மணம் செய்துக் கொள்வேன் என்று வாக்களித்தான் காதலன்.
காலம் கரைந்ததே அன்றி , திருமணம் செய்ய நேரம் கனியவில்லை .
மறைந்து மறைந்து வந்து காதலியைச் சந்தித்துச் செல்வான் அவன்.
இப்போது அவன் வந்தே பல நாட்கள் ஆயிற்று .
காதலன் வருகைக்காக அவனது காதலி காத்திருக்கிறாள்.
நீண்ட பிரிவு அவளை நிலை குலைய வைத்திருந்தது. .
அவள் வடிவழகு குறைந்து, உடல் மெலிந்து இருக்கிறாள் .
உடல் மெலிந்ததால் அவள் அணிந்த வளையல்கள் கழன்று விழுகின்றன.
அதைக்காணும் ஊரார் "இவளுக்கு என்ன நேர்ந்தது ?" என்று தங்களுக்குள் பேசிக் கொள்வது மட்டுமின்றி , அவளிடமே காரணத்தைக் கேட்கிறாள்.
ஊர் பேசும் பேச்செல்லாம் தோழிக்கும் தெரிய வருகிறது .அவளும் துயர் கொள்கிறாள்.
இந்நிலையில் ஒருநாள் தலைவியைக் காண வருகிறான்,
வந்தவன் ஊரடங்க வேண்டுமென்று ஒருபுறம் மறைந்து காத்து நிற்கிறான்.
அவனைக் கண்டு விட்ட தோழி ,பார்க்காதவளைப் போல தலைவியிடம் பேசுகிறாள் .
" தலைவி, பிறை போன்ற வடிவம் கொண்ட உன் நெற்றி அழகை இழந்து விட்டது . நீ அணிந்த வளையல்கள் முன் கையைத் தாண்டி கழன்று விழுகின்றன.
இந்த மாற்றங்களைக் காணும் ஊர் மக்கள் உன்னைத் தூற்றுகிறார்கள்.
இதை வெட்கத்தை விட்டு நானோ, நீயோ உன் தலைவனிடம் சொல்லவில்லை.
கருவுற்றுள்ள பெண் நாரை தான் தங்கி உள்ள மருத நிலத்து வயலில் நெய்தல் நிலத்துக்குச்செல்ல முடியாமல் தவிக்கும்.
அதன் தவிப்பை அறிந்த ஆண் நாரை , கடலில் இருந்து மீன்களை எடுத்து வந்து அதன்வாயில் ஊட்டும்.
இத்தகைய அழகிய காட்சிகளைக் கொண்ட கடற்கரைத் தலைவன்
அந்த நாரையைக் காணும் போது உன் நினைவு அவனுக்கு வர வேண்டும். அல்லவா ?
ஆயினும், உனது நிலைமையை அவன் உணராமல் இருக்கிறான்.
இருக்கட்டும் ,
நாம் சொல்லாவிட்டாலும் உன் கண்ணில் வழியும் நீரைக் கண்ட பிறகாவது அவன் உணர்ந்துக் கொள்வான்" என்றாள்.
இதுவே அந்த நற்றிணைப் பாடல் .
பிறை வனப்பு இழந்த நுதலும், யாழ நின்
இறை வரை நில்லா வளையும், மறையாது
ஊர் அலர் தூற்றும் கௌவையும், நாண் விட்டு
உரை அவற்கு உரையாம்ஆயினும், இரை வேட்டு,
கடுஞ் சூல் வயவொடு கானல் எய்தாது,
கழனி ஒழிந்த கொடு வாய்ப் பேடைக்கு,
முட முதிர் நாரை கடல் மீன் ஒய்யும்
மெல்லம் புலம்பற் கண்டு, நிலைசெல்லாக்
கரப்பவும் கரப்பவும் கைம்மிக்கு,
உரைத்த தோழி! உண்கண் நீரே. - ( நற்றிணை 263)
நெய்தல் திணைக்குரிய இப்பாடலை இயற்றியவர் இளவெயினனார் என்னும் புலவர்
இப்பாடல் நமக்கு ஒரு குறளை நினைவூட்டுகிறது .
அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்
பலரறியார் பாக்கியத் தால் (குறள் 1141)
ஊரில் பலர் எம் காதலைப் பற்றி பேசும் பழிச் சொற்கள் அறிந்தும் என்னுயிர் போகாமல்இருப்பது , நான் செய்த புண்ணியத்தால் என்பதை பலரும் அறிவதில்லை என்பது இக்குறளின்பொருள் ,
தோழியின் பேச்சு காதலனின் செவிகளை எட்டி இருக்கும்.
விரைவில் மணம் முடித்துகாதலியைத் தன்னுடன் சென்றிருப்பான் என்று நம்புகிறேன் .
மேலும் ஒரு நற்றிணைப் பாடலுடன் சந்திப்போம்
தொடரும்
Leave a comment
Upload