தொடர்கள்
தமிழ்
தமிழிலக்கியத்தில் எட்டின் மகிமை - பரணீதரன்

நம்முடைய இளம் எழுத்தாளர் பரணீதரனிடம் தமிழிலக்கியத்தில் எட்டின் நிலை என்ன என்று கேட்க இதோ கச்சிதமாக தமிழ் பொற்குவியலிலிருந்து பின் வரும் எட்டு சிறப்பு முத்துக்களை தந்து விட்டார்.

20241027224618849.jpg

தமிழ் இலக்கியத்தில் நிறைய எண்கள் இருந்தாலும் எட்டாம் எண்ணிற்கு என்று சில சிறப்புகள் உள்ளன.

  1. தமிழில் எட்டு என்ற எண்ணிற்கான எழுத்து குறியீடாக ‘அ’ என்ற எழுத்தை பயன்படுத்துகிறோம். ஔவையார் கூட “எட்டேகால் லட்சணமே” என்ற பாடலில், இந்த குறியீட்டையே பயன்படுகிறார்.
  2. சொல் இலக்கணத்தில் உள்ள வேற்றுமை உருபுகள் மொத்தம் எட்டு (எழுவாய், ஐ, ஆல், கூ, இன், அது, கண், விளி)
  3. பொருள் இலக்கணத்தில் உள்ள புறத்திணைகள் பொதுவாக எட்டாகும் (வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி உழிஞை, நொச்சி, தும்பை, வாகை). இதையே திவாகர நிகண்டு சூத்திரமும் கூறுகிறது.
  4. யாப்பு இலக்கணத்தில், சீர்களை வகைப்படுத்துவதில், எட்டு சீர்கள் உள்ள செய்யுள்களை, “எண் சீர் கழிநெடில் அடி” என்று கூறுவார்கள்.
  5. அணி இலக்கணத்திலும், யாப்பிலக்கணத்திலும் அதிகமாக பயன்படுத்தப்படும் தொகைகள் மொத்தம் எட்டு (மோனை, எதுகை, முரண், இயைபு, அளபெடை, அந்தாதி, இரட்டை, செந்தொடை).
  6. சங்க இலக்கியத்தில் ஒன்றான பதினெண் மேல்கணக்கு நூல்களில் உள்ள எட்டுத்தொகை நூல்களின் எண்ணிக்கை எட்டாகும் (நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு).
  7. பக்தி இலக்கியத்தில் “திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்” என்ற பழமொழிக்கு ஏற்ப நாளும் இன்னிசையையும் பக்தியையும் அள்ளிக் கொடுக்கும் திருவாசகத்தையும், “பாவை பாடிய வாயால் கோவை பாடுக” என்று சிவபெருமானே திருவாய் மலர்ந்து, மாணிக்கவாசகர் பாட இறைவனே எழுதிய திருக்கோவையாரையும் சைவத் திருமுறையில் எட்டாம் திருமுறையில் உள்ளது.
  8. தமிழ் மன்னர்களும் எண்பேராயம் (கரணத்தின் திரள்கள், வாய்க்கடை காப்போர், நகரி மாக்கள், படைத்தலைவர், கிளைச்சுற்றம், யானை ஊர்வோர், குதிரை ஊர்வோர், காவிதியர்) என்ற எட்டு பெரும் குழுக்களை பொதுவாக தங்களுடைய நாடுகளில் வைத்திருந்தார்கள். பாரத திருநாட்டின் மற்ற மன்னர்களும் கூட இவ்வாறான குழுக்களையே பொதுவாக வைத்திருந்தார்கள். நமக்கு புரியும் படியாக கூற வேண்டும் என்றால், செயலாளர்கள், காப்பாளர்கள், ஊர்ப்பெருமக்கள், படைத்தலைவர்கள், நெருங்கிய உறவினர்கள் மற்றும் சுற்றத்தார்கள், யானை வீரர்கள், குதிரை வீரர்கள் மற்றும் உழவர் பெருமக்கள் ஆகியோர் இடம் பெற்றிருந்தார்கள். இவர்கள் அனைவரும் ஒரு மன்னனை நல்வழிப்படுத்தி, ஒரு அரசு சரியாக செயல்படுவதற்கு வழிவகை செய்து, அவனுக்கு மகிழ்ச்சியை கொடுத்து, அவனுடைய பாதுகாப்பையும் நிலை நிறுத்தினார்கள்.

இப்படி எட்டினுடைய மேன்மையை தமிழில் நிறைய பார்க்க முடியும். அவற்றில் ஒரு சிறு துகளையே நாம் இங்கே பார்த்தோம்.

2024102722470192.jpg