தொடர்கள்
அழகு
இளமை…. இதோ… இதோ… - பாரதிஸ்ரீ

20250825224649346.jpg

பூர்ண சக்தி எனும் அமைப்பு அழகான முதுமைக்கு ஒரு நுழைவாயில் என்னும் தத்துவத்தில் சென்ற செப் 14, 2025 அன்று சென்னை சந்தோம் ரபேல் மகளிர் பள்ளியில் 55+ வயதினர்க்காக மட்டும் என நிகழ்ச்சிகளை நடத்தப்போகிறோம் என்று ஓப்பன் அழைப்பு விட அப்படி என்னத்தான் இருக்கப்போகிறது என்ற ஆர்வம் மேலிட சென்றுவிட்டேன்.

நிகழ்ச்சிகள் 55+ க்கு ன்னா பார்வையாளர்கள் யார் இருக்கக்கூடும் என்ற ஆர்வம்+மும் மேலிட்டது.

20250825225024616.jpg

வேடிக்கை, பொழுதுபோக்கு, கொண்டாட்டம் அபரிமிதமாக கிடைத்தது தான் உண்மை.

Age is just a number, வயது வெறும் எண் தான், என்பதை வெறும் வார்த்தைகளாக இல்லாமல் வாழ்க்கை முறையைாகவும் கொள்ள முடியும் என்பதை உணர்ந்து கொண்டேன்.

20250825225101949.jpg

போட்டிகளுக்கு நாங்கள் தயார்!!! என்கின்றனர்.

வயோதிகர்களை உற்சாகமூட்டும், உடல் மற்றும் உள்ளத்தால் மகிழச் செய்யும் செயல்களை அள்ளித் தந்த ஒரு நிகழ்வு தான் “Poorna Sakthi” அமைப்பின் தமிழ் திருவிழா என்றே கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம். ஆனால் கண் இமை கொட்டவிடாமல் பங்கேற்ற 55+களின் பங்களிப்பு பிரமிக்க வைத்தது. ஆம், இது வருத்தப்படாத வயோதிகர்களின் சங்க(ம)ம்.

நமது பாரம்பரியம் மிளிரும் பற்பல பண்பாட்டு நிகழ்ச்சிகள், கிராமிய நடனம், சமையற் கலையை உற்சாகப்படுத்தும் போட்டி, கும்மியாட்டம், நாட்டுப் புற பாடல்கள், உடற்பயிற்சிகான குறிப்புகள் எனப் பற்பல இனிய நிகழ்ச்சிகளின் கலவையாக இருந்தது. மேற்கூறிய நிகழ்ச்சிகளின் போட்டிகளில் 55 வயதிற்கு மேற்பட்டோர் பங்கேற்று உற்சாகத்துடன் குதூகலமாக கலந்து கொண்டது கண்ணையும் கருத்தையும் கவர்ந்தது.

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே… என்பதை உணர்த்தும் மாட்டு வண்டி சவாரி, பல்லாங்குழி விளையாட்டு போன்றவை குறிப்பிடத்தக்கவை.

20250825224906445.jpg

கைவினைப் பொருட்கள், உடற்பயிற்சி பற்றிய தகவல்கள் பற்றிய நிறுவனங்கள், ஆடுபுலி ஆட்டம் போன்ற சில பழங்கால விளையாட்டுகள் ஆகியவை உள்ளிட்ட Stall களை மைதானத்தில் கொண்டது நிகழ்ச்சியின் பெரும் ப்ளஸ் தான்.

நிகழ்ச்சியை முருக பக்தர் பாலசுப்ரமணியன் தொகுத்தளித்தது சிறப்பு. அவரது பன்முகத்தன்மையை வெளிப்படுத்தியது.

போட்டிகளின் நடுவர்கள் அந்தந்த போட்டிகளின் முக்கியத்துவத்தை தங்களின் உரை மூலம் எடுத்துக்காட்டினார்கள்..

பாரம்பரிய உணவுமுறையின் பெருமை மற்றும் மேன்மையை இன்றைய தலைமுறைக்கு எடுத்துரைத்தார் விசாலி கண்ணதாசன்.

20250825225635709.jpg

‘‘பெரிதினும் பெரிது கேள்’’ என்ற மகாகவி பாரதியின் மதிக்கக் கற்றுரைத்ததை தனது சொல்லாற்றலால் பாடிக் காட்டினார் வில்லுப்பாட்டு வல்லுனர் முனைவர் கலைமாமணி பாரதி.

நடனத்தை நடுவர் பணி செய்த திருமதி ஜெயந்தி ‘‘ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று…’’ என்ற பாரதியின் பாடலுக்கு அனைவரையும் ஆடச் செய்து எல்லா முதியோரையும் அவரது பாடலுக்கு ஆட வைத்துவிட்டார்

தமிழர் அரும்பெரும் உடற்பயிற்சியாட்டமாம் கலையாம் சிலம்பாட்டத்தின் சிறப்பையும் இங்கு காட்டினார்கள்.

2025082523013233.jpg

[பார்வையாளகள்]

அதனை உடற்பயிற்சிக்கு உகந்ததென உணர வைத்து ‘‘கம்பை ஊன்றாமல் இருக்க கம்பு சுற்றுங்கள்’’ என்று கூறி குழுவினருடன் விஜய் சிலம்பாட்டம் தந்தது அருமையான விளக்கம்.

செவிக்குணவு அளித்திட ராம்சுந்தரின் folk song. தொகுப்பாளர் அவருடன் இணைந்து பாடிய பாடலும் அருமை.

20250825230228727.jpg

அறிவுக்கு வேலை கொடுத்த ‘‘Madras Quiz” நடத்திய ராம்குமாரின் கேள்விகளுக்கு விடையளித்தோர்க்கு பரிசுகளும் தரப்பட, போட்டியாளர்களின் ஆவலை மேலும் அதிகரித்தன.

20250825225729398.jpg

சின்ன வயஸுல கூட இப்படி தங்களது திறமைகளை வெளிப்படுத்தி இருப்பார்களோ என்பது சந்தேகம்தான்.

எங்க தான் ஒளிச்சி வெச்சிருந்தார்களோ?

பெருசுகள் அடுத்த வருஷ போட்டி எப்ப வரும்னு கேப்பாங்களோன்னு தோன்றியது. அவ்வளவு உற்சாகம்.

சட்னு பாத்தா, இவங்க இந்த போட்டிகளில் கலந்துப்பாங்களான்னே சொல்ல முடியல. பார்வையாளர்களே போட்டியாளர்களாகி விட்டனர்.

வயதை மறந்து இனி அடுத்த நேரத்திற்காக பதுக்கி வைக்காமல் இதுதான் பைனல் என்றார் போல் தங்களின் திறமைகளை unplugged, unfiltered ஆகச் செய்தது பார்வையாளர்களையும் பரவசப்படுத்தியது. ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு திறமையுண்டு. சிலரிடம் பலப்பல.

எது எப்படியோ!!!...வாழ்வின் மின்னும் காலம் இதுதான் என்று தங்களின் இறுதிக்காலத்தை உம்மென்று...மூலையில் முடக்கிடாமல் முனைந்து முன்னிறுத்துவது ஒரு நேர்மறை எண்ணமே.

இந்த மாதிரியான நிகழ்ச்சிக்கு முன்னின்று ஆதரவு கொடுத்த IDBI Bank, Vedanta, Apollo Hospital ஆகியோரை கண்டிப்பாக பாராட்டியாக வேண்டும்.

ஜெட் வேக இந்த விஞ்ஞான உலகத்தில் வாழ்வின் எல்லை காலத்தில் அடியெடுத்து வைக்கும், இப்பல்லாம் பளிச்சுனு புரியறமாறி சொல்லணும்னா, பெருசுகளை யார் மதித்து கூடி பேசி செய்கிறார்கள். அதான் ஒவ்வொரு பெரிய நகரங்களில் கண்டிப்பாக பாட்டா-பாட்டி முதியோர் இல்லங்களைத் திறந்து ஒதுக்கிவைத்து விடுகிறர்களே.

“ஏதோ, வசதி உள்ள டாலர் பசங்க தன் பெற்றோரை கொஞ்சம் வசதிகளுடன் அமைந்துள்ள கேட்டட் கம்யூனிட்களில் (gated communities) வாழ வைத்துள்ளனர். அங்கு மறு சீரமைப்புடனான புதிய குடும்பம் கூட்டுக்குடும்பமாகவே வாழ முயற்சிக்கிறது. அங்கு சமையல் ஒரு பொது வெளியில் சமைக்கப்படுவதால் கிடைக்கும் அத்துணை முழித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் அங்கு வசிக்கும் வயதானவர்கள் இது நாள் வரை வெளிக்கொணரமுடியாதிருந்த தங்களின் சுய திறமைகளை ஆன்மீகம், பக்தி உட்பட உட்புற/ வெளிப்புற விளையாட்டுகளுக்கான தேவையான நிலையை ஏற்படுத்தி பங்கு பெற்று மகிழ்கின்றனர். பிற கேட்டட் கம்யூனிட்களில் வசிப்பவரோடு போட்டிகளை ஏற்படுத்தி அதிலும் பங்கேற்கின்றனர். இது நிஜமாகவே நடக்கிறது”.

“கிட்டே போய் பார்த்தால் தான் தெரிகிறது, இன்னும் இன்னும் எத்தனை போட்டிகள் இருக்கு சொல்லுங்க கலந்துக்க…இதுநாள் வரையிலும் மிஸ் பண்ணிட்டோமே என்று ஏங்குவது போல் இருக்கிறதை உணரலாம்” என்று எனது நண்பன் கிருஷ்ணமூர்த்தி தனது உறவினர்கள் இருக்கும் கேட்டட் கம்யூனிட்டியில் நடப்பதைச் சொல்லிக் கொண்டிருந்தான். அவர்கள் பொன்னியின் செல்வன் போன்ற சரித்திரத் தலங்களைக் காணும் டூர்களையும் ஏற்படுத்தி சுற்றுலா சென்று வருகின்றனர்.

இவர்க(களுக்கா)ளாவது பரவாயில்லை. தனி குடியிருப்புகளில் இருக்கும் வயதானவர்களுக்கு இந்த மாதிரியான நிகழ்வுகள் ஒரு வரப்பிர்சாதம். அவர்களையும் மதித்து, ஊக்குவித்து, கௌரவித்து அவர்களுக்கு பரிசுகளும் அளித்து ஊக்குவித்த ‘‘Poorna Sakthi” அமைப்பின் நிறுவனர்களுக்கு ஒரு ஓ போடணும்.

இந்த நிகழ்வு இதோ.

https://youtube.com/shorts/BnNPEtNEkS0?si=UDxTDSJlLnTrZnZB

பூர்ண சக்தியைப் பற்றிய ஒரு முன்னுரை

https://youtu.be/bDAjohF_6Fc?si=SoztN9qZOw_X8Ylw

ஒதுக்கப்பட்ட சமுதாயமாகவே விட்டு விடாமல் அவர்களுக்காக தன் நேரம் ஒதுக்க இளம் சமுதாயம் முன் வருவது வரவேற்கப்படவேண்டும். பாராட்டப்ப்படவேண்டும்.

சமுதாயம் நல்ல மாற்றத்திற்கு என்றும் தடை சொன்னதில்லை.