தேனும், தினையும், கிழங்கும், சந்தனமும் விளையும் “பெருங்கல் நாடு” என்னும் மலை நாடு அது.
அந்த குறிஞ்சி மண்ணில் செழித்து விளைந்த காதலில், காதலியும், காதலனும் திளைத்து மகிழ்ந்து இருந்தனர்.
ஒருநாள், வெளிநாடு சென்று வருவதாக சொல்லிச் சென்ற காதலன். கார்காலத்தில் முதல்மழை பெய்தவுடன் திரும்பி வருவதாக வாக்குத் தந்திருந்தான்.
அவன் வருகையை எதிர் நோக்கி காத்திருந்தாள் தலைவி.
"அவன் குறித்த நாளில் நிச்சயம் உன்னை வந்தடைவான். நீ கவலை கொள்ள வேண்டாம்" என்று நம்பிக்கை ஊட்டும் சொற்களால் தலைவியை உற்சாகப்படுத்துகிறாள் அவள் தோழி.
“தலைவி, கிழங்குகள் மண்ணில் இறங்கி விட்டன. தேனடைகள் மலையின் மேலும் மரக்கிளைகளின் மேலும் தொங்குகின்றன. சில விதைகளை விதைத்த வயலில் பல மடங்காய், தினைப்பயிர் விளைந்துள்ளது.
அதன் கதிர்களைக் கிளிகள் கொய்து விடாமல் இருக்க. அக்கிளிகளை விரட்டித் துரத்தும் மலை நாட்டின் மகன், உன் தலைவன்.
அவன் நம்மைப் போன்றவன் அல்லன். அவன் உயர்ந்த பிறப்பு கொண்டவன்.
அந்த உயர் பிறப்புக் கொண்டவன் தன் சொல்லில் இருந்து தவற மாட்டான்.
கார்காலத்தில் முதல் மழை பொழிந்தவுடன் அவன் உன்னைத் தேடி வருவதாக சொல்லி இருக்கிறான் அல்லவா? அவன் அவ்வாறே வந்து விடுவான்.
சந்தனமரங்கள் வளர்ந்த இந்த மலைப்பகுதியில் விறலி வந்து கூத்தாடுவாள்..
அவள் எள்ளைப் பிழிந்து எடுத்த நெய்யையும், வெண்ணிற துணியில் முடித்த பொற்கிழியைப் பெற்றுக் கொள்ளாமல், அழகிய அணிகலன்களை விரும்பி வாங்கிக் கொள்வாள்.
அத்தகைய விறலிக்கூத்து நடக்கும் இவ்வூரில், சிறு சிறு துளிகளாய் வானத்தில் சேர்ந்த மழைத்துளிகள், பெருமழையாகி முதல் மழை பொழியும்.
அம்மழை பெய்தவுடன் உன் தலைவனும் வந்து விடுவான். நீ கலங்காதே” என்று தலைவியைத் தேற்றினாள்.
கார்காலத்தில் பெய்யும் முதல்மழையைப் போற்றும் பாடல் இது.
கிழங்கு கீழ் வீழ்ந்து, தேன் மேல் தூங்கி,
சிற்சில வித்திப் பற்பல விளைந்து,
தினை கிளி கடியும் பெருங் கல் நாடன்
பிறப்பு ஓரன்மை அறிந்தனம்: அதனால்,
அது இனி வாழி தோழி! ஒரு நாள், 5
சிறு பல் கருவித்து ஆகி, வலன் ஏர்பு,
பெரும் பெயல் தலைக, புனனே! இனியே,
எண் பிழி நெய்யொடு வெண் கிழி வேண்டாது
சாந்து தலைக்கொண்ட ஓங்கு பெருஞ் சாரல்,
விலங்கு மலை அடுக்கத்தானும், 10
கலம் பெறு விறலி ஆடும் இவ் ஊரே.(நற்றிணை 328)
இப்பாடலை எழுதியவர் தொல் கபிலர் என்னும் புலவர்.
குறிஞ்சித் திணைக்குரிய இப்பாடலில் மலைநாட்டின் வளமும், அம்மண்ணில் பிறந்தவருக்குரிய உயர் குணமும் பாடப்பட்டுள்ளன.
மற்றுமோர் இனிய பாடலுடன் சந்திப்போம்
தொடரும்
Leave a comment
Upload