மகன் லண்டனில் சொந்த வீட்டில் குடி வந்து அஞ்சு ,ஆறு வருஷம் ஆயிடுச்சு..
ஆசையோடு கூப்பிடரான். ஏதோ ஒரு காரணம். தட்டிக்கிட்டே போகுது. குடி வந்தவுடன் கொரானாவின் ஆட்டம்.
உலகம் பூராவையுமே உலுக்கிடுச்சு. அடுத்த வீட்டையே எட்டிப் பார்க்க முடியல. நாடு விட்டு நாடு எங்க போறது.
ஒரு எட்டு போய் பார்த்துட்டு வந்துடலாம்னு நினைச்சா, உடனே கிளம்பிப் போற ஊரா அது. லண்டன். கிட்டதட்ட பத்து மணி நேர பயணம். விசா வேற வாங்கணும்.
மாமிக்கோ மூட்டு வலி. ஃப்ளைட்ல ட்ராவல் பண்ண முடியாது. என் மகனும் அம்மாவின் மூட்டு வலிக்கு, ஹாஸ்பிடல்,ஆபரேஷன்னு எல்லா ஏற்பாடும் பண்ணிட்டான்.
ஒரு வழியாக, எல்லாம் சரியாகி, நாங்களும் பல கனவுகளை ஏந்தி புறப்படத் தயாரானோம்.என் மகன் என்னை ஃபோனில் அழைத்து,
“அப்பா பிரிட்டிஷ் ஏர்வேஸில் டிக்கெட் வாங்கிட்டேன்.
journey break இல்லாமல் செளகர்யமா வந்துடலாம்.வீல் சேர் வசதிக்கும் ஏற்பாடு பண்ணியிருக்கேன்.செளகர்யமா வந்து சேருங்கப்பா”. எங்கள் வருகைக்கு அவனும் ஏங்கி இருந்தான்.
ஹீத்ரோ ஏர்போர்ட்டில் இறங்கியதும்.சில்லென்ற காற்றும்,குளிரும் எங்கள் உடலை நடுங்க வைத்தது.
என் பேத்திகள் இருவரும் ஓடி வந்து “ஹை பாட்டின்னு” கட்டிண்டு, கொண்டு வந்த கோட்டை எங்களிடம் தந்து, உடனே அணியச் சொன்னர்.
எல்லோரும் அமர்ந்து செல்ல பெரிய கார்.எங்களை ஏற்றிக் கொண்டு வேகமெடுத்து, அடுத்த பதினைந்து நிமிடத்தில் புது வீட்டின் வாயிலைத் தொட்டது.
வீட்டின் உள்ளே நுழைந்ததும் மன மெங்கும் ஆனந்தம். வீட்டைச் சுற்றிப் பார்க்க ஆசைப்பட்டேன்.வீட்டின் பின்புறம் பெரிய கார்டன்.நாங்கள் தங்குவதற்காக புதுசா ஒரு ரூம் கட்டி வைத்திருந்தான்.
ஃப்ளைட்ல என்ன சாப்பிட்டிங்களோ?.சாப்பிட வாங்கன்னு என் மகன் அழைத்தான். ’வாங்க எல்லாரும் ஒன்னா உட்கார்ந்து சாப்பிடலாம்’னு நானும் சொன்னேன்.
’இல்லப்பா நீங்க முதல்ல சாப்பிடுங்க.நாளைக்கு நாமெல்லாம் ஒன்னா சாப்பிடலாம்’ என்றான், என் ஆசையில் ஆட்டம் கண்டது.
மறு நாள் “அப்பா சமையல் ரெடி.டேபிள் மேல எல்லாம் வச்சிருக்கு. நீயும் அம்மாவும் சாப்பிடுங்க.” என்றான்.
“நீங்கள்ளாம் சாப்பிடலையா?”
வாங்க. எல்லோரும் ஒன்னா உட்கார்ந்து சாப்பிடலாம்”. நான் ஆசையோடு அழைத்தேன்
“உங்க பேத்திகள் பிரேக் பாஸ்ட்டை முடிச்சுட்டு, ஸ்கூலுக்கு போயாச்சு.
உன் மருமகளும் ஆபிசுக்கு கிளம்பி போயாச்சு.எனக்கும் ஆபீஸ் கால் இருக்கு. கொஞ்ச நேரம் ஆகும். நீங்க எனக்காக வெயிட் பண்ணாதீங்க”. இது தான் எங்கள் ரொட்டீன் என்பது போல் இருந்தது என் மகனின் பதில்.
மறு நாள் , மறு நாள், மறு நாள் ஏதோ ஒரு காரணம். ஒன்னா உட்கார்ந்து சாப்பிடும் பழக்கமில்லாமலே போயிடுச்சு.
“அப்பா, வர ஞாயிற்றுக் கிழமை, பக்கத்தில் இருக்கும் சங்கீதாவுக்கு டிஃபன் சாப்பிட போகலாம் என்றான்”.
நானும் ஆசையோடு இருந்தேன்.அங்கேயாவது எல்லோரும் ஒன்னா உட்கார்ந்து சாப்பிடலாம் என்ற கனவோடு.
“அப்பா. வழக்கத்திற்கு மாறா இன்னிக்கு கும்பல் ரொம்ப அதிகம் இருக்கு. நீயும் அம்மாவும் அந்த டூ சீட்டர்ல உட்கார்நதுடுங்க. நாங்கள்லாம் அங்க இருக்கிற ஃபோர் சீட்டில் போய் உட்கார்ந்துக்கிறோம்”.
இங்க வந்தும் அந்த அதிர்ஷ்டம் இல்லையா ..
கடைசி வரை அந்த ஒன்னா உக்காந்து சாப்பிடற நேரம் மட்டும் வரவில்லை.
இந்த ஏக்கத்தோடும் இறுக்கத்தோடும் நாட்கள் நகர, ஹீத்ரோ ஏர் போர்ட்டில் எல்லோருக்கும் கை அசைத்தோம்.
Leave a comment
Upload