துரியோதனன்
கௌரவர்களில் மூத்தவனான துரியோதனன் சிறு வயதிலேயே உடல் பலத்தில் எல்லோரையும் மிஞ்சி இருந்த பீமனைக் கண்டு பயந்தான். அவன் மீதும் பாண்டவர்கள் மீதும் விரோதம் கொண்டான். பீமனை கொல்ல பல முறை முயன்றான். பாண்டவர்களின் புகழாலும், குணங்களாலும் பெரியோர்களின் ஆதரவு பாண்டவர்களுக்கு கிடைத்தாலும் பெரியோர்களை துரியோதனன் ஆரம்பம் முதலே முறையாக பேணிக் கொள்ளவில்லை. பாண்டவர்கள் மேற்கொண்ட அசூயை (பொறாமை) மாறுபாடாக (இகழ்/குரோதம்) வலுப்பெற்று அதனால் மனத்தாபம் உண்டாகி உட்பகை தோன்றியது. பாரத யுத்தத்திற்கு அடி கோலி குருவம்சத்தின் வீழ்ச்சிக்கும் வழி வகுத்தது.
துரியோதனன் தன் இயலாமையால் பல முறை பெரியோர்களை இகழ்ந்தான். கர்ணனின் திறமையை கண்டறிந்து அவனுக்கு அங்கீகாரம் கொடுக்க வேண்டியதை உணர்ந்து “பிறப்பில் பெருமை இல்லை; செய்யும் தொழில் தான் இருக்கிறது” என்று கர்ணனை அங்க நாட்டுக்கு மன்னனாக முடி சூட்டினான். கர்ணனுடன் நட்பு கொண்டான்.
சூதில் பாண்டவர்களை வென்ற ஆணவத்தில் மக்கள் பண்பு இழந்து, திரௌபதியின் துயருக்கும் கோபத்துக்கும் ஆளானான். கானகத்தில் பாண்டவர்களின் நிலையைக் கண்டு வருந்தி துரியோதனனை திருத்த எண்ணிய மைத்ரேய முனிவருக்கு பதிலளிக்காமல் மரியாதை இன்றி, அகம்பாவத்துடன் நடந்து கொண்டதோடு தொடையை தட்டினான்; சாபம் பெற்றான்.
பாண்டவர்களின் உடைமைகளை களவாடத் துணிந்ததோடு “ஊசிமுனை இடமும் இல்லை” என்றான். அவன் சினம் கொண்டு இழந்தவை ஏராளம். தன் வலியும் துணைவர்கள் வலியும் அறியாமல் கெட்டான். தருமன் செய்தது போல் ராஜசூய யாகம் செய்ய விரும்பி கர்ணன் நான்கு திசைகளிலும் சென்று மன்னர்களை வென்றாலும், பல காரணங்களால் அந்த யாகம் செய்து பலன் அடைய முடியவில்லை.
. கானகத்தில் பாண்டவர் படும் துயரங்களை காண விருப்பம் கொண்டு முயல (இந்திரன் அனுப்பிய) சித்ரசேனன் எனும் கந்தர்வனால் சிறைபிடிக்கப்பட்டான்; தருமரின் ஆணைக்கிணங்க விடுவிக்க சென்ற அர்ஜுனனிடம் (சித்திர சேனனால்) விடுவிக்கப்பட்டான். 11ம் நாள் போரில் "தருமரை பிடியுங்கள்" என்று கூறினான். திட்டப்படி நிறைவேற்ற முடியவில்லை. முன்னமே பாதுகாப்பு செய்து கொள்ளாத துரியோதனன் 18ம் நாள் போரின் இறுதியில் மடுவில் ஓய்வுக்கு பதுங்கியும்...பீமனால் யுத்தத்துக்கு அழைக்கப்பட்டு உயிர் நீத்தான்.
குறளும் பொருளும்
மாறுபாட்டினால் துன்பம் வரும்; நட்பால் மகிழ்ச்சியும் பெருமிதமும் உண்டாகும்.
இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்
நன்னயம் என்னும் செருக்கு 860
(விதுரன் போன்ற) பெரிய மனிதர்களைப் பேணும் நோக்கம், சிறியவர்களின் மனதில் இருக்காது.
சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்
பேணிக் கொள்வேம் என்னும் நோக்கு 976
ஆற்றல் உள்ளவர்களின் திறமையைப் பரிகாசம் செய்யாமல் இருப்பதே அதற்கு சிறந்த பாராட்டாகும்.
ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றலுள் எல்லாம் தலை 891
பெரியவர்கள் கோபத்துக்கு உள்ளானால் வகை வகையான வாழ்க்கையும், நிறைந்த செல்வமும் பயனில்லை.
வகை மாண்ட வாழ்க்கையும் வான் பொருளும் என்னாம்
தகைமாண்ட தக்கார் செறின் 897
பெரிய உடம்பும், கூர்மையான கொம்புகளும் உடையதானாலும் யானை புலி தாக்கினால் அஞ்சும்.
பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வெரூஉம் புலி தாக்குறின் 599
அரம் போல கூரிய அறிவு பெற்றாலும், பண்பற்றவர்கள் மரம் போல-ஜடங்கள்.
அரம் போலும் கூர்மையேனும் மரம் போல்வர்
மக்கள் பண்பு இல்லாதவர் 997
களவாடும் விருப்பம், அதன் விளைவு வரும்போது மாளாத் துன்பம் தரும்.
களவின் கண் கன்றிய காதல் விளைவின் கண்
வீயா விழுமம் தரும் 284
கோப நெருப்பு தம்மையும் கெடுத்து, தம் இனத்தையும் சுட்டெரித்து விடும்.
சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம் என்னும்
ஏமப்புணையை சுடும் 306
தன் பலம் அறியாமல் ஆர்வத்தால் ஒரு காரியத்தில் இறங்கி பாதியில் கெட்டவர்கள் பலர்.
உடைத்தம் வலி அறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர் 473
முன்னமே பாதுகாப்பு செய்து கொள்ளாத அரசன் போர்க்காலத்தில் பயந்து சாவான்.
செருவந்த போழ்தில் சிறை செய்யா வேந்தன்
வெரு வந்து வெய்து கெடும் 569
Leave a comment
Upload