அடுத்த தெருவில் உள்ள அகிலாவின் வீட்டு. கொலுவுக்கு அம்மாவால் இன்று போக முடியவில்லை. என்னைப் போகச் சொன்னாள்.
எனக்கு ரொம்ப நாட்களாக அவள் வீட்டுக்கு போக ஆசைதான். கொலுவை பார்க்க இல்லை.கொலுப் பொம்மை மாதிரியே அழகாக அந்த வீட்டில் இருக்கும் என் மாமன் மகள் அகிலாவை பார்க்கத்தான்.
அது ஒரு கிராமம். வயதுப் பெண் ஒருவரின் வீட்டிற்கு செல்வதும் அந்த பெண்ணுடன் பேசுவதும் அவ்வளவு சுலபமில்லை.இந்த காலத்தில் இப்படியும் ஒரு குடும்பம்.
என்னுடைய அப்பாவுக்கும் அவளுடைய அப்பாவுக்கும் இடையே ’ஏதோ கசமுசாவாம்.’ இதுவரை வெளிவராத இராணுவ இரகசியம் அது. ஆனால், அம்மாக்கள் மட்டும் நண்பர்கள்.
அகிலாவின் அழகிய முகம் நினைப்புக்கு வரவே, ’சரி, போய்விட்டு வருகிறேன்’ என்றேன். ’போகும்போது இந்த பூ, பழத்தை அங்கு அம்பாள் பூஜைக்கு கொடுத்து விடு’ என்று சொல்லி எடுத்து போகச் சொன்னாள் அம்மா.
அடுத்த ஐந்து நிமிடத்தில் அகிலாவின் வீட்டில் ஆஜரானேன் நான். பூவையும் பழத்தையும் பெற்றுக் கொண்ட அவள்’என்ன இது புதுசா இருக்கே?’ என்று கேட்டுக் கொண்டே வாங்கிக் கொண்டாள்.
’உன்னை பெண் பார்க்கத்தான் வந்திருக்கிறேன்’ என்று சொன்ன என்னை பார்த்து,’போங்க அது எல்லாம் எங்க நடக்க போகுது? எங்க அப்பாவைக் கண்டாலே உங்க அப்பாவுக்கு பிடிக்கல’ என்று சலித்துக் கொண்டாள்.
அவளுடைய அம்மா உள்ளே சமையலறையில் வேலையாய் இருக்கிறாளாம்.அவளுடைய அப்பா வீட்டில் இல்லை என்பதை புரிந்து கொண்டேன்.
கொலு பார்த்து விட்டு திரும்பும் பொழுது ஒரு டப்பியில் கொஞ்சம் பட்டாணிச் சுண்டல் போட்டுக் கொடுத்தாள்.வாசல் வரை வந்த அவள்,’டப்பியை திறந்து பார்.சுண்டல் போதுமா?என்று சொன்னாள்.
டப்பியை திறந்தேன்.பார்த்தேன்.அதில் அகிலாவின் ஃபோன் நம்பர் எழுதியிருந்தது.
’இரவு 8 மணிக்குப் பிறகு பேசுங்கள்’ என்றாள்.எனக்கு ஏதோ லாட்டரியில் பரிசு விழுந்தது போல கனவில் மிதந்தேன்.
இரவு எட்டு மணி எப்போது ஆகும் என்று இருந்தேன்.
அவளுடன் ஃபோனில் பேசினேன்.அவள் சொன்ன விவரத்தைக் கேட்டு திடுக்கிட்டுப் போனேன்.அவளுக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளையை அவளுக்கு துணியும் பிடிக்கவில்லையாம். ஃபோனில் விவரங்களைச் சொன்ன அவள் whatsappஇல் பையனுடைய விவரங்கள் எல்லாவற்றையும் அனுப்பிவைத்தாள்.
’உன்னைத்தான் கல்யாணம் பண்ணிக்க முடியல. இந்த பையனாவது நல்ல பையனா? பார்த்து சொல்லு. எங்க அப்பாவுக்கு விவரம் போதாது’ என்று சொல்லி அழுது கொண்டே ஃபோனை வைத்து விட்டாள்.
என் உள்ளே இருந்த துப்பறியும் சாம்பு வெளியே வந்தான்.
மறுநாள் காலைஅந்தப் பையன் பணிபுரியும் அலுவலகத்திற்கு சென்றேன். அந்தப் பையன் கொடுத்த விவரம் அனைத்தும் பொய் என்று புரிய வந்தது. நல்லதாய் போயிற்று என்று நினைத்தேன்.
அவனுடைய ஐடியை வைத்து திருமண இளைய தளத்தில் போய்த் துழவினேன். இளைய தளத்தில் அவனின் விவரங்கள் பட்டாபிராமன், கோதண்டராமன், சீதாராமன் என்று வெவ்வேறு திருநாமங்களில், வெவ்வேறு ஃபோட்டோக்களில், வெவ்வேறு அலுவலகங்களில், வெவ்வேறு உயர்ந்த பதவிகளில், உயர்ந்த சம்பளத்தில்… பார்த்த எனக்கு இவன் ஓர் ஏமாற்றுப் பேர்வழி என்பதை புரிந்து கொள்ள அதிக நேரம் ஆகவில்லை.
மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அன்று மாலை அகிலாவின் வீட்டிற்கு போனேன்.அவளுடைய அப்பா டிவியை முறைத்துக் கொண்டே என்னையும் முறைத்தார்.நானும் ஃசோபாவின் ஓரமாய் உட்கார்ந்துக் கொண்டு டிவியை பார்க்கத் தொடங்கினேன்.
டிவியில் அண்மைச் செய்தி ஒன்று வந்தது. திருமண இணைய தளத்தில் ஏமாற்றிய வாலிபன்’…அவர் பார்த்த மாப்பிள்ளைதான் அது.அவன் புராணத்தை டிவியில் விலாசித் தள்ளிவிட்டார்கள். மாமாவின் முகம் மங்கியது.
திடீரென்று,’வாப்பா,உட்காரு’என்றார். அத்தானுக்கு ஃகாபி கொண்டு வந்து கொடு’ என்றார் அகிலாவிடம். கடவுளாக தென்பட்ட டிவியை பார்த்து ஒரு கும்பிடு போட்டேன். கிளம்பும் போது,’அம்மாவை சாயந்திரம் பார்ப்பதாகச் சொல்’என்றார்.
பையனைப் பற்றி எனக்குத் தெரிய வந்த தகவல்களை அவரிடம் சொன்னேன். ’உனக்கு இல்லை எனத் தெரிந்தும்,நீ செய்த உதவிக்கு ரொம்ப நன்றி’என்றார்.
புறப்படும்போது தாவணியால் முகத்தைதுடைப்பது போல் என்னைப்ப்பார்த்து புன்னகைத்தாள் அகிலா.
ஒவ்வொரு நவராத்திரியின் போதும் அவள் கொடுத்த சுண்டல் டப்பி மேலே முதல் படியில் இருந்துக் கொண்டு, எங்களைப் பார்த்து சிரிக்கும். இன்றும் அப்படியே மூன்றாம் வருடமாக.
எங்களுடைய தாஜ்மஹால் அந்த டப்பிதானே?
Leave a comment
Upload