தொடர்கள்
கதை
இணைந்த உறவு வி பிரபாவதி

20250827090343885.jpeg

அன்று தீர்ப்பு. முதல் நாள் இரவிலிருந்தே ஒரு வித மனக்கிலேசம்.

ஒன்றும் புரியாத குழந்தைகள் கோணலும் மாணலுமாக கை கால்களை மடித்து நீட்டி அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தார்கள்.

வசுமதிக்கு நிலா வேளையிலும் மனதும் உடம்பும் தகித்தது. என்ன செய்யப் போகிறோம்? எப்படி இருக்கும்? நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.

"அடுத்தது நம்ப கேசு மா. ரெடியா இருங்க. சொல்லிக் கொடுத்த மாதிரியே சொல்லுங்க. மாத்தி எதுவும் பேசீடாதீங்க" என்றார் அட்வகேட் அர்ச்சணா.

"சரிங்க மேடம், கை காலெல்லாம் ஒதருது" கண்ணீர் மேலிடக் கூறினாள்.

"வசுமதி, கோபால், வசுமதி, கோபால், வசுமதி, கோபால்" மூன்று முறை அழைத்ததும் மெல்ல எழுந்து உள்ளே சென்றாள்..

தெனாவெட்டுடன் ஒரு கோவப்பார்வையுடன் உள்ளே வந்தான் கோபால்.

"என்ன காரணம் மா, நீங்க விவாகரத்து கேட்டுறிக்கீங்க?" நீதிபதி கேட்டதும்.

பொல பொலவென கண்ணீர் வந்தது. கன்னங்கள் நனைத்தக் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, "அவரு நடவடிக்கை எதுவும் சரியில்லமா. குடிப்பதும் அடிப்பதும் கூட பொறுத்துக்கிட்டேன். வேறப் பெண்ணோட சகவாசம் தெரிஞ்சதுமே துடிச்சுப் போயட்டேன்மா. ரெண்டு புள்ளைங்க இருக்கு. பெரிய பொண்ணு இப்பவோ, அப்பவோ வயசுக்கு வந்துரும். இவனால எந்த பாதுகாப்பும் இல்லை. பிரயோசனமும் இல்லைமா. வெலக்கி விட்ருங்க" என்று படபடவென சொல்லி முடித்தாள்.

"கோபால், நீங்க என்ன சொல்றீங்க? நீதிபதிக் கேட்டதும் சொல்ல ஆரம்பித்தான்.

"ஆமாங்கம்மா, தப்புதேன். கண்டும் காணாமப் போகாம, கோர்ட் வரைக்கும் கொண்டாந்துட்டா" என்றான் கோபால்.

"நீ இவ்வளவு பெரிய தப்பை, துரோகத்தைச் செஞ்சுட்டு, நெஞ்ச நிமிர்த்தி வேறப் பேசுறியா? ஒங்களல்லாம், ஒங்கள மாதிரி ஆளுங்களத் தேடி வராங்க பாரு, எல்லாரையும் திருத்தவே முடியாது. கடுமையான தண்டனை கொடுக்கணும்" என்று அங்கலாய்த்தார் நீதிபதி.

"ரெண்டு புள்ளங்களுக்கு வேணும்மா, வீட்டை புள்ளங்க பேர்லயும், எம்பேர்லயும் எழுதித் தரச்சொல்லுங்க. விவசாயம் பன்றதை வச்சு அவரு பொழைச்சுக்கட்டும். நா நாலு வீட்டுல வேலை செஞ்சு பொழச்சுக்குவேன். புள்ளைங்களையும் நானே பாத்துக்கறேன்" என்று தைரியமாக சொன்னாள்.

நாளை தீர்ப்பு என்று கோர்ட் முடிந்தது.

இதோ இன்று தீர்ப்பு. கோர்ட் ஆரம்பித்தது. தீர்ப்பு எழுதும் முன்பு குழந்தைகளிடமும் கேள்விகள் கேட்கப்பட்டது.

"வசுமதி அவர்களுக்கும், குழந்தைகளுக்கும் அவர்கள் கேட்ட அந்த மேலத் தெருவில் இருக்கும் வீட்டைப் பெயர் மாற்றித் தரும்படி கோபாலுக்கு இந்தக் கோர்ட் உத்தரவிடுகிறது".

"இருவருக்கும் இவர்கள் மணவாழ்க்கையிலிருந்து விவாகரத்து வழங்கி இருவரையும் இந்தக் கோர்ட் விடுவிக்கிறது" என்ற தீர்ப்பு வசுமதியின் வயிற்றில் பாலை வார்த்தது.

கோபமாக வெளியேறினான் கோபால். அடுத்த வாரத்தில் வீடு பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

நல்ல பெரிய வீடு.

கோபாலை மயக்கிய அந்தப் பெண் வீடும் போனது. விவசாயத்தையும் கவனிக்காமல் குடித்து குடித்து கும்மாளம் அடித்த கோபாலை விட்டுச் சென்று விட்டதுதான் நிதர்சனம்.

மாலதியும், மகேசும் அப்பாவை மிகவும் நேசித்தார்கள். ஆனால் அதற்கு பாத்திரமாக அவன் நடந்து கொள்ளவில்லை.

சில மாதங்கள் கழித்து

"மாலதி ஒங்கப்பாரு பாவம்டி, குடிச்சிட்டு ரோட்டுல விழுந்து கெடக்காருடி. பாக்கவே பாவமா இருக்கு" கோதை சொன்னதும் மனதைப் பிசைந்தது. உடனே கிளம்பிப் போய்ப் பார்த்தாள். உடல் மெலிந்து, குடித்து குடித்து, ஒரு வித துர் நாற்றத்துடன் கிடந்தான்.

"யப்பா, யப்பா, எழுந்திரிப்பா" .

குரலைக் கேட்டதும் மெல்ல மயக்கத்திலிருந்து கண்களைத் திறந்து பார்த்தான்.

மாலதி வீட்டுக்கு அழைத்து வந்து குளிக்கச் செய்து, துணி மாற்றி, சாப்பாடு குடுத்துப் படுக்க வைத்தாள்.

அதற்குள் விசயம் வசுமதிக் காதை எட்டியது. கோபத்துடன் வீட்டுக்கு வந்தவள் மகளின் செய்கையைப் பார்த்து நொறுங்கிப் போனாள்.

நமக்குக் கணவர் வேண்டாம் என்று நினைத்தோம். பிள்ளைகள் அப்பனை வேண்டாம் என்று நினைக்கவில்லையோ?" குழம்பினாள்.

குழந்தைகளுக்காக வசுமதி பொறுத்துக் கொண்டதைப் போல் கோபாலும் குடியைக் கைவிட்டு விட்டான்.