அப்பாவு அலுவலகத்திற்குள் வழக்கம் போல் நுழைந்தார்.
அவரிடம், ’உங்கள் மகன் சங்கரா நம் மேலாளராக வரப்போகிறார்?’ என்று ஒரு கேள்வியை கேட்டார் ஒரு அதிகாரி. அவருக்கு இதைப் பற்றி ஒன்றும் தெரியாது.
அவருடைய மகன் சங்கர் மும்பையில் ஒரு தனியார் அலுவலகத்தில் உயர் பதவியில் இருக்கிறான். இரண்டு மாதத்திற்கு ஒரு முறை இவர்களை வந்து பார்த்து விட்டுப் போவான்.அவன் எப்பொழுதுமே தன்னுடைய சொந்த ஊருக்கு வேலையை மாற்றிக் கொண்டு வருவதாக சொன்னதே இல்லை. அவனுக்கு மும்பை வாழ்க்கையே மிகவும் பிடித்து விட்டது போல் அப்பாவுக்கு தோன்றியது.30 வயதாகியும் இன்னும் அவனுக்கு திருமணம் ஆகவில்லை.
மறுநாள் சனிக்கிழமை. மும்பையிலிருந்து திடீரென்று சங்கர் வந்தான். இரண்டு நாள் பெற்றோருடன் மகிழ்வாக பேசிக் கொண்டிருந்தான்.
திங்கட்கிழமை காலை வந்தது. ’அப்பா, உங்களை நான் உங்கள் அலுவலகத்திற்கு அழைத்துப் போய் விடுகிறேன்’ என்று சொல்லியபடியே அப்பாவினுடைய இரண்டு சக்கர வாகனத்தில் அவரை அழைத்துச் சென்றான்.
அழைத்துச் சென்றவன் அலுவலகத்தில் உள்ளேயும் போனான். மேலதிகாரியை சந்தித்த அவன், சிறிது நேரம் அவருடன் பேசிக் கொண்டிருந்தான். வெளியே வந்த அவனை வாசல் வரை வந்து அந்த மேலதிகாரி வழி அனுப்பி வைத்தது அப்பாவுக்கு ஆச்சரியத்தை தந்தது. ஆனால் விவரம் ஒன்றும் தெரியவில்லை.திங்கட்கிழமை மாலையே மும்பைக்கு புறப்பட்டுப்போனான் சங்கர்.
அடுத்த திங்கட்கிழமை வந்தது. அப்பாவு அன்று மாலை தன்னுடைய பணியில் இருந்து ஓய்வு பெற்றார். வழக்கமாய் நடக்கும் பிரிவு உபச்சார விழா நடைபெற்றது. அலுவலக ஊழியர்கள் அனைவரும் அப்பாவுவை மேளதாளத்துடன் அவருடைய வீட்டிற்கு அழைத்து வந்து விட்டு சென்றார்கள்.
வெள்ளிக்கிழமை மாலை 6:00 மணி இருக்கும். மும்பையிலிருந்து சங்கர் வந்தான். வரும் பொழுது ஏறத்தாழ மும்பை வாழ்க்கையை அவன் முடித்து கொண்டு வந்ததாகவே அப்பாவுவால் புரிந்து கொள்ள முடிந்தது.
அப்பாவிடம் தான் புதிய அலுவலகம் ஒன்றில் சேரப்போவதாக சொன்னான் சங்கர்.’எந்த அலுவலகம்?’ என்று அப்பாவு கேட்டார். ’உன்னுடைய அலுவலகம்தான்’ என்று சொன்ன உடனே ஆச்சரியப்பட்டு போனார் அப்பாவு.
’நான் திட்டம் போட்டு செய்ததுதான்.
கடந்த வாரமே இந்தப் பணியில் சேர்ந்து இருக்க வேண்டியது.
தன்னுடைய அப்பாவை ஊழியராக நடத்தும் நிலையை தவிர்க்கவே இந்த ஒரு வார கால நேரத்தை எடுத்துக் கொண்டான் சங்கர் என்று தெரிந்ததும் மகிழ்ந்தார் அப்பாவு.
அடுத்தது என்ன சங்கருக்கு மாமா மகளை மணமுடிக்க வேண்டியது தான் என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டார் அப்பாவி அப்பாவு.
Leave a comment
Upload