தொடர்கள்
கதை
வையமெல்லாம் நீ நிறைந்தாய் - சத்யபாமா ஒப்பிலி

2025082709013059.jpeg

கண்களை மூடி தங்கள் சக்தியை ஒன்று சேர்த்துக் கொண்டிருந்தனர் உலகை ஆளும் அந்த மூவர். இந்த திரள் சக்தியின் ஜனனம் பிரபஞ்சத்தின் முக்கியமான நிகழ்வாகும். ஒரு அழிவை நிகழ்த்த இந்த ஆக்கம். தீயவற்றை அழிப்பதும் ஆக்கம் தானே! மகிஷாசுரன். சாகாவரம் வேண்டி ஆயிரம் வருஷங்களாக தவம் இருந்தவன். இறப்பு இன்றிமையாததால், அதை குடுக்க ப்ரம்மா மறுக்க, மிருகத்தாலும், ஆணாலும் தனக்கு மரணம் வரக்கூடாது என்று வரம் கோரிப் பெற்றுக்கொண்டவன். உலகத்தை அடக்க வேண்டி மமதை கொண்டு கொலைகள் புரிந்து பூலோகத்தை தன் வசமாக்கிக் கொண்டான். அது போதாதென்று மேலோகத்தையும் ஆக்கிரமிக்க ஆரம்பித்து அவன் அந்திமத்தை அவனே தேடிக்கொண்டான். அவனின் வரம் அவனுக்கு பலம். அது தான் மற்றவர்களுக்கு வரமாக அமைந்தது.
தங்கள் சக்தியை ஒன்று சேர்த்துக்கொண்டிருந்தனர் படைத்தலையும், காத்தலையும், அழித்தலையும் தொழிலாகக் கொண்டு உலகம் உய்யத் துணையிருக்கும் மூன்று மாபெரும் தெய்வங்கள்.
அவர்களிடம் இருந்து வெளிப்பட்ட சக்தித் திரள் மெதுவாய் மெதுவாய் ஒன்று சேர்ந்து திரண்டு ஒரு மாபெரும் நெருப்பு பிழம்பாக உருவெடுத்து அதுவே கொஞ்சம் கொஞ்சமாக, பாதமாய், கால்களாய், தொடைகளாய், இடுப்பாய், மார்பகங்களாய், கழுத்தாய், தோள்களாய், விரல்களாய், முகமாய் மாறிக்கொண்டிருந்தது. மேலுலகமே கனலாய் மாற, கண்மூடி கைகூப்பி காத்திருந்தனர் தேவர்கள். ஆதி மூலங்களும் அவர்கள் படைப்பு நெருப்பை உட்கொள்ள காத்திருந்தனர். நெருப்பை உள்ளடக்கி, அமிர்தமாய் பெண் உருவெடுத்த அந்த ஒளி கீற்றை கண் திறந்து உள் வாங்கினர் தேவர்கள்.
நிமிர்ந்து நின்ற அந்த பெண்மைக்கு சூலாயுதமும், சக்ராயுதமும், அணிகலன்களும் , வாகனமாக சிங்கமும் அர்பணிக்கப்பட்டது. அவளின் படைப்பின் நோக்கம் பாம்பாக, நெருப்பு பந்தாக சுருண்டு அவளுள் அடங்கி இருந்தது. துர்க்கா என்றழைக்கப் பட்டாள்.

வீரம், விவேகம் இணைந்தவள். தோல்வி என்பது இல்லை. யாராலும் வெல்ல முடியாதவள், மகிஷாசுரனை வென்றாள் ஒன்பது நாட்கள் போர். அரக்கனுடனான போர். அரக்கத்தனமான போர். மகிஷாசுரனை வென்று தனது காலடியில் வை‌த்தாள். தீர்மானித்தாள். இன்றும் இருக்கிறாள்! நித்ய கல்யாணி! பவானி! பத்மேக்ஷ்வரி!!