தொடர்கள்
கதை
எங்கிருந்தோ வந்த கல்....-லாவண்யா மணிமுத்து

20250619054919310.jpeg

சென்னை நகரின் பரபரப்பு இப்போது தான் பிரியாவுக்கு வசமாகியிருந்தது. பாட்டியோடு வேளச்சேரியில் வசிக்கிறாள். கிண்டியில் இயங்கும் அலுவலகத்திற்கு தினமும் அரசுப்பேருந்தில் பயணம் செய்வாள். வீடு, அலுவலகம், இந்த ஊர் எல்லாமே பழகுவதற்குள் எட்டு மாத காலம் முடிந்துவிட்டிருந்தது.

“பாட்டி பத்திரமாக இருங்க, யார் வந்து கதவை தட்டினாலும் உடனே திறந்துடாதீங்க, சன்னல் வழியே விவரத்தை கேட்டு அனுப்புங்க. முக்கியமான விஷயம்னா உடனே எனக்கு கால் பண்ணங்க” என்று கூறிவிட்டுகிளம்பினாள். “எல்லாம் நான் பார்த்துக்கிறேன்டா கண்ணு, நீ பத்திரமா போயிட்டு வா” என்று கொஞ்சலோடு வழியனுப்பினாள்.

நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த பேருந்து அனைத்தும் வேறு வழித்தடங்களில் செல்லுபவையாகவே இருந்தது. இவள் செல்லும் பேருந்து ஒரு பத்து நிமிட காத்திருப்புக்கு பிறகு தான் வந்தது. ஏறி சன்னலோர இருக்கையில் அமர்ந்தாள். வீட்டிலிருந்து கிளம்பும் போது பாட்டி சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. எவ்வளவு அன்பான பாட்டி நமக்கு கிடைத்திருக்காங்க என்று நினைத்து மகிழ்ந்தாள். முகத்தில் புன்னகை தவழ்ந்தது. தன் எல்லாமுமாக இருக்கும் பாட்டி தொடுத்து வைத்துவிட்ட மல்லிகையின் மணம் பரவி மனதை வருடியது. அடுத்தடுத்த நிறுத்தங்களை கடந்து பேருந்து சென்று கொண்டிருந்தது.

காற்றில் கலைந்த முடிகளை ரசித்துக் கொண்டிருந்தவள் சன்னல் புரம் திரும்பினாள். ரோட்டில் நிறைய பேர் நடந்து சென்று கொண்டிருந்தனர். எதிர்பாராத நேரத்தில் நடந்து கொண்டிருந்த பெரியவர் ஒருவர் திடீரென்று குனிந்து இரண்டு கற்களை எடுத்து பேருந்தின் மேல் வீசினார். கண்னை மூடித் திறப்பதற்குள் எல்லாம்நடந்து முடிந்திருந்தது. இதை உணர்ந்து ஓட்டுனர் பேருந்தை நிறுத்துவதற்குள் அடுத்த நிறுத்தமே வந்து விட்டது.

அங்கே இறங்கி ஓட்டுனரும், நடத்துனரும் பேருந்தை சோதித்துப் பார்த்தனர். எங்கேயும் பெரிய பிரச்சனை எதுவும் இல்லாததால் நிம்மதி பெருமூச்சு விட்டனர். “புரியாத ஆளா இருப்பான் போல இருக்கு, நம்மவண்டி தான் இவனுக்கு கெடச்சுதா, நல்ல வேலை இதோடு போச்சு , இல்லனா என்குயரி அது இதுனு நம்மளசுத்த விட்ருப்பாங்க”, என்று திட்டிக் கொண்டே வண்டியைக் கிளப்பினர். பிரியா கல்லை எடுத்து எறிந்தவரின்முகத்தை தெளிவாக பார்க்க முடியவில்லை. ஆனால் அந்த நிகழ்வு அவளை வாழ்வின் பின்னோக்கி அழைத்துசென்றது.

கோயம்புத்தூரில் பாட்டி, அப்பா, அம்மா என்று சிறு குடும்பமாக மகிழ்ச்சியுடன் வாழ்ந்த அவர்களின்வாழ்க்கை ஒரு பேருந்து விபத்தினால் தடம் புரண்டது. எங்கிருந்தோ வந்த கல் அப்பாவின் மேல் பட்டதால்அவரும் அம்மாவும் சென்று கொண்டிருந்த வண்டி இடறியது. எதிரே வந்த பேருந்து மோதிவிட்டு சென்றதால்அம்மா இறந்து போக, அப்பாவோ அந்த எதிர்பாராத துர்சம்பவத்தின் கவலையிலேயே ஆழ்ந்திருந்தவர் தன்னிலைமறந்து எங்கோ சென்று விட்டார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இந்தக் கவலையிலேயே அவள் கல்லூரிக்கும் போகவில்லை. அழுது கொண்டே இருந்தாள்.

பாட்டி தான் அவளுக்கு ஆறுதலாக இருந்தாள். பல கதைகளை எடுத்து கூறி, “வந்த கஷ்டமெல்லாம் நீங்கி நீ நல்ல இருப்ப பிரியா கண்ணு, கவலை படாதே. அப்பா சீக்கிரம் கெடைப்பாரு. உனக்கு ஞாபகம்இருக்கா நீ எட்டாவது படிச்சிட்டு இருக்கும் போது உனக்கு ஒரு தடவ ரொம்ப உடம்பு சரி இல்லாம போயிடுச்சு. கடுங்காய்ச்சல் வந்து நினைவில்லாமே நீ ஆஸ்பத்திரில இருந்த. அப்போ நீ ரொம்ப ஆசைப்பட்டு சேர்ந்தபரதநாட்டியம் அரங்கேற்றம் நடக்க தேதி முடிவாச்சு. உங்க டான்ஸ் மிஸ் வந்து சொன்னாங்க. நாங்க பிரியாகுட்டிக்கு இப்போ உடம்புக்கு முடியல. மொதல்ல அவ சரியாகி வரட்டும் அப்புறம் அரங்கேற்றம்லாம் பாத்துக்கலாம்னு சொல்லி அனுப்பிட்டோம்”.

“உங்க அம்மா நீ பரதம் மேல எவ்ளோ ஆசை வச்சிருந்தனு நல்ல புரிஞ்சு வச்சிருந்தா, உன்கூட பக்கத்தில துணைக்கு அவ இருந்தப்போ, டாக்டர் சொல்லிருக்காரு, பிடிச்ச விஷயத்தை பத்தி ஏதாச்சும் பேசிக்கிட்டே இருங்க அவங்க நினைவு சீக்கிரமா வந்திடும், உடம்பும் சரியாகும்னு சொல்லிருக்காரு”. உங்க அம்மா உடனே,“அரங்கேற்றம் தேதியை சொல்லி நீ அழகா மயில் கழுத்து நேரத்துல பரத நாட்டியம் டிரஸ் போட்டுக்கிட்டு ஆடுறதபாக்க எவ்ளோ ஆசையா இருக்கு கண்ணு. சீக்கிரம் எந்திரி , டான்ஸ் கிளாஸ் போலாம்னு”, சொல்லிட்டேஇருந்திருக்கா.

“அடுத்த நாளே நீ கண்முழிச்சிட்டே. எந்திரிச்சு கொஞ்ச நேரத்திலே டான்ஸ் கிளாஸ் எப்போ போலாம்னுதான் கேட்ட. எங்களுக்கெல்லாம் ஒரே ஆச்சர்யமா போச்சு. ஆனா நீ ரொம்ப நல்லா சிறப்பா அந்தஅரங்கேற்றத்தை முடிச்ச. அவ்ளோ தைரியசாலி பொண்ணு நீ. இப்போ பெருசாயிட்ட. படிச்சு முடிச்சு வேலைக்குபோக போற. எவ்ளோ தைரியமா இருக்கனும். இப்டி அழுதுட்டே இருக்க கூடாது கண்ணு, நல்லதே நெனைச்சாநல்லதே நடக்கும்”, என்று கூறி அவளை தேற்றினாள். தோழிகள் வந்து கல்லூரிக்கு வருமாறு வற்புறுத்தினர். அப்பாவின் நண்பர் வேதா மாமாவும் இரண்டு நாளுக்கு ஒருமுறை வந்து பேசிவிட்டு போவார். அவரும்“காலேஜுக்கு போம்மா, இப்படியே எத்தனை நாள் வீட்டுக்குள்ள இருப்ப. அடுத்து என்ன செய்யிறதுனு பாரு மா”,என்று கூறினார்.

கடைசி வருடம் படிப்பை முடிக்க இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே இருந்தது. ஏற்கனவே கேம்பஸ்நேர்காணலில் தேர்வாகி சென்னையில் வேலை தயாராக இருந்தது. மீண்டும் கல்லூரிக்கு செல்ல ஆரம்பித்தாள். வெளியே சென்று வந்தது அவளுக்கு பெரிய மாற்றத்தை தந்தது. பொறுப்பு அதிகரித்துள்ளது என்பதை உணர்ந்துநன்கு படித்து பரீட்சை எழுதினாள்.

கல்லூரி முடிந்த அடுத்த மாதத்தில் வீட்டை வாடகைக்கு விட்டு, பொறுப்பை வேதா மாமாவிடம்கொடுத்துவிட்டனர். பாட்டியும் பிரியாவும் சென்னையில் குடியேறினர். இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு வந்தோம் என்று நினைக்கையிலே மீண்டும் பழைய ஞாபகம்.

எங்கிருந்தோ வந்து இந்த ரோட்டில் தந்தையோடு நடந்து சென்று கொண்டிருந்த சுஷ்மி, அங்கேபோகும் வண்டிகளை எல்லாம் சோகமாக பார்த்தவாறு நடந்து வந்த அந்த பெரியவரைப் பார்த்தாள். வேகமாக ஓடிவந்து அவர் கையை பிடித்துக் கொண்டாள். அவரும் அந்த சிறுமியை பார்த்து தயங்கியவாறே நின்றார். முகம்வாடிப் போய் பசி மயக்கத்தில் இருக்கிறார் என்று பார்த்தவுடனேயே தெரிந்தது. பக்கத்தில் ஒரு உணவகத்திற்குஅழைத்து சென்று உணவு வாங்கி கொடுத்தனர். அவர் சாப்பிட்டு முடிக்கும் வரை பொறுமையாக காத்திருந்துவிட்டு, “என்ன ஆச்சு தாத்தா?” என்று கேட்டாள். உதடுகள் துடித்தன, ஆனால் பதில் சொல்லமுடியாமல்விம்மினார்.

20250619055040434.jpeg

“விடு பாப்பா வேற எதுவும் கேட்டு அவரை கஷ்டப்படுத்த வேண்டாம், அட்ரஸ் கேட்டு கொண்டு போய்விட்டுட்டு வந்திடலாம்” என்று அப்பா சொல்லிவிட்டு, அந்த தாத்தாவிடம் “ஐயா நீங்க எங்க இருந்து வரீங்க?” என்று அன்போடு விசாரித்தார். மலங்க விழித்தவரின் கைகளை ஆதரவாக பற்றினார். அவரை ஒரு ஆட்டோவில் காவல் நிலையம் அழைத்து சென்று அங்கே விவரங்களை பதிவிட்டார்.

கூடவே அதிகாரியிடம், “எனக்கு தெரிந்த காப்பகம் ஒன்று இருக்கிறது , இவரை அங்கே சென்று தங்கவைக்க நான் ஏற்பாடு செய்யவா? என்று கேட்டார். அதிகாரி அதற்கு ஒத்துக்கொண்டவுடன் காப்பக தலைமைஅலுவலரிடம் தொலைபேசியில் பேசி விவரம் தெரிவித்தார். அவர்கள் உடனே அவரை அழைத்து வரசொன்னார்கள். அதிகாரியின் அனுமதி கடித்ததோடு காப்பகத்தில் அந்த முதியவரை சேர்த்தனர்.

இரண்டு மாதத்தில் சுஷ்மிக்கு பிறந்தநாள் வந்தது. அதனால் அவள் அந்த தாத்தாவை வீட்டுக்கு கூடி வரவேண்டும் என்று நினைத்தாள். அப்பா அம்மா இருவரும் அதற்கு சம்மதம் தெரிவித்தனர். ஏன் என்றுதெரியவில்லை அவர்களுக்குள் இனம்புரியாத ஒரு பிணைப்பு உண்டானது. எதுவும் பேசாவிட்டாலும் சுஷ்மியைபார்க்கும் போதெல்லாம் அவர் முகத்தில் சிறு மின்னல் கீற்று போல் ஒரு மாற்றம் வருவதை கவனித்தனர். அதனால்முடிந்த வரை அடிக்கடி அவரை சென்று பார்த்து வந்தனர்.

அன்று பிரியாவிற்கு பிறந்தநாள்.

பிறந்தநாள் கொண்டாடும் மனநிலையில் அவள் இல்லை. ஆனால் பாட்டி தான் விடாப்பிடியாக “புதுசுபோட்டுக்கோ , சாமி கும்பிட்டுட்டு, இந்த கேசரியை கொண்டு போய் பக்கத்து வீடு பாப்பாவிற்கு குடுத்துட்டு வா. அவ்ளோ தான் அப்புறம் நீ உன் ஆபீஸ் வேலைய பார்க்க ஆரம்பி நான் என்ன சொல்லப்போறேன்”, என்றுகூறினார். பாட்டியின் அன்பான கட்டளையை மறுக்க மனமில்லாமல் அவளும் தயாராகி கேசரியை ஒரு டப்பாவில்போட்டு எடுத்துக் கொண்டு சுஷ்மி வீட்டுக்குச் சென்றாள்.

சுஷ்மி தாத்தாவை வீட்டுக்கு கூட்டி வந்த சந்தோஷத்தில் துள்ளி குதித்து கொண்டிருந்தாள். அவருக்குதன்னுடைய பரிசுகளை எல்லாம் எடுத்து வந்து காட்டினாள். தன்னுடைய சின்ன வயது புகைப்படங்களை எல்லாம்எடுத்து காட்டினாள். பலூன் கொண்டு வந்து அவரின் கையில் கொடுத்தாள். என்ன செய்தாலும் முகத்தில் எந்தசலனமும் இல்லாமல் அவ்வப்போது மெல்லிய புன்னகை மட்டும் வந்தது தாத்தாவிடம். அழைப்பு மணிச் சத்தம்கேட்டவுடன் தாத்தாவின் முகத்தில் ஒரு மாறுதல் தெரிந்தது. அவருக்கு இது எங்கேயோ கேட்டது போல்இருந்தது. சுற்றிச் சுற்றி பார்த்தார். வேகமாக எழுந்து கதவை நோக்கி சென்றார்.

அங்கே போய் அப்படியே சிறிது நேரம் நின்றார். சுஷ்மி வீட்டில் யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. என்னகேட்டாலும் ஒன்றும் சொல்லாமல் இருப்பவர் இன்று இந்த சத்தம் கேட்டதில் இருந்து வேறு மாதிரியாக நடந்துகொள்கிறார் என்று யோசித்தனர். உடனே அவர்களும் கதவுக்கு அருகே சென்றனர். எப்படி திறப்பது என்னசெய்வது என்று தெரியாமல் முதியவர் தடுமாறுகிறார் என்பதை புரிந்து கொண்டு அம்மா கதவை திறந்தார்.

திறந்தவுடன் தாத்தா அங்கே வந்து நின்ற பெண்ணை திகைத்துப் போய் பார்த்தார். அவர் கண்ணில்இருந்து கண்ணீர் வழிந்தது.

நினைவுகளை இழக்க ஒரு நொடி ஆகும் எனில் இழந்த நினைவுகள் மீண்டுவரவும் ஒரு நொடி தான் தேவை.

“அம்மாடி பிரியா”, என்று கூறினார். அதுநாள் வரை அவர் பேசி கேட்டிராதவர்கள்முதல் முதலாக அவருடைய குரலை கேட்டனர். அப்படியே பிரியாவை அணைத்து உச்சி முகர்ந்தார். இவர்கள்என்ன நடக்கிறது என்று புரியாமல் பார்த்துக் கொண்டிருக்கையில் ஸ்தம்பித்து நின்ற பிரியாவும் “வந்துடீங்களாஅப்பா”, என்று அழுதவாறே தந்தையை கட்டியணைத்து முத்தமிட்டாள். தொலைந்து போன பிரியா அக்காவின்தந்தை தான் தாத்தா என்பது சுஷ்மியின் வீட்டினருக்கு புரிந்தது. அவர்களின் மனம் நிறைந்தது. சுஷ்மியோ, “ஹய்யா தாத்தா இனிமேல் எப்போவும் பிரியா அக்கா வீட்டிலேயே இருக்க போறாங்க ஜாலி! ஜாலி!”, என்றுசொல்லிக்கொண்டே எல்லோருக்கும் சாக்லேட் கொடுத்தாள்.

எங்கிருந்தோ வந்த கல் பிரியாவின் குடும்பத்தை திசை மாற்றியது, எங்கிருந்தோ வந்த இந்த குட்டிதேவதை சுஷ்மி இவர்களை ஒன்று சேர்த்தாள். பிறந்த நாளன்று பிரிந்தவர்கள் ஒன்று கூடினால் வேறென்ன?

ஆனந்த கொண்டாட்டம் தான்!!