இலக்கியப் படைப்பை மொழிபெயர்க்கும்போது அவன் ஒரு இலக்கியவாதி. பத்திரிகைக்காக கட்டுரைகளை மொழிபெயர்க்கும்போது அவன் பத்திரிகையாளர் ஆகிறான். இரண்டு பணியும் ஏறத்தாழ ஒரே மாதிரிதான். இலக்கிய மொழிபெயர்ப்பில் மொழிநயம் முக்கியம். பத்திரிகை மொழிபெயர்ப்பில் சரியான தகவல் பதிவு முக்கியம். இந்த இரண்டிலும் தேர்ச்சி பெற்றிருப்பவனை லண்டனில் இருந்த ‘நாழிகை’ என்ற மாத பத்திரிகையின் ஆசிரியரான மகாலிங்க சிவன் ‘இரண்டு மூன்று நாட்களில் லண்டனுக்கு வரமுடியுமா?’ என்று தொலைபேசியில் அழைத்தார். என்ன அவசரமென்று கேட்டதற்கு அந்த யாழ்ப்பாணத் தமிழர் சொன்னார், ‘‘அவசரம்தான், அவசியமும் கூட. நீங்கள் உடனே வரவேண்டும். தேதியைச் சொல்லுங்கள்’’ என்றார். நல்லவேளையாக அடுத்த பத்து நாட்களுக்கு அலுவலகத்தில் முக்கிய வேலை இல்லை. அதி அவசரமென்றால் ஈமெயில் மூலம் அலுவலக வேலையை செய்து கொடுக்கலாம் என்று நினைத்து பத்து நாட்களுக்கு விடுப்பு எடுத்துக்கொண்டான். லண்டன் செல்ல விசாவும் இருந்தது. இரண்டு நாட்கள் கழித்து லண்டனுக்குப் புறப்பட்டான்.
லண்டன் விமான நிலையத்தில் அவனை வரவேற்ற நண்பர் மாலி மொழிபெயர்ப்பு பற்றி வீட்டிற்குப் போய் பேசலாம் என்று சொன்னார். அவர் நிதானமானவர், அவனோ ஆறப்பொறுக்காதவன். ஹீத்ரூ விமான நிலையத்திலிருந்து ஹேரோவிலுள்ள அவர் வீட்டிற்குச் செல்லும்வரை அவர் எதுவும் பேசவில்லை. வீட்டிற்குச் சென்றதும் சொன்னார், ‘நான் ஒரு தர்ம சங்கடத்தில் மாட்டிக் கொண்டுவிட்டேன். ஒரு மொழிபெயர்ப்பை செய்து தருமாறு பிரிட்டிஷ் அரசாங்கம் கேட்டுக் கொண்டது. தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு ஒரு புத்தகத்தை மொழிபெயர்க்கச் சொன்னபோது, மறுத்தால் சரிப்படாது என்ற எண்ணத்தில் ஒப்புக்கொண்டேன். -
‘புத்தகம் கையில் வந்த பிறகுதான் தெரிந்தது அது விடுதலை புலிகளின் (LTTE) ஒரு பிரிவான ‘கடற்புலிகளின்’ சாகசம் பற்றியது. நான் புலிகளின் நிலைப்பாட்டிற்கு எதிரானவன் என்பதை தெரிந்து கொண்டேதான் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் உளவுத்துறை அந்தப் பணியை எனக்குக் கொடுத்தது.
‘எனக்கு ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பது சுலபம். தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பது சிரமமானது. நான் என் அளவில் ஏதோ மொழி பெயர்த்துவிட்டு, உங்களிடம் திருத்தித் தரச் சொல்வதைவிட, உங்களையே மொழிபெயர்க்கச் சொல்லலாம் என்று நினைத்தேன். அந்த மொழிபெயர்ப்பு பிரிட்டிஷ் அரசாங்கத்தால் ரகசியமாக கொடுத்து செய்யச் சொன்னது. ரகசியம் காக்க வேண்டும் என்றால், நான் அந்த புத்தகத்தை தபாலிலோ, ஈமெயிலிலோ அனுப்பமுடியாது. அதனால் உங்களை இங்கு வரவழைத்தேன். நீங்கள் என் வீட்டிலேயே தங்கி இந்த வேலையை செய்து தாருங்கள்’ என்று சொன்னார். புத்தகத்தையும் கொடுத்தார்.
‘கடற்புலிகள்’ என்ற அந்தப் புத்தகம் சுமார் 120 பக்கங்கள் கொண்டது. ஒரு நாளைக்கு பதினைந்து பக்கங்கள் என்று எடுத்துக்கொண்டால் மொழிபெயர்க்க ஒரு வாரத்திற்கு மேலாகும். அவன் தினம் 15 பக்கங்கள் என்றபடி மொழிபெயர்த்தான். தினம் தினம் அவன் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதை உடனுக்குடன் டைப் செய்து கம்ப்யூட்டரில் பதிவு செய்தான். எட்டாம் நாள் முழு வேலையும் முடிந்துவிட்டது. புத்தகம் சி.டி.யில் பதிவு செய்யப்பட்டது. அன்று மாலை மாலி சி.டி.யை பிரிட்டிஷ் உளவுத்துறையிடம் ஒப்படைத்தாக வேண்டும்.
அன்று மாலை மாலிக்கு இடிபோல ஒரு செய்தி வந்தது. LTTEஇன் தலைமையகம் அப்போது லண்டனில்தான் இருந்தது. அந்த அலுவலகத்திலிருந்து வந்த தொலைபேசி செய்தி இதுதான். ‘மிஸ்டர் மாலி! பிரிட்டிஷ் அரசாங்கத்திற்காக நீங்கள் ‘கடற்புலிகள்’ என்ற புத்தகத்தை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்து இருக்கிறீர்கள். உங்களுக்கு உதவி செய்ய சென்னையிலிருந்து ஒரு பத்திரிகையாளர் வந்திருக்கிறார். அவர் உங்கள் வீட்டில்தான் தங்கியிருக்கிறார் என்று அறிகிறோம். நாளை காலை 10 மணிக்கு CD யை எடுத்துக்கொண்டு அந்தப் பத்திரிகையாளரையும் அழைத்துக் கொண்டு எங்கள் அலுவலகத்திற்கு வாருங்கள்’. அந்த தொலைபேசியின் குரல் கட்டளையாக இருந்தது.
இதை அவனிடம் தெரிவித்த மாலி சொன்னார், ‘‘பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தப் பணியை எனக்குக் கொடுத்து இருப்பதை புலிகள் மோப்பம் பிடித்ததில் எனக்கு வியப்பில்லை. ஆனால் சென்னையிலிருந்து ஒரு பத்திரிகையாளர் இங்கு வந்ததை தெரிந்து கொண்டு இருப்பதுதான் கொஞ்சம் ஆச்சரியமாக உள்ளது.
‘இந்த அழைப்பை மறுக்க முடியாது. உங்களையும் அழைத்துக் கொண்டுதான் செல்ல வேண்டும்’ என்றார். LTTE---&யின் தலைமை அலுவலகத்திற்கு செல்வதற்கு முன்னதாக ஒரு CDயை பிரிட்டிஷ் உளவுத்துறை அலுவலகத்திற்கு அனுப்பிய பிறகே LTTE--- அலுவலகத்திற்கு மாலி அவனை அழைத்துச் சென்றிருக்கிறார். செல்லும் வழியில் அவனது முகபாவத்திலிருந்து அவன் கேட்கவிருந்த கேள்வியை யூகித்துக்கொண்டு சொன்னார் மாலி, ‘திரும்பி வரும்போது என்ன நடக்கும் என்றே தெரியாது. அதனால் இப்பொழுதே அந்த CD---ஐ பிரிட்டிஷ் உளவுத்துறையிடம் கொடுத்துவிட்டேன்’ என்றார் மாலி.
LTTE--- அலுவலகத்தில் ஏழடுக்கு பாதுகாப்பு. இரண்டாம் கட்டம் தாண்டியதும் மாலியை அங்கே தடுத்து விட்டார்கள். அவனை மட்டும் ஒவ்வொரு கட்டமாக அனுமதித்தார்கள். ஒவ்வொரு கட்டத்திலும் சோதனைதான். அவன் கையில் பேனா, காகிதம், பணம் எதுவும் இல்லை. ஆனால் மாலி கொடுத்த CD மட்டும் இருந்தது. ஏழாவது கட்டத்தில் வரிசையாக பெஞ்சும், மேஜையும் ஒரு வகுப்பறை போல் இருந்தது. சற்றே உயரமான மேஜையும், நாற்காலியும் இருந்தது. சாந்தன் என்பவர் அங்கு வந்து நாற்காலியில் அமர்ந்து கொண்டார். அங்கே அறை, அரை இருட்டுதான்.
சில நிமிட நேரம் நலம் விசாரித்த பிறகு சாந்தன் ‘கடற்புலிகள்’ புத்தகத்தைப் படித்து விட்டீர்கள் அல்லவா?’ என்ன நினைக்கிறீர்கள்?’ என்று கேட்டார்.
அதற்கு அவன் ‘அது உங்கள் வீரம்’ என்று சொன்னான். அதைக்கேட்டு புன்முறுவல் பூத்தார். ‘இதற்கு முன்பு யோகநாதனின் ‘இரவல் தாய்நாடு’ என்ற கதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தது நீங்கள்தானே?’ என்று கேட்டார், அது தொடக்கக் காலத்தில் விடுதலைப் புலிகளைப் பற்றிய பயம் இருந்த காலகட்டம்.
அத்துடன் நாங்கள் நிச்சயம் ஈழத்தை அடைந்துவிடுவோம், ஈழ சுதந்திரம் வெகு தொலைவில் இல்லை. அந்த நன்னாளில் உங்களையும் அழைப்போம் என்று சொன்னார். ‘வாழ்த்துகள்’ என்றுதான் அவனால் சொல்ல முடிந்தது. அதுதவிர வேறு எதுவும் சொல்லமுடியவில்லை. சூழ்நிலை அவ்வளவு இறுக்கமாக இருந்தது.
அவன் புறப்படும்போது சாந்தன் ஒரு வீடியோ காசட்டை கொடுத்து இதை சென்னையில் இன்னாரிடம் ஒப்படையுங்கள் என்று சொன்னார். சென்னையில் கஸ்டம்ஸ் சோதனையில் என்ன கேசட், எங்கிருந்து வந்தது என்று கேட்டால், நான் பத்திரிகையாளன், என் தகவலுக்காக வைத்துக்கொண்டு உள்ளேன்’ என்று சொல்லச் சொன்னார்.
‘இந்த மொழிபெயர்ப்பில் எங்காவது உங்கள் பெயர் உள்ளதா?’ என்று கேட்டார். இல்லை, என் பெயரும், மாலி பெயரும் இல்லை என்றான். வாசல்வரை வந்து கைகூப்பி, வணக்கம் தெரிவித்து அனுப்பி வைத்தார். அதன் பிறகு அவனை இங்கு அழைத்து வந்த நபர் இரண்டாம் தளத்தில் இருந்த மாலியுடன் சேர்த்து வெளியே அனுப்பி வைத்தார். ‘நீங்கள் வரும்வரை எனக்கு மனம் பதபதைத்துக் கொண்டிருந்தது’ என்று சொன்னார் மாலி. அவன் பத்திரிகையாளனாக இருந்த காலகட்டத்தில் அது ஒரு திகிலான அனுபவம்.
Leave a comment
Upload