தொடர்கள்
அரசியல்
மகாராஷ்டிரா முதல்வர் - தேவேந்திரா பாட்னாவிஸ்-விகடகவியார்

தேவேந்திர பாட்னாவிஸ் மகாராஷ்டிராவின் மூத்த பாஜக தலைவர் ஆர்எஸ்எஸ் தயாரிப்பு. கட்சியிலும் சரி, பொது மேடையிலும் சரி வெளிப்படையாக பேசக் கூடியவர். மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிராவில் பிஜேபி பெரும் சரிவை சந்தித்தவுடன் அதற்கு பொறுப்பேற்று துணை முதல் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்றவர். ஆனால், பாரதிய ஜனதாவின் தலைமை அவர் ராஜினாமாவை ஏற்கவில்லை. அவர் மீது நம்பிக்கை வைத்து பாரதிய ஜனதா அவரை அடுத்த வேலையை பாருங்கள் என்று அனுப்பி வைத்தது.

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு கணிசமான இடங்கள் கிடைத்தது. இதை நம்பி காங்கிரஸ் கூட்டணி அடுத்து வரும் சட்டசபைத் தேர்தலில் நமக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்று நம்பினார்கள். அந்த நம்பிக்கையை தூள் தூளாக்கியது பாட்னாவிஸ் ராஜதந்திரம். அஜித்பவாரின் செல்வாக்கு குறைந்துவிட்டது என தன் கட்சிக்குள்ளேயே விமர்சனம் வந்ததை காதில் வாங்கிக் கொள்ளாமல் கூட்டணியை இன்னும் வலுப்படுத்தினார் தேவேந்திர பாட்னாவிஸ்.

கூட்டணிகள் கேட்டதெல்லாம் விட்டுக் கொடுத்தார். பாரதிய ஜனதா தனித்துப் போட்டியிட்டாலும் கணிசமான இடங்களை வெல்ல முடியும் என்று தெரிந்து கொண்டாலும் கூட்டணியை வலுப்படுத்துவதில் தான் அவரது கவனம் இருந்தது. பாஜக ஆட்சியை தக்க வைக்க முதல்வர் பதவியை கூட விட்டுக் கொடுத்தவர் தான் பாட்னாவிஸ். அரசியல் விமர்சனங்களை அவர் என்றுமே கண்டு கொண்டதில்லை.

நாடாளுமன்றத் தேர்தலில் மகாராஷ்டிராவில் பாஜகவுக்கு மிகப்பெரிய சறுக்கல். அப்போது பாட்னாவிஸ் சொன்னது இதுதான். சட்டசபை தேர்தலில் நாங்கள் மீண்டும் எழுவோம் அந்த வெற்றியை நான் மோடிக்கு பரிசாக தருவேன் என்றார். சொன்னதை செய்த ராஜதந்திரி தான் தேவேந்திர பட்னாவிஸ்.

288 சட்டமன்ற உறுப்பினர் கொண்ட மாநில சட்டமன்றத்தில் 132 இடங்களில் பாஜக வென்று இருக்கிறது. பாஜகவில் கூட்டணி கட்சிகளை நம்பாமல் ஆட்சி அமைத்து விட முடியும். ஆனால் அந்த ஐடியாவை முளையிலேயே கிள்ளி எறிந்தவர் தான் பட்னாவிஸ். கூட்டணி ஆட்சி தான் என்பதை தெளிவுபட சொன்னார்.

தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக வரத் தொடங்கியதும் தேவேந்திர பாட்னாவிஸ் முதல்வராக வேண்டுமென்று ஆர் எஸ் எஸ் கருத்து தெரிவித்தது. பாராளுமன்றத் தேர்தலில் ஆர்எஸ்எஸ் தனது பங்களிப்பை பெரிய அளவில் செய்யவில்லை. உத்திரபிரதேசம் மகாராஷ்டிரா ஆகிய இடங்களில் பாஜகவுக்கு மிகப் பின்னடைவுக்கு காரணம் ஆர்எஸ்எஸ் வேலை செய்யாதது தான்.

இந்த முறை மகாராஷ்டிராவில் ஆர்எஸ்எஸ் தனது தேர்தல் பணியை நான்கு ஐந்து மாதங்களுக்கு முன்பாகவே தொடங்கியது. குறிப்பாக வாக்காளர் சேர்ப்பில் ஆர்எஸ்எஸ் பங்கு மகத்தானது. பாராளுமன்றத் தேர்தலின் போது குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்த தொகுதிகளில் எல்லாம் ஆர்எஸ்எஸ் அதிக கவனம் செலுத்தியது மகாராஷ்டிராவில் வெற்றிக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு இல்லையேல் அழிவு என சங்பரிவார் அமைப்புகள் பாஜக தொண்டர்களிடம் தீவிரமாக பிரச்சாரம் செய்து அவர்களை முடுக்கிவிட்டது இந்த மகத்தான வெற்றிக்கு இதுவும் ஒரு காரணம்.

இந்த முறை எதிர்க்கட்சிக் கூட்டணியான மகாவிகாஸ் கூட்டணியால் 50 இடங்களில் தான் வெற்றி பெற முடிந்தது அதிலும் காங்கிரஸ் கட்சி 16 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று இருக்கிறது. எதிர்க்கட்சி அந்தஸ்து கூட இந்த கூட்டணிக்கு கிடைக்கவில்லை. இத்தனைக்கும் எதிர்க்கட்சிகள் மகாராஷ்டிராக்கு வரவேண்டிய தொழிற்சாலைகள் எல்லாம் குஜராத்தில் அமைத்து விட்டார்கள் மோடி அமித்ஷா கூட்டணி என்று எல்லாம் கூட பிரச்சாரம் செய்து பார்த்தார்கள் அவையெல்லாம் எடுபடவில்லை.

தற்சமயம் முதல்வராக இருக்கும் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா 57 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று இருக்கிறது. இந்த முறை அவர்கள் கட்சித் தொண்டர்கள் மூத்த உறுப்பினர்கள் ஷிண்டேவே முதல்வராக தொடர வேண்டும் என்று விரும்பினாலும் அதற்கான வாய்ப்பு பிரகாசமாக இல்லை என்பதை அவர் தெரிந்து வைத்துக் கொண்டிருக்கிறார்.

அமித்ஷா அவரை தொடர்பு கொண்டு பேசிய போது துணை முதல்வர் பதவி முக்கிய இலாகாக்கள் அல்லது மத்திய அமைச்சர் பதவி எது என்பதை நீங்களே தீர்மானம் செய்து கொள்ளுங்கள் என்று தெளிவுபட சொல்லிவிட்டார். அதனைத் தொடர்ந்து புதிய அரசு அமைப்பதற்கு ஷுண்டே தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்து ஆளுநரிடம் கடிதம் கொடுத்து விட்டார்.

புதிய அரசு அமைக்கும் வரை காபந்து முதல்வராக அவரை தொடர சொல்லி இருக்கிறார் ஆளுநர். கூடவே மோடி அமித்ஷா எடுக்கும் முடிவுக்கு நான் கட்டுப்படுவேன் என்று சொல்லிவிட்டார் ஷிண்டே. தேவேந்திர பாட்னாவிஸ் இன்னும் சில தினங்களில் முதல்வராக பதவி ஏற்பார் என்பது மட்டும் உண்மை.