தொடர்கள்
பொது
உலகில் நான்கு வகையான ராஜ நாகங்கள் - ப ஒப்பிலி

உலகில் நான்கு வகையான ராஜ நாகங்கள் உள்ளன என்கிறது புதியதொரு ஆராய்ச்சி

20241029213611312.jpg
இதுவரை உலகில் ஒரேயொரு வகையான ராஜ நாகம் மட்டுமே இருப்பதாக நம்பப்பட்டு வந்த நிலையில், நான்கு விதமான ராஜ நாகங்கள் இருப்பது நீண்ட நெடிய ஆராய்ச்சிகளுக்கு பிறகு தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வடமாநிலங்களில் உள்ள ராஜ நாகம், சுண்டா ராஜ நாகம், மேற்குத்தொடர்ச்சி மலை ராஜ நாகம், லூசான் ராஜ நாகம், ஆகியவை நான்கு வகையான ராஜ நாகங்களாகும். முதல் வகை ராஜ நாகம் கிழக்கு பாகிஸ்தான், வடக்கு மற்றும் கிழக்கு இந்தியா, அந்தமான், மற்றும் தாய்லாந்து பகுதிகளில் வாழ்பவை. இரண்டாம் வகை ராஜ நாகங்கள் மலாய் தீபகற்பம், சுண்டா தீபகற்பம், மற்றும் தெற்கு பிலிப்பைன்ஸ் ஆகிய பகுதிகளில் காணப்படுகிறது. மூன்றாவது வகை ராஜ நாகங்கள்தான் தென் இந்தியாவில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைகளில் காணப்படுகின்றன. நான்காவது வகை ராஜ நாகங்கள் தெற்கு பிலிப்பைனில் உள்ள லூசான் பகுதியில் காணப்படுகிறது.

பாம்புகள் குறித்து கடந்த இருபது வருடங்களுக்கு மேல் ஆராய்ச்சி செய்து வரும் பி கௌரிஷங்கர் கூறுகையில் தனது ஆராய்ச்சிகள் மூலமே இந்த நான்கு வகையான ராஜ நாகங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்றார். இந்த ராஜ நாகங்களின் நிறம், அவற்றின் செதில்கள், மற்றும் உடலின் அளவு ஆகிவற்றால் வேறுபடுத்தப்பட்டதாக கௌரிஷங்கர் கூறுகிறார்.

பன்னாட்டு பல்லுயிர் பாதுகாப்பு சங்கம் (IUCN) ராஜ நாகங்களை 'பாதிக்கக்கூடிய' பாம்பினமாக அறிவித்துள்ளது. அதே போல CITES அட்டவணை இரண்டில் ராஜ நாகங்கள் சேர்க்கப்பட்டுள்ளன, என்கிறார் கௌரிஷங்கர்.

வாழ்விடங்கள் அழிப்பு, பாம்பு தோல் விற்பனை, மருந்துகள் செய்ய பாம்புகளை அழிப்பது, மற்றும் செல்ல பிராணிகளாக வளர்ப்பதற்கும் பாம்புகள் பிடிக்கப்பட்டு அழிக்கப்படுகின்றன. சில நாடுகளில் ராஜ நாகத்தின் விஷத்தை எடுத்து விற்பனை செய்கிறார்கள். இம்மாதிரியான செயல்களால்தான் ராஜ நாகங்கள் அழிவின் விளிம்பிற்கு செல்லும் அபாயம் உள்ளது என எச்சரிக்கிறார் கௌரிஷங்கர்.

இந்த ஆராய்ச்சியின் பயன்கள் குறித்து கௌரிஷங்கர் கூறுகையில் எந்த வகை ராஜ நாகங்களுக்கு மனிதர்களால் அதிக தொந்தரவு ஏற்படுகிறது, இந்த வகை பாம்புகளை பாதுகாக்க எவ்விதமான நடவடிக்கைகள் தேவை, மற்றும் இந்த நாகங்களின் விஷம் குறித்து ஆராய்ச்சி செய்வதும், இந்த நாகங்கள் கடித்தவர்களுக்கு விஷ முறிவு மருந்து செய்வதும் முக்கியமான பணிகள் என்கிறார் கௌரிஷங்கர்.

மேலும் தற்போது உள்ள ராஜ நாகங்களை பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்த ஒரு மதிப்பீடு செய்வது இந்த நாகங்களை பாதுகாப்பதில் ஒரு மிக முக்கியமான பணியாகும், என்கிறார் அவர்.

ராஜ நாகங்களில் பல வகைகள் உள்ளன என்பது குறித்து பல ஆராய்ச்சியாளர்கள் கூறினாலும், அவர்களால் அதற்கான ஆதாரங்களை எடுத்துரைக்க இயலவில்லை. ஆனால் கௌரிஷங்கரின் தொடர் ஆராய்ச்சிகளால்தான் இந்த கூற்று நிரூபிக்கப்பட்டு உள்ளது.

இந்த ராஜ நாகங்கள் ஆராய்ச்சிக்காக பல மாநிலங்களில் உள்ள வனப்பகுதிகளுக்கு சென்று அங்குள்ள ராஜ நாகங்களின் செதில்கள், மற்றும் தோல் பகுதிகள் ஆகியவற்றை சேகரித்து அவைகளை வைத்து ஆராய்ச்சி செய்ததன் பலனே இந்த கண்டுபிடிப்பு என்கிறார் அவர். "இம்மாதிரியான ஆராய்ச்சியின் பலனாகவே 185 ஆண்டுகளுக்கு பிறகு ராஜ நாகங்களின் இன்றைய நிலை குறித்த சரியான தகவல்கள் கிடைத்திருப்பதாக அவர் கூறினார்."