தொடர்கள்
பொது
‘ஒத்த தட்டு’ தராசு!-மாலாஸ்ரீ

20250625190735200.jpeg

பண்டைய காலகட்டங்களில் தமிழகம் உள்பட பல்வேறு ராஜ்யங்களில் மக்களிடையே ‘ஒத்த தட்டு’ தராசு (எ) தூக்கு கோல் தராசு பயன்பாட்டில் இருந்து வந்தது. இதை ‘வெள்ளிகாவரை’ என்றும் அழைத்தனர். வெள்ளைகோல் வரை என்ற தமிழ் சொல்தான், வெள்ளிகாவரை எனும் வழக்கு சொல்லாக மாறிவிட்டது. இந்தத் தராசில் சில வெள்ளைநிற கோடுகள் வரைந்திருப்பர். இத்தராசின் தூக்குகோளில் உள்ள கோடுகள்தான், எடைகளுக்கான குறியீடாகும்.

தராசு என்றால் எடைக்கல். பொருட்களை வைப்பதற்காக 2 தட்டுகள் இருக்கும். ஆனால், வெள்ளிகாவரை தராசில் ஒரு தட்டுதான் உண்டு. தூக்குகோலில் வரைந்துள்ள கோடுகள்தான் எடையளவு. ஒவ்வொரு கோடும், ஒரு எடை அளவுக்கானது. தூக்குகோலில் சின்ன நூல் கயிறு கட்டியிருப்பர். எடைக்கு உண்டான கோட்டுக்கு கயிற்றை நகர்த்திய பிறகு, அக்கோட்டிலேயே கயிற்றை இறுக்கி, தராசு தட்டில் பொருட்களை வைத்து எடை போட வேண்டியதுதான்.

தூக்குகோல் படுக்கை வசதில் சமமாக இருந்தால், அது சரியான எடையைக் காட்டுகிறது என்று பொருள். இப்போது புழக்கத்தில் இருக்கும் இரட்டை தட்டு தராசுகளைவிட, ஒத்த தட்டு தராசுக்கு சில விசேஷ தன்மை உண்டு. இதில் பொருட்களை அளவிட எடைக்கற்கள் தேவையில்லை.

இதுகுறித்து காரைக்காலை சேர்ந்த பாரம்பரிய புழங்குபொருள் சேகரிப்பாளர் அய்யனார் அயோத்திராமன் கூறுகையில், ‘‘ஒத்த தட்டு தராசு காய்கறி, பழங்கள், பருத்தி, புளி, கருவாடு போன்ற பொருட்களை எடை போடுவதற்குப் பயன்படுத்தப்பட்டது. சில பகுதிகளில் இதை ‘தூக்கு தராசு’ என்பர். இதுபோன்ற தூக்கு தராசு, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பயன்படுத்தப்பட்ட வந்தது. தற்போதைய நவீன காலத்தில் இத்தராசின் பயன்பாடு நிறுத்தப்பட்டுவிட்டது. தமிழ்நாடு, ஒடிசா, சட்டீஸ்கர், கேரளா, ஜார்கண்ட் மாநிலங்களில் உள்ள பழங்குடியின மக்கள் இன்றளவும் ‘ஒத்த தட்டு’ தராசை பயன்படுத்தி வருகின்றனர். சீனாவிலும் இந்த ஒத்த தட்டு தராசு பயன்பாட்டில் இருந்து வருகிறது!’’ என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.