கணவனும் ,மனைவியும் சேர்ந்து நடத்தும் இல்லறத்தில் ஊடலும் , கூடலும் ஒன்றை ஒன்று தொடர்வதே வழக்கம் .
ஊடல் விலகும் நேரம் என்று எதனைச் சொல்வோம் ?
உங்கள் ஊகம் சரிதான்.
விருந்தினர் வந்து விட்டால் , கணவனுடன் பிணக்கு கொண்ட பெண் அதை மறந்து, மலர்ந்த முகத்துடன் உறவினரை வரவேற்று விருந்தோம்பும் பண்பு இம்மண்ணுக்கே உரியது .
இந்த வாரம் நாம் படிக்கும் இந்த நற்றிணைப்பாடல் அத்தகைய காட்சி ஒன்றை நமக்கு கண் முன் படைக்கிறது .
அந்தப் பாடல் இதுதான் .
தட மருப்பு எருமை மட நடைக் குழவி
தூண் தொறும் யாத்த காண்தகு நல் இல்
கொடுங் குழை பெய்த செழுஞ் செய் பேதை
சிறு தாழ் செறித்த மெல் விரல் சேப்ப
வாளை ஈர்ந் தடி வல்லிதின் வகைஇ
புகை உண்டு அமர்த்த கண்ணள் தகை பெறப்
பிறை நுதல் பொறித்த சிறு நுண் பல் வியர்
அம் துகில் தலையில் துடையினள் நப் புலந்து
அட்டிலோளே அம் மா அரிவை
எமக்கே வருகதில் விருந்தே சிவப்பாள் அன்று
சிறு முள் எயிறு தோன்ற
முறுவல் கொண்ட முகம் காண்கம்மே
நற்றிணை 120
தலைவன் மேல் கோபம் கொண்ட தலைவி அடுப்படியில் மீன் சமைத்துக் கொண்டு இருக்கிறாள். புகையுடன் எழும் வாசம் மூக்கைத் துளைக்கிறது. பயத்துடன் மெல்ல உள்ளே எட்டிப் பார்க்கும் கணவன் ,'இன்னும் இவள் கோபத்துடன் இருக்கிறாள் .இப்போது இவள் மறுபடியும் சிரிக்க வேண்டும் என்றால் ,யாராவது விருந்தினர் வர வேண்டுமே ' என்று உளமார வேண்டுகிறான்
அவன் சொல்கிறான்
"வலிமை மிக்க எருமைகளின் கன்றுகள் , இந்த இல்லத்தின் தூண்களில் கட்டப்பட்டு , இந்த இல்லத்தின் செழுமையைச் சொல்கிறது.
காதுகளில் வளைந்த குழலணியை அணிந்த என் தலைவி , மோதிரம் அணிந்த மெல்லிய விரல்கள் சிவக்க வாளை மீனை நறுக்கி ,அதை சமைக்கிறாள் .
அப்போது எழும் புகையால் அவளது பிறை போன்ற நெற்றியில் வியர்வை அரும்பி இருக்கிறது .
வியர்வைத் துளிகளைத் தன் சேலைத் தலைப்பில் துடைத்துக் கொள்கிறாள்.
இத்தனை ஈடுபாட்டுடன் சமைக்கும் அவளுக்கு இன்னும் என் மேல் உள்ள கோபம் குறையவில்லை .
இந்த நேரத்தில் விருந்தினர் யாரேனும் வருக .
அவ்வாறு விருந்தினர் வந்து விட்டால் , அவள் மனநிலை மாறி விடும் .
இந்த அழகியின் சினம் தணியும் .
மென் முறுவல் மிளிரும் அவள் முகத்தை நீங்கள் காண்பீர்கள் " என்று நம்பிக்கையுடன் சொல்கிறான்.
'உங்களை வரவேற்கவும் , உபசரிக்கவும் அவள் சினம் தணிந்து ,மகிழ்ச்சியுடன் வரவேற்பாள் '. என்று சொல்லிக் கொண்டு வாசலில் காத்திருக்கிறான் அத்தலைவன் .
மாங்குடி கிழார் என்னும் சங்கப்புலவர் தீட்டிய இந்த சமையலறை ஓவியம்
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு (குறள் 81)
என்னும் திருக்குறள் படி வாழும் மங்கையரை நமக்கு நினைவுப் படுத்துகிறது அல்லவா ?
சங்க காலத்தில் மட்டுமல்ல , எந்தக் காலத்திலும் பெண்கள் இப்படித்தான் !
மேலும் ஒரு பாடலுடன் அடுத்த வாரம் சந்திப்போம் .
-தொடரும்
Leave a comment
Upload