தொடர்கள்
கதை
மறதிக் கணவன் !! -வி.பிரபாவதி

2025061906371895.jpeg

காலையில் எழுந்ததுமே வசந்தாவிற்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. பாவம் என்ன செய்வாள்? அவள் வக்கீல் கணவன் தினேஷ் தினமும் செய்யும் கூத்து அப்படி! சரியான மறதி ஆசாமி.

காபி பொடி ஒரு நாலு நாளைக்கு கையிருப்பு இருக்கும் போதே வாங்கிவரச் சொன்னாள். ஆனால் எதையும் மறந்து விடும் தினேஷ் இன்றும் அப்படித்தான்.

வசு குளித்து சமையல் செய்ய ஆரம்பித்தாள். முதலில் இட்லி ஊற்றி சட்னி ரெடி பண்ணியாச்சு. தினேஷ் நன்கு சாப்பிடுவான். குக்கரை எடுத்தாள். கொஞ்சம் பருப்பை வேகவைத்தாள். இதோ மேலேயும் கீழேயுமாக பொங்கியது.சரியா விசிலும் வரலை.

"கேஸ் கட்" வாங்கிட்டு வரச்சொல்லி எத்தனை நாளாகுது? பொங்கி வழியுற குக்கர், வேகாத பருப்பு, நான் படும் பாடு எனக்குத்தான் தெரியும்’ என்று வருந்தினாள்.இவர் எப்பொழுதுதான் மாறுவாரோ?" என்று நினைத்தவள் பருப்பை மிக்ஸியில் அரைத்து சாம்பார் வைத்தாள்.

"சாப்பிட்டதும் கோட்டை மாட்டிக்கிட்டு கிளம்பிடுங்க. நான் சொல்றதையெல்லாம் கோட்டை விட்டுடுங்க. என்னத்த செய்யறது? உங்களைக் கட்டிக்கிட்டு" புலம்பினாள் வசந்தா.

"நாளைக்கு தலைவர் மகள் கல்யாணத்துக்கு போகனும். எதையானும் சாக்கு போக்கு சொல்லாத" என்றான் அவன்.

"உள்ளூர்லதானே கல்யாணம். எனக்கு அடுப்படிலேந்து லீவு. நானும் இருக்கற பட்டுப் புடவையை கட்டிக்கிட்டு மற்றப் பொண்ணுங்க மாதிரி அலட்டத்தான் போகிறேன்" என்றாள் அவள்.

"சரி, சரி போகலாம். இப்பொழுது என்னை கோர்ட்டுக்கு போக விடு" என்றான் தினேஷ்.

மறுநாளும் வந்தது.

அத்தனை மேக்கப் போட்டிருந்தாலும் அங்கே உட்கார்ந்தபடி டச்சப் செய்து கொள்ள ஹேண்ட் பேக்கில் ஜூனியர் சைஸ் கிட் எடுத்துக் கொண்டாள்.

ஒரு வழியாக காரில் ஏறிவிட்டாள். இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்குள் இருக்கும் மண்டபத்திற்கு போவதற்குள் அவள் மனதில் இரண்டாயிரம் கனவுகள்.

இவள் புடவை, நெக்லஸ், வளையல், சென்ட், நெயில் பாலீஷ் வரை எல்லாவற்றையும் பற்றி ஒவ்வொருத்தர் ஒவ்வொரு விதமாக புகழ்வதாக நினைத்துக் கொண்டு தனக்குள் சிரித்து, சிலிர்த்துக் கொண்டாள். அவ்வப்போது காரில் நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டாள்.

ஒருவழியாக சத்திரத்திற்கு வந்துவிட்டார்கள். இறங்கிப் பார்த்தால் மண்டபத்தில் ஒரு 'ஈ' 'காக்காய்' இல்லை. ஆள் அரவமில்லை.

"என்னடீ, இங்கதானே கல்யாணம், யாரையும் காணோம்"என்றான் தினேஷ்.

"ஆமாங்க, எனக்கும் ஒன்னும் புரியலியே" என்றவள் எல்லாம் வேஸ்டா என்று நினைத்தாள்.

"பத்திரிகை இருக்கா"? என்ற தினேஷிடம் பத்திரிக்கையை எடுத்து நீட்டினாள்.

அடுத்த மாதம் இதே தேதியில்தான் தலைவர் மகளுக்கு கல்யாணம்.ஒரு மாசம் முன்னாடியே வந்து விட்டடதை உணர்ந்தார்கள்.

மறதிக் கணவன். வசுவிற்கு மூளை கொதித்தது.

"நான் போகும் வழியில் இறங்கிக்கொள்கிறேன். நீ வீட்டுக்குப் போய் உனக்கு வேண்டியதை சமைச்சு சாப்பிடு. நான் வெளியில் பாத்துக்கொள்கிறேன்" என்றான் தினேஷ்.

டிரைவர் முத்து எகத்தாளமாய் பார்ப்பது புரிந்தாலும் வாயை மூடிக்கொண்டு வீட்டிற்கு வந்தாள்.

பாவம்.அவள் என்ன செய்வாள். மீண்டும் அதே குக்கர்! சமையல்!

அவளிடமிருந்து தப்பித்துக் கொண்ட வக்கீல் இரவு நெடு நேரம் கழித்து வீட்டு காலிங் பெல்லை அழுத்தினான்.