தொடர்கள்
அனுபவம்
காடறிதல் -4, இயற்கைச் சுவை -இந்துமதி கணேஷ்

20250619060904380.jpeg

Nature consists of the endless realm of sensible

lives that can, at the same time, arouse our sympathy

and create a sense of wonder in our minds.

இயற்கை என்பது பல்லுயிர்களின் எல்லையற்ற தொகுதியாகும்,

அவை நமக்குள் பரிவை எழுப்பும் அதே சமயம்

நம்மை வியப்பிலாழ்த்திய படியே இருக்கின்றன- தாகூர்


அருவியில் குளித்து முடித்து வெளியில் புத்துணர்வுடன் வந்து நின்ற போது, அங்கு நின்ற அந்த ஊர் மனிதர் ஒருவர் மகளிடம் ஒரு பழத்தை தந்தார். அவள் வாங்க மறுத்தாள், நான் வாங்கி கொள்ள சொன்ன பிறகு வாங்கி பார்த்து "இதென்ன புது பழமா இருக்கே!" என்று கேட்டாள். புதியவர் அதை "பேசன் பழம்" என்று கூறினார். இதுவரை அப்படி ஒரு பழத்தை பார்த்தே இராத எங்களுக்கு அது எப்படி இருக்கும் என்று சுவைத்து பார்க்கும் ஆர்வமும் மெலிதான ஒரு தயக்கமும் எழுந்தது. அப்போது அங்கு வந்த தேக்கன், "இது பேரு பேசன் பழம், இவரு நமக்கு தெரிஞ்சவரு தான் அதுனால பயப்படத் தேவையில்லை. உள்ள திறந்து பாத்தா சீதா பழம் மாதிரி தான் இருக்கும் லேசான புளிப்பு சுவை இருக்கும், கொட்டையோடு இருக்கும் கூழ்மத்தை சாப்பிட்டு விட்டு, மேலோட்டை தூர எரிந்து விட வேண்டும், தைரியமா சாப்பிட்டு பாருங்க" என்றவுடன் அந்த பழத்தை பிளந்து நானும் மகனும் சுவைத்துப் பார்த்தோம். சொன்னது போலவே மென் புளிப்பும் இனிப்புமான வித்தியாசமான சுவையுடன் இருந்தது பழம்.

பழத்தை சாப்பிட்டு முடித்த பிறகு நாவில் இருந்த அதன் புளிப்பு சுவை இன்னொன்றை ருசிக்கும் ஆசையை ஏற்படுத்தியது. "இது எல்லா காலத்துலயும் விளையுமா ? இதன் தமிழ் பெயர் என்னங்க ஐயா ?" என்று கணவர் கேட்டவுடன், "இது பிரேசிலை தாயகமா கொண்ட பழம், அமேசான் காடுகளில் விளைய கூடியது. அங்கே இருந்து இங்கே வந்த மக்களால்(வந்தேறிகள்) இங்கு கொண்டுவர பட்டிருக்கிறது. காந்தளூர் வனப்பகுதிகளில் மட்டுமே பெரும்பாலும் கிடைக்கும். வருடத்திற்கு இருமுறை மட்டுமே இவற்றை பார்க்க முடியும். இப்போது இதை சுவைக்க தவறினால் பிறகு ஏழு மாதங்கள் கழித்து தான் சுவைக்க முடியும்" என்றார். "அச்சச்சோ அப்போ இப்போவே வாங்கிக்கலாமா ?" என்று நான் கேட்ட போது, சாப்பிட்ட பிறகு நாம் பழத் தோட்டத்திற்கு தான் போக போகிறோம் அங்கு வாங்கி கொள்ளலாம் என்று கூறி எங்களை கூடாரங்கள் அமைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு அழைத்து போனார்கள்.

கடினமான மலை ஏற்ற பாதையில் மீண்டுமொரு ஜீப் பயணம், இந்த முறை பசி மெல்ல ஊர்ந்து வந்து நம்மை விழுங்க பார்த்தது. ஒருவழியாக தங்குமிடம் சென்று சேர்ந்தோம். மலைக்கு கீழே வரிசையாய் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களை நேர்த்தியாகவும் அழகாகவும் இருந்தன.

வயிறு முட்ட சாப்பிட்டிருக்க வேண்டும்

ஆப்பிள் விழுந்த கணத்தில்

நியூட்டன் என்ற கவிதைக்கு ஏற்ப சாப்பிட்ட பிறகு தான் அந்த இடத்தின் அழகு நன்றாக புலப்பட்டது. நல்ல மத்தியானத்தில் கூட அந்த இடத்தில் லேசான குளிர் தெரிந்தது. நாம் நினைத்தால் அந்த கூடாரங்களின் பின்பு தெரியும் மலை மீது எறி விடலாம் என்று எண்ணுமளவுக்கு மலையின் அடிவாரத்தில் அமைக்கப்பட்டிருந்தன அந்த கூடாரங்கள். நம் மனதில் நாம் கற்பனை செய்திருந்த கூடாரங்களுக்கு மாற்றாக மெத்தை, தலையணையுடன் நல்ல வசதியாகத் தான் இருந்தன அவை.

அங்கே நிறைய காட்டு மைனாக்ககளும், கிளிகளும், விதவிதமான பறவைகளும் ஓசை எழுப்பியபடி மகிழ்வாய் பிறந்து கொண்டிருந்தன. நாங்கள் தேக்கனுடன் சற்று காலாற நடந்த போது நான்கு கிளிகள் எங்களையே சுற்றி வந்தன, அப்போது தான் எனக்குள் அந்த கேள்வி எழுந்தது. "இலவு காத்த கிளி என்ற பதம் எப்படி வந்தது ஐயா அது சாதாரண சொலவடையா இல்லை அதுக்கு பின்னாடி ஏதும் உண்மைகள் இருக்கா?" என்ற கேள்வியை நான் எழுப்பினேன். "நல்ல கேள்வி, கூட்டமாய் கிளிகள் உணவுக்காக அலைகையில் ஒரு கிளி மட்டும் இலவ மரத்தின் காய்கள் பழுக்கும் என்று நம்பி காத்திருந்தது, பின்பு அது வெடித்து பஞ்சாய் போனதால் ஏமாற்றம் அடைத்து பறந்து போனதாய் கதையுண்டு" என்று கூறிவிட்டு புன்னகையுடன் நிறுத்தினார், "இதெல்லாம் வாய்வழி கதைங்க தானே ஐயா, நீங்க அதற்க்கு பின்ன இருக்க அறிவியலைச் சொல்லுங்க" என்று கூறினார் கூடவே வந்த தோழர் ஒருவர்.

மீண்டும் தொடர்ந்தார் தேக்கன், "பொதுவாக இலவ மரங்கள் வெப்பமான இடங்களில் தான் வளரும், வறட்சி காலங்களிலும் பூக்கும் தன்மையுடையவை. பூக்கும் காலத்தில் இலைகளை உதிர்த்து விடும், மொக்கு போல இருக்கும் இதன் காய்களை பறவைகளும் பூச்சிகளும் மொய்க்கத் தொடங்கும். கிளிகளின் இனப்பெருக்க காலமும் இலவம் மரம் பூக்கும் காலமும் ஒரே நேரம் தான். இலவம் காய்களின் காம்புகளில் வழியும் ஒரு வகையான பிசின்களை கிளிகள் விரும்பி உண்ணும். இந்த பிசினை இயற்கை மருத்துவர்கள் "போகபெருக்கி" என்றும் "உணர்வெழுப்பி" என்றும் அழைக்கிறார்கள். மனிதனுக்கு முன்பாகவே விலங்குகளும் பறவைகளும் இந்த விஷயத்தை அறிந்து கொண்டு அதனை பயன் படுத்திக் கொள்கின்றன, ரொம்ப ஆச்சர்யம் தான் இல்லையா !" என்று முடித்தார்.

எங்களால் திகைப்பிலிருந்து மீள முடியவில்லை, சும்மா சொன்ன சொலவடை என்று நம்பி இருந்தால் அதற்கு பின்னால் இவ்வளவு அறிவியல் உண்மைகள் ஒளிந்திருக்கும் என்று நினைக்கவே இல்லை. இவையெல்லாவற்றையும் விட இது அத்தனையும் தெரிந்து வைத்திருக்கும் தேக்கன் மீது கூடுதல் மரியாதை வந்தது. அப்போது மென் சாரலாய் மழை தொடங்கவே நாங்கள் கூடாரங்கள் இருக்கும் பகுதியை நோக்கி விரைந்தோம், கூடுகைகள் நடத்தவும் சாப்பிடவும் வசதியாக அமைக்கப்பட்டிருந்த நீண்ட கூடத்தில் மழை பெய்து முடியும் வரை காத்திருந்தோம், அப்போது எங்களுடன் வந்திருந்த சற்றே வயதான பெண்மணி ஒருவர் "உழவு மழையா ? உரல் மழையா ? இது எதுன்னு தெரியலையே எப்போ விடுமோ!" என்றார்.

புதுசா இருக்கே இந்த விஷயம் ! உரலையே பார்த்திராத நமது அடுத்த தலைமுறை அங்கேயே இருக்க அனைவரும் ஆவலாய் தேக்கனை பார்த்தோம். அவர் சிரித்தபடியே "உரலுக்கும் உழவிற்கும் மழை அளவை கணக்கிடும் வாழ்வியல் தொடர்புகள் உள்ளன" என்றார். "ஆம் நண்பர்களே! உரல் அவ்வளவு ஆழமானது இல்லை அல்லாவா அதனால் அதை வைத்து மழையின் அளவை கணக்கிடுவார்கள். அந்த நாட்களில் மழை நன்றாக பெய்து ஒரு அடி ஆழத்தின் அளவுக்கு நிலம் ஈரமாகி ஏர்க்கால் முழுவதும் மண்ணில் பதிவதே "ஓர் உழவு மழை" என்று குறிப்பிடுவார்கள். அதாவது இருபது முறை உரல் குழியில் மழை நீர் நிரம்பினால் மூன்று மாதங்கள் ஏரிகள் கிணறுகள் எல்லாம் நிறைந்து வழியுமாம், அதனால் மாமழையை போற்றுவோம்!" என்ற போது நம் மூதாதையரின் அறிவை வியக்காமல் இருக்க முடியவில்லை.

மகள் "அம்மா உரல் எப்படிம்மா இருக்கும், காட்டுங்களேன்" என்று ஆர்வமாய் கேட்க, மகன் அவளை வம்பிழுக்கும் தொனியில், "நான் பாத்திருக்கேனே" என்றான் சீண்டலாய். உடனே மகள் "அ..ம்...மா உடனே இப்பவே காட்டுங்க" என்று அண்ணனை முறைத்தபடியே என்னிடம் உத்தரவு போட்டாள். நல்ல வேளை தங்குமிடத்தில் இணைய வசதி இருந்ததால் உடனே உரலை அலைபேசியில் காட்டினேன், "நாமளும் நம்ம வீட்டுக்கு ஒண்ணு வாங்கலாமா ?" என்று கேட்கத் தொடங்கி விட்டாள், "அப்போ நீ தினம் அதுல சட்னி அரைப்பியா ?" என்று மகன் பதிலுக்கு வார அவர்கள் இருவரும் வழக்காட தொடங்கினர். அதற்குள் மழை நின்று விடவே, நாங்கள் பழத் தோட்டத்திற்கு கிளம்பினோம்.

இயற்கை உரங்களை கொண்டு தனியார் நடத்தும் பழப்பண்ணை அது. கேஷ்மீரில் மட்டுமே விளைய கூடிய குங்குமப்பூ, ஆப்பிள், ஸ்டராபெர்ரி(செம்புற்று), பேரிக்காய், அத்தி, சப்போட்டா என்று அனைத்து பழங்களும் காந்தளூரிலும் செழிப்பாக வளரும் என்றார் தேக்கன். காந்தளூரில் வருடத்திற்கு 250 நாட்களுக்கு மேல் மழை இருக்கும், அமேசான் காடுகளில் மட்டுமே காண முடிந்த பல தாவரங்களை இங்குள்ள மன்னவன் சோலாவில் காண முடியுமாம். குறிப்பாக பெரணி என்ற ஒரு வகை தாவரம், அது காடுகளில் காண கிடைப்பது தான் எனினும் மிகவும் தொன்மையான தாவரம். பூக்கள் பூக்காத காலத்து தாவரம் அது, கிட்டத்தட்ட ஐம்பது மில்லியன் ஆண்டுகள் பழமையானது. தென்னை மரம் போல வளர்ந்திருக்கும் பெரணிச் செடி, முழுக் கூட்டிலைகளையும் சக்கரம் போல வளைத்து பின்பு வளர வளர இலைகளை விரிக்கும் சுருள் பேரணியையும் கூட இங்கு காணலாம். அந்த தாவரம் மழைக் காடுகளில் பொதுவாக செடியாகவே காணக் கிடைக்குமாம். காந்தளூரில் பெரணி மரமாகவே இருக்கிறது என்றால் அந்த மலையும் அதன் தாவர தொகுப்புகளும் எவ்வளவு தொன்மையானவை என்பதை நினைத்து பார்க்கவே சிலிர்ப்பாக இருந்தது. இந்த தோட்டத்தில் விளைந்த பழங்களை இங்கேயே வெளியில் விற்பனைக்கு வைத்திருப்பார்கள், வாங்கி சுவைக்கலாம் என்றார் ஆனால் எங்களுக்கு அதிர்ஷ்டம் இல்லாமல் போய்விட்டது, அப்போது தான் பறித்த பழங்களை சந்தைக்கு அனுப்பி இருந்தார்கள்.

அழகழகாய் காய்த்தும் பழுத்தும் தொங்கிய ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு மரங்களை பார்வையிட்டபடியே நடந்து போனோம். நிறைய வண்ணங்களில் அழகழகான பெரிய பூக்களை பார்த்தது மனதிற்குள் ஒரு குதூகலத்தை ஏற்படுத்தியது, ஆங்காங்கே நின்று ஒளிப்படங்களை எடுத்து கொண்டு நகர்ந்தோம். அங்கு விளையும் பச்சை ஆப்பிளும், பேசன் பழங்களும் மிக சுவையாக இருக்குமென்று கூறிய தேக்கன், சற்று தொலைவிலேயே இருக்கும் கடைகளில் தான் இங்குள்ள பழங்களை விற்பார்கள் என்பதால் கவலை வேண்டாம் என்றார். பேசன் பழம் மரத்தில் தான் காய்க்கும் என்று எண்ணி இருந்தோம் ஆனால் அங்கு தோட்டத்திற்கு போன பிறகு தான் அது ஒரு கொடி வகை என்பதும் சூரிய வெளிச்சத்திற்காக உச்சிக் கிளை வரைக்கும் கூட படரும் என்பதும் தெரிந்தது, அதற்கு கொடித் தொடை என்ற பெயரும் பொருத்தமாகவே தோன்றியது, தமிழர்களின் அறிவை மெச்சாமல் இருக்க முடியவில்லை.

எத்தனை பழங்களை பார்த்தாலும் என் குழந்தைகளுக்கு பிடித்த இரண்டு பழங்கள் மாவும் பலாவும் தான். அதனால் அவர்கள், "என்ன இங்க மாமரம், பலாமரமெல்லாம் இல்லவே இல்லை, வெளில வரும் போது கூட நிறைய பலா மரங்களை பார்த்தோமே" என்றார்கள். கேரளாவில் பலா மிக அதிகமாக கிடைக்கும், அதை கேரள மக்கள் சக்கை என்றே அழைப்பார்கள். இந்த சக்கை தான் வெளிநாட்டவர்களின் வாயில் சரியாக நுழையாமல் ஜாக் பிருட் என்றானது என்று எங்கள் பேச்சு பலாவை சுற்றி மொய்க்க தொடங்கியது.

திருவனந்தபுரத்தில் நாங்கள் ஒன்றரை ஆண்டு காலம் வசித்த போது, எங்கள் வீட்டை சுற்றி அழகான ஒரு தோட்டம் இருந்தது. நல்ல இனிப்பான கொய்யாவை தரும் கொய்யா மரங்களும், செவ்விளநீர் மரங்களும் இருந்தன. பின் வீட்டில் பலா மரம் இருந்தது, அவர்கள் வீட்டில் பலாப் பழம் எடுத்தால் அதில் பாதியை அப்படியே எங்களுக்கு கொடுத்து விடுவார்கள். தேன் ஊற்றாமலேயே தித்திக்கும் சுவையான பலாச் சுளைகளின் சுவையானது இன்றும் என் நாவிலிருந்து அகலவில்லை. அதே போல எதிர் வீட்டில் இருந்த பெரிய மாமரத்தில் இருந்து ஒரு சமயம் நாலு சாக்களவுக்கு மாங்காய்களை பறித்தார்கள். அதில் ஒரு பத்து, பதினைந்து காய்களை அப்படியே எங்களுக்கு தந்தார்கள், அவை பழுத்த பிறகு அதை வைத்திருந்த அரிசி பானையே மணத்து கிடந்தது. அந்த சுவையெல்லாம் நகரத்து கடைகளில் கிடைக்கும் பழங்களில் எதிர்பார்க்கவே முடியாது. அந்த ஊரில் இருந்த வரை நிறைய யானைகளின் அட்டகாசங்களை எல்லாம் கதைகளாக கேட்டிருக்கிறோம். சக்க மாடன் என்று பலாப் பழத்தை மட்டுமே விரும்பி உண்ணும் ஒரு யானையின் கதையை இன்று வரை என் குழந்தைகளுக்கு சொல்லிக் கொண்டே இருப்பேன். கைநிறைய பழங்களும், வாய் நிறைய கதைகளையும் நிறைத்துக் கொண்ட இனிப்பான நாட்கள் அவை.

அடுத்து நாங்கள் போன செம்புற்று(ஸ்ட்ராபெரி) தோட்டத்தில் பழங்களை மிக சொற்பமாகவே பார்க்க முடிந்தது, அனைத்து பழங்களும் முக்கால் வாசி பரிக்கப்பட்டிருந்தன, நாங்க பார்க்கவென்று இருந்தது போல நாலைந்து மட்டுமே மிச்சமிருந்தது. செம்புறை கொண்டு செய்யப்பட்ட மிட்டாய்கள், ஜாம் மற்றும் உலர் பழங்கள் என்று சிலவற்றை வாங்கி கொண்டு அடுத்த இடத்திற்கு கிளம்பினோம். அந்த இடத்தில் பல திரைபடங்களில் காணாலாம் என்றும் அடிக்கடி அங்கு ஷூட்டிங் எடுப்பார்கள் என்றும் கூறினார்கள். அங்கு போய் நின்ற உடனேயே அற்புதமான ஒரு நறுமணம் நம் நாசியை வரவேற்றது, அது என்ன நறுமணம் என்பதை அடுத்து சொல்கிறேன்.

தொடர்ந்து பயணிப்போம் .......

20250617134918773.jpg