புகளை வைத்திருக்கும் குழாய் போன்ற அமைப்புடைய கொள்கலன் ஆகும்) அம்பை எடுக்கும் நிலையில் உள்ள வீரசௌந்தர்யம் உடையவராக வீற்றிருக்கும் வேலாயுதக் கடவுள்தான் இங்கு மூலவர். சூரபத்ம வதத்திற்கு முருகப்பெருமான் இங்கிருந்து ஒன்பது வீரர்களுடன் புறப்பட்டதாகக் கூறுகிறது தல புராணம்.
ஸ்தல வரலாறு:
முன்னொரு காலத்தில் இப்பகுதி, சோழ மன்னரால் ஆட்சி செய்யப்பட்டு வந்தது. நாகப்பட்டினம் அருகிலுள்ள பொருள் வைத்த சேரி (சிக்கல்) என்கிற ஊரில் இறைத்தன்மை கொண்ட சிற்பி ஒருவன் வாழ்ந்து வந்தான். அந்த சிற்பி ஒரு அற்புதமான முருகன் சிலையைச் செதுக்கினான். மிகுந்த அழகுடன் காணப்பட்ட அந்த முருகன் சிலையைக் கண்ட மன்னர், இதே போன்று இன்னொரு சிலையைச் சிற்பி செய்து விடக்கூடாது என எண்ண, சிற்பியின் கட்டை விரலை வெட்டி விட்டார். இந்த சிலை தான் தற்போது சிக்கல் கோவிலில் உள்ளது. இதனால் வேதனையடைந்த சிற்பி பக்கத்துக்கு ஊருக்கு வந்து, தனது விடாமுயற்சியால் மற்மொரு அற்புதமான முருகன் சிலையை வடித்தான். அந்த தெய்வீகமான அந்த சிலையில் இருந்து ஒளி வீசத் தொடங்கியது. அச்சிலையானது உயிர்த்துடிப்புடன் அமைந்து முருகனின் உடலில் அக்னி ஜுவாலையும் உண்டானது. முருகன் சிலையைச் செதுக்கிய கல்லிலேயே மயிலையும் செதுக்கி வடித்துக் கொண்டு இருந்தார். சிற்பம் முழுவதுமாக முடிவதற்குள் அச்சிலைக்கு உயிர் வந்து சிலையில் முருகன் அமர்ந்திருக்கும் மயிலானது பறக்கத் தொடங்கியது. இதனைப் பார்த்துக்கொண்டிருந்த குறுநில மன்னனான முத்தரசன் காவலாளிகளைப் பார்த்து அந்த மயிலை ' “எட்டிப்பிடி” என உத்தரவிட்டான். அதன் பிறகு அந்த மயில் அங்கேயே சிலையாக நின்று விட்டது. காலப்போக்கில் இந்த ஊரின் பெயரும் எட்டிப்பிடி என்பது ஏட்டுக்குடி என மருவியது.
ஸ்தல அமைப்பு:
பிரதான கந்தன் வளைவு நுழைவாயில் மூலமாக முருகப்பெருமான் சந்நிதிக்குச் செல்கிறது. முதலில் இங்கு ஒரு சித்தி விநாயகர் சந்நிதி காணப்படுகிறது. கருவறையில் வள்ளி, தெய்வானையுடன் மூன்று முகங்கள் மற்றும் பன்னிரண்டு கைகள் கொண்ட முருகன் கிழக்கு நோக்கி மயில் மீது அமர்ந்த நிலையில் அருள்காட்சி தருகிறார். எல்லாத் தலங்களிலும் முருகனின் வலப்புறம் மயிலின் தலைப்பகுதி இருக்கும். இங்கு மட்டும் மயிலின் தலைப்பகுதி இடப்புறமாக உள்ளது. சிற்பத்தின் முழு எடையும் மயிலின் கால்களால் தாங்கப்படும் வகையில் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. முருகன் சந்நிதிக்கு வலது புறத்தில் சௌந்தரேசுவரர் சந்நிதியும், இடது புறத்தில் ஆனந்தவல்லி அம்மன் சந்நிதியும் உள்ளன. சௌந்தரேசுவரர் சந்நிதிக்குத் தென்புறம் தட்சணாமூர்த்தி உள்ளார். பிரகாரத்தில் வலம் வரும்போது முதலில் வன்னி மரத்தடியில் பழங்கால சித்தர்களில் ஒருவரான வான்மீக சித்தருக்கு ஜீவசமாதி உள்ளது. அடுத்து தென்மேற்கில் கணபதி, ஜுரதேவர், சீனிவாச சௌந்திரராஜப்பெருமாள், ஆஞ்சநேயர், மனோன்மணி , ஐயப்பன், மகாலட்சுமி, நவகிரகங்கள், சனிபகவான், பைரவர் ஆகியோரும் உள்ளனர். பிரகார வடக்கில் முருகனுடன் சூரபத்மன் வதத்திற்குத் துணையாகச் சென்ற நவ வீரர்களின் திருவுருவமும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
ஸ்தல சிறப்புகள் :
இந்த கோயிலில் முருகனைக் குழந்தையாக நினைத்துப் பார்த்தால் குழந்தை வடிவிலும், இளைஞனாக நினைத்துப் பார்த்தால் இளைஞர் வடிவிலும் முதியவராக நினைத்துப் பார்த்தால் வயோதிக வடிவிலும், காட்சி தருவது இக்கோயிலின் தனிச்சிறப்புகளில் ஒன்று.
முருகன் சூரசம்ஹாரம் செய்ய இங்கிருந்து தான் புறப்பட்டதாக ஐதீகம் . அதனால் உக்கிரமாக இருந்த முருகனைப் பக்தர்கள் பாலபிஷேகம் குளிர்விக்கின்றனர். இங்கு முருகன் அமர்ந்துள்ள மயில் சிற்பத்துக்குத் தரையின் மீதுள்ள ஆதாரம் அதன் இரண்டு கால்கள் மட்டுமே. இங்கு முருகனின் முழு எடையும் மயிலின் கால்களால் தாங்கப்படும் வகையில் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.
திருவிழாக்கள்:
இங்கு சித்ரா பௌர்ணமி திருவிழா பத்து நாட்கள் நடக்கும். பௌர்ணமி நாளுக்கு முந்தைய நாளே நடை திறக்கப்பட்டு பாலபிஷேகம் துவங்கும். பல ஆயிரக்கணக்கான பால்குடங்கள், பால் காவடிகள் இங்கு வந்தபடியே இருக்கும். பௌர்ணமிக்கு முதல் தேரோட்டம் நடத்தப்படும். ஐப்பசியில் கந்த சஷ்டி விழா ஆறு நாட்களும், வைகாசி விசாகம் ஒரு நாளும் விழாவாக நடத்தப்படும். தைப்பூசத் திருவிழாவின் போது முருகப்பெருமானைத் தரிசிக்கப் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து தங்களது நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். இது தவிர மாத கார்த்திகைகளில் சிறப்புப் பூஜையும் உண்டு.
பிரார்த்தனை, நேர்த்திக்கடன்:
குழந்தைகளின் பயந்த சுபாவம் நீங்கவும், எதிரிகளால் ஏற்படும் துன்பம் தீரவும், திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க முருகனைப் பிரார்த்திக்கின்றனர். நேர்த்திக்கடனாக முருகனுக்கு அபிஷேகம் செய்தும் வஸ்திரம் அணிவித்தும் வழிபடுவார்கள்.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
இந்த கோயில் தினசரி காலை 4.30 மணி முதல் மதியம் 12.30 வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 9.00 மணி வரையில் கோயில் திறந்திருக்கும்.
கோயிலுக்குச் செல்லும் வழி:
திருவாரூர் - வேதாரண்யம் பேருந்து வழித்தடத்தில் திருவாரூரில் இருந்து சுமார் 25 கி.மி. தொலைவிலும், திருநெல்லிக்கா என்ற பாடல் பெற்ற சிவஸ்தலத்தில் இருந்து 13 கி.மி. தொலைவிலும் இத்தலம் அமைந்துள்ளது. நாகப்பட்டினம் - திருத்துறைப்பூண்டி சாலையில் சீராவட்டம் பாலம் என்ற இடத்தில் இறங்கி எட்டுக்குடி செல்லும் பாதையில் சுமார் 2 கி.மீ. சென்றும் இத்தலத்தினை அடையலாம்.
எண்ணங்களை நிறைவேற்றும் எட்டுக்குடி முருகனை வணங்கி இன்பமான வாழ்க்கையை எட்டி பிடிப்போம்!!
Leave a comment
Upload