அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 2025 செப்டம்பர் 19 அன்று அதிகாரப்பூர்வமாக 2025 செப்டம்பர் 21 முதல் H-1B விண்ணப்பங்களுக்கு $100,000 கட்டணம் , வருடந்தோரும் கட்ட வேண்டும், என விதித்தார்.
இந்த விதி யார்யாருக்கு என்ற தெளிவில்லாததால் H-1B வைத்திருந்த அனைவருமே பெரும் பீதிக்குள்ளாயினர்.
வெளிநாட்டில் உள்ள விசாதாரர்கள் உடனடியாக அமெரிக்கா திரும்புங்கள் என அமேசான், ஐபிஎம், மைக்ரோசாஃப்ட் போன்ற பல நிறுவனங்கள் எச்சரிக்கை விட , அனைவரும் அடித்துப்பிடித்து இமயமாய் உயர்ந்த டிக்கெட் கட்டணத்தை கூட பொருட்படுத்தாமல் உயிரை கையில் பிடித்துக்கொண்டு அமெரிக்காவிற்கு ஓட தொடங்கினர்.
நவராத்திரி விடுமுறைக்கு வந்த இந்தியர்களும் மட்டுமல்ல, சிலர் தங்களின் கல்யாணத்தையே ரத்து செய்து கிளம்பியதாக செய்திகள் வெளியாகின.
இதையெல்லாம் ரசித்து பார்த்துக்கொண்டிருந்த ட்ரம்ப் நிர்வாகம் 3 ஆம் நாள் “ இந்த விதி புதிதாக H-1B எடுப்பவர்களுக்கு தான். அதுவும் ஒவ்வொரு வருடமும் அல்ல. ஒரே முறை கட்டணம் தான். அத்துடன் ஏற்கனவே H-1B வைத்திருப்பவர்களுக்கு இந்த விதி கிடையாது” என அறிவிப்பு செய்தது.
இன்ஃபோசிஸ், டிசிஎஸ், டெக்மஹிந்திரா போன்ற இந்திய நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை அமெரிக்காவிற்கு அனுப்பவேண்டும் என்றால் ஒவ்வொருவருக்கும் இனி $100,000 கட்ட வேண்டும்.
பழைய கட்டணம் $2500 என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் படிக்க சென்ற இந்திய பட்டதாரிகளும் முதன்முறை எடுக்கும் H-1B விசாவுக்கு $100,000 கட்ட வேண்டும்.
இதனால் அதிகம் பாதிக்கப்படப்போவது கிட்டத்தட்ட 1 கோடி ரூபாய் கடன் வாங்கி இங்கிருந்து அமெரிக்காவிற்கு படிக்க சென்ற நடுத்தரவர்க்க இந்திய மாணவர்களே.
இந்த கோடி ரூபாய் கடன் வாங்குவதே படித்து முடித்தவுடன் கிடைக்கும் அமெரிக்க வேலையின்மூலம் 5 வருடத்தில் கடனை அடைத்துவிடலாம் என்கிற தைரியம் தான்.
ஆனால் வேலை இனி குதிரைக்கொம்பு தான் என்கிற நிலையில் தற்போது அங்கே படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
அமெரிக்க மருத்துவர்கள் அமைப்பு ட்ரம்பின் இந்த ஆணையை கண்டனம் செய்துள்ளது.
“ 21மில்லியன் அமெரிக்கர்கள் குடியேறி மருத்துவர்களை நம்பிதான் இருக்கிறார்கள்.
அமெரிக்க கிராமப்புறங்களில் இவர்களே மருத்துவ பணி செய்கிறார்கள். மருத்துவகுடியேறிகள் குறைந்துபோனால் மிகவும் ஆபத்து. அமெரிக்காவில் ஏற்கனவே தகுதியான மருத்துவர்கள் குறைந்த எண்ணிக்கையிலே உள்ளனர் “ என தங்கள் அச்சத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.
எனவே மருத்துவர்களுக்கு மட்டும் அந்த புதிய கட்டணம் செலுத்த வேண்டாம் என்ற விதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா கொடுக்கிற H-1B விசாக்களில் 71% இந்தியர்கள்,11% சீனர்கள், பாக்கி ஐரோப்பிய ஆசிய நாடுகள் மிக குறைந்த சதவீதம் வருகின்றார்கள்.
இந்த 71% ட்ரம்பின் கண்களை உறுத்திக்கொண்டே இருக்கிறது.
அடுத்ததாக H-1B லாட்டரி முறையை எடுத்துவிட்டு $1,65,000 வருட சம்பளம் உள்ளவர்களுக்கு மட்டும் H-1Bக்கு அதிக வாய்ப்பு தர முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதனால் அங்கே படித்த மாணவர்களுக்கு இன்னும் கூடுதலாக H-1B வாய்ப்பு பறிபோகிற நிலைமை.
இந்தியர்கள் பிச்சைக்கார்ர்கள் அல்ல.
தங்கள் அறிவை படிப்பை கடும்உழைப்பை மூலத்தனமாக கொண்டு அமெரிக்காவில் சாதிக்கிறார்கள்.
சுந்தர்பிச்சை, சத்யாநாதெல்லா,இந்திராநூயி, அரவிந்த் கிருஷ்ணா, பத்மஸ்ரீ வாரியர், வினோத் கோசலா, அஜய்பங்கா என சாதித்தவர்களின் பட்டியல் இன்னும் நீளுகிறது.
இவர்கள் எல்லோரும் அமெரிக்காவில் மேற்படிப்பு படிக்க வந்தவர்களே. அமெரிக்கா வளமாக இருக்க இன்னும் கூடுதல் பலம் சேர்த்துக்கொண்டிருப்பவர்கள்.
அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு மறைமுகமாக தடுக்கப்படுகிறது என்றால் வருங்கால சுந்தர்பிச்சைகளும் சத்யாதாதெல்லாக்களும், இந்திராநூயிகளும் தடுக்கப்படுகிறார்கள் என்று அர்த்தம்.
ஜெர்மனி, சீனா, நியூசிலாந்து போன்ற பல நாடுகள் இப்போதே தங்கள் நாட்டிற்கு படிக்க வரும்படி இந்திய மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கிறார்கள்.
அமெரிக்காவிற்கு தான் எதிர்காலத்தில் நஷ்டம்.
கள்ளகுடியேறிகளை இனம்கண்டு அவர்களை அப்புறப்படுத்துவதை விட்டுவிட்டு நேர்வழியில் உழைக்க வருபவர்களை வாட்டி வரும் ட்ரம்ப், செப்25 அன்று ஐநா சபையில் உரையாற்றிய போது,
“ஐநா சபை கெட்டது,எதற்கும் லாயக்கற்றது, ஐரோப்பிய நாடுகளே உங்கள் எல்லைகளை குடியேறிகள் வராதவாறு இறுக மூடி தாழ்ப்போட்டு பத்திரமாக வையுங்கள், பசுமை ஆற்றல் கொள்கைகளை பின்பற்றினால் உங்கள் நாடுகள் அழியும்” என முத்தான செய்திகளை உதிர்த்தது மட்டுமல்லாமல் “எனக்கு ஏன் இன்னும் ஒரு பயலும் நோபல் பரிசு தரமாட்டேன் என்கிறார்கள்?!
7 போர்களை நிறுத்தி ஆயிரக்கணக்கான மனித உயிர்களை காப்பாற்றியதற்கு இந்த உலகில் யாருக்குமே நன்றி இல்லையா?!” என ஒரு மூச்சு அழுது தனது உரையை முடித்திருக்கிறார்.
இவர் அமெரிக்காவில் இந்தியர்களுக்கு இன்னும் என்னென்ன வேட்டு வைக்க காத்திருக்கிறார் என்று தெரியவில்லை.
ஆனால் ஒன்று.
அதனால் எல்லாம் இந்தியா அழிந்துவிடாது.
Zoho மூலம் ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு தருகிற ஸ்ரீதர் வேம்பு போல், பலர் இந்தியாவுக்கு திரும்பினாலும் இந்தியா முன்னேறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
என்ன தான்யா வேணும் உங்களுக்கு ?????
Leave a comment
Upload