தொடர்கள்
கதை
கொலு பாக்கேஜ். - கே.ராஜலட்சுமி

20250827094232782.jpeg

நவராத்திரி முதல் நாள். பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தாள் திவ்யா. அன்று ஒரு நாள் ஆபிஸுக்கு லீவு போட்டிருந்தாள். கொலுவின் பொம்மைகளை ஓரிடத்தில் வைப்பதும் பின் மாற்றுவதும் மனதுக்கு திருப்தியாகும் வரை சரி செய்து கொண்டிருந்தாள். ஆபிஸுக்கு கிளம்பிக் கொண்டிருந்த கணேஷிடம் ‘ கணேஷ்! , கொலு எப்படி இருக்கு? ‘ என்றாள். ‘ பைன் திவ்யா! , ரொம்ப ஸ்டிரெயின் பண்ணிக்காதே’ ‘ என்று கனிவுடன் பதிலளித்தான். இந்த காலத்தில் மனைவி இவ்வளவு சிரமப்பட்டு செய்கிறாளே என்ற எண்ணமுடன் சற்றே பெருமையாகவும் இருந்தது அவனுக்கு.

பள்ளிக்கூடம் சென்றிருந்த குழந்தைகள் திரும்பியவுடன் வியந்து பாராட்ட வேண்டும் என்றெண்ணினாள். ஆயிற்று. தானே கொலுவை ரசித்துப்பின் மொபைலில் ஒரு போட்டோ எடுத்து முதலில் அம்மாவுக்கு அனுப்பினாள். ஓய்வு பெற்ற ஆசிரியரான அம்மா சித்ரா பல வருடங்களாகத் தொடர்ந்து மிகப் பெரிய கொலு வைப்பதுடன் நவராத்திரி பத்து நாட்களும் பம்பரமாகச் சுழல்வாள் என்பது அவள் அறிந்ததே. அப்பாவின் உதவியும் அவளுக்கில்லை. அவர் தன் வேலையைப் பார்த்துக் கொண்டு போய் விடுவார். ஓய்வுக்குப் பின்னும் அவள் அதைத் தொடர்வது தான் திவ்யாவுக்கு ஆச்சரியம்.

சித்ராவிடமிருந்து கால். ‘ திவ்யா!!, கொலு சூப்பர் ‘ என்றாள். ‘சரி, கொலு வைப்பது ஒரு நாள் வேலை, அப்புறம் தானே இருக்கு, தினமும் பாயசமும் சுண்டலும் பண்ணனும், நாலு பேரையாவது தினமும் அழைச்சு தாம்பூலம், கிப்ட் கொடுக்கணும், நீயும் கூப்பிடற வீடுகளுக்கு போகணும்’ என்றாள். திவ்யா ‘ அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லம்மா, நீ எந்த காலத்துல இருக்கே? காலம்பற அம்புஜம் மாமி பாயசம் பண்ணி டாண்ணு எட்டு மணிக்குள்ள கொடுத்துடுவா, ஈவ்னிங் ஆபீஸ் விட்டு வரும் போது அவாத்து வாசல்ல வண்டியை நிறுத்தி சுண்டல் வாங்கிண்டு வந்துடுவேன், கால் கிலோ சுண்டல் அறுபது ரூபாயாம், தினமும் வித விதமான சுண்டலாம், நாம கூட்டத்துக்கு தகுந்தாற் போல அரை கிலோ , ஏன் ஒரு கிலோ கூட வாங்கிக்கலாம், உனக்கு வேணா சொல்லு, நான் வாங்கி அனுப்பறேன்’ என்றாள்..

‘ அய்ய்யோ! இது என்னடி புதுசா இருக்கு, எனக்கு ஒரு மண்ணும் வேண்டாம், கை இருக்கு, நான் பண்ணிக்கிறேன்’ என்றாள். ‘ பண்ணிக்கோம்மா, உன் நல்லதுக்கு சொல்றேன், உனக்கு எப்பவும் கஷ்டப்படணும், அப்புறம் புலம்பணும், கொலு பேக்கேஜ்னு வந்தாச்சு, தெரிஞ்சுக்கோ! ‘ என்றாள் திவ்யா. ‘அது என்ன கண்றாவி, அதையும் சொல்லு கேப்போம்’ என சித்ரா முடிக்குமுன் ‘ ஒரு நாளைக்கு இரண்டாயிரம் வரைக்கும் ஆகும்மா, வெத்தல,பாக்கு,சுண்டல், கிப்ட், ப்ளவுஸ் பிட் இப்படி செட்டா கொடுக்கிறா, செட்டுக்கு தகுந்தாற் போல காசு’ என்றாள் திவ்யா. ‘ அப்படியே ஒரு ஆளையும் அனுப்பிட்டா, அவ பாத்ததுப்பா மிச்சத்தையும் னு சொல்லு’ என்றாள் அம்மா. ‘ ‘ போம்மா, உனக்கு கிண்டல் தான், என் பிரண்ட்ஸ் நிறைய பேர் இப்ப பேக்கேஜ் ல இறங்கிட்டா’ என்றாள் அவள்.

‘ இதெல்லாம் எங்க போய் முடியும்னு தெரியல, போ’ என்றாள் சித்ரா. அந்த சமயத்தில் அவளுக்கு கால் வர பேசி விட்டு வந்தவள், ‘ அம்மா, வேற யாருமில்ல , உன் பிரண்ட் கமலா மாமி தான். நான் லீவுன்னு எப்படியோ மூக்குல வேர்த்துடுத்து பாரு, , இப்பவே வா, தாம்பூலம் வாங்கிக்கணும்னு அடம், விட மாட்டா, நான் வண்டிய எடுத்துண்டு ஒரு நடை போயிட்டு வந்துடறேன், இல்லன்னா ஒரு நாளைக்கு பத்து தடவ போன் பண்ணுவா, தொண தொண ன்னு பேச்சு வேற’ என்று புலம்பினாள் திவ்யா. சித்ரா சிரித்துக் கொண்டே ‘ சரி, நான் வச்சுடறேன், நீ கிளம்பு’ என்றாள்.

கமலா மாமி வீட்டு வாசலில் ஆக்டிவாவை நிறுத்தினாள். ‘ வாடி திவ்யா, உக்காரு’ என சோபாவைக் காட்டினாள் கமலா. ‘ ஹாலில் மாமி வைத்திருந்த கொலுவைப் பார்த்துக் கொண்டே திவ்யா, அவள் கொண்டு வந்து தந்த காபியை பருகினாள். மிகவும் எளிமையாகவும், அழகாகவும் அமைந்த கொலுவை பாராட்டினாள். ‘ இன்னிக்கு என்ன மாமி சுண்டல்? ‘ என வினவினாள். ‘ முடியற அன்னிக்கு தான் சுண்டல், மத்த நாளெல்லாம் பழம் தான் அம்பாளுக்கு , சரி நீ என்ன இன்னிக்கு பண்ணப் போற?’ ’ என்றாள் மாமி. ‘ நான் அம்புஜம் மாமி கிட்ட பாயசத்துக்கும், சுண்டலுக்கும் சொல்லிட்டேன், மாமி, தினமும் கொடுத்துடுவா’ என்றாள்.’ அப்ப புண்ணியம் எல்லாம் அவளுக்கு ன்னு சொல்லு’ என்றாள் மாமி.

திவ்யாவுக்கு சுரீரென்று. ‘ மாமி, நான் காசு கொடுத்து தான் வாங்கறேன்’ என்றவுடன், ‘ அது நம்ம வரைக்கும் சரி சாமிக்குமா? அவ பண்ணி வித்தா அவளுக்கு பிஸினஸ், தப்பு இல்ல, ஆனா உனக்கு அதில என்ன புண்ணியம் சொல்லு’ , ‘ இல்ல மாமி, இப்ப தான் வசதி இருக்கே இதுக்கெல்லாம், நாம கொடுக்கற பணம் அவாளுக்கும் உபயோகமா இருக்கும் னு நினைக்கிறேன்’ என்றாள் திவ்யா, ‘ சுத்தி வளச்சு நம்ம சுயநலத்துக்கு இந்த மாதிரி ஏதாவது பேசி சமாதானப் படுத்திக்கிறது, ஒரு துளசி இலைய பிச்சிப் போட்டு ‘ கிருஷ்ணார்ப்பணம்’ னு சொன்னாலே புண்ணியம்னு சொல்லுவா, அதை பிச்சிப் போட ஆள் வச்சிண்டா எப்படி இருக்கும்? அது மாதிரி இருக்குடியம்மா, நீ சொல்றது, என்னமோ கலி காலம், இந்தா இந்த தாம்பூலத்த வாங்கிக்கோ, நான் உங்காத்துக்கு முடிஞ்ச அன்னிக்கு வறேன், ஜாக்கிரத்தையா போய்ட்டு வா’ என்று வாசல் வரை வந்து வழி அனுப்பி வைத்தாள்.

நவராத்திரி முடியும் நாள் விஜயதசமி அன்று தான் திவ்யாவுக்கு அம்மா வீட்டிற்கு போக முடிந்தது. ‘ என்ன திவ்யா, நவராத்திரி எப்படி போச்சு? ‘ என்றாள் சித்ரா. ‘ சூப்பரா போச்சும்மா, என்ன கொஞ்சம் வேலை அதிகமாச்சு, உன்னப் போல’ என்றவுடன், ‘ ஏன் திவ்யா, அம்புஜம் மாமி உனக்கு சொன்ன மாதிரி செஞ்சு தரல்லயா?’ என்றாள். ‘ நான் தாம்மா வேண்டாம்னுட்டேன், சரி அத விடு, சீக்கிரம் சாதம் போடு, நான் கிளம்பணும்’ என்றாள்.

அவள் கிளம்பியதும் சித்ரா கமலாவை அழைத்தாள். ‘ கமலா, நீ என்னடி சொன்ன? எம் பொண்ணு கிட்ட, அவ அம்புஜம் மாமிக்கிட்ட ஆர்டர் பண்ண பிரசாத த்த வேண்டாம்னு சொல்லிட்டாளாம், தானே பண்ணியிருக்கா, எல்லாம்’ என்றாள். ‘ நீ சொல்ல நினச்சத புரியற மாதிரி சொன்னேன், காலம் மாறிடுத்து, நாம ஒண்ணும் பண்ண முடியாது, ஆனாலும் அதன் வேகத்தை கொஞ்சம் மட்டுப் படுத்தலாம், அவ்வளவு தான்’ என்றாள் கமலா. ‘ ஆமாம், நீ சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை என்றவாறே போனை வைத்தாள் சித்ரா.