தொடர்கள்
தொடர்கள்
கைலாய யாத்திரை 4. ஒரு மினி தொடர்  - ராம்

2025082707451016.jpeg

(ஞாலம் நகரில் மறக்கவே முடியாத ஒரு மழலை முகம்)

ஞாலம் என்ற இடம் சீன நாட்டின் எல்லையில் இருக்கிறது.

நேபாள எல்லை தட்டோபாணியிலிருந்து பாலத்தின் அந்தப் பக்கம் போனால் ஞாலம்.

எங்கள் குழுவை மட்டும் எல்லை கடந்து கொண்டு சென்ற போது சிவா மற்றும் பிரவீன் வர முடியாமல் அது மிகுந்து வலி கொடுத்த தருணம்.

அடுத்த நாள் பிரவீன் பெயர் மட்டும் இருக்கிறது என்று சொல்லி அவரை மட்டும் அழைந்து வந்து விட்டார்கள். உண்மையில் ஏஜெண்ட் செய்த இமாலய தவறு.

முதலில் சிவாவிற்கு பர்மிட் வாங்கவேயில்லை. ஆனால் பர்மிட் வரவில்லை என்று சொன்னது தவறு. அது போலவே பிரவீனின் பெயர் இரண்டாவது பக்கத்தில் இருக்கிறது. அதை பிரிண்ட் செய்யாமலேயே அவர் பெயர் இல்லை என்று சொன்னது அதை விட தவறு. இது போன்ற அமைச்சு தவறுகள் பயணிகளுக்கு எத்தனை மனவலி மற்று இடையூறு என்பதை புரிந்து கொள்ளாத மடையர்கள் என்று கோபம் தான் வந்தது.

யோசித்துப் பார்க்கையில் தவறு செய்யாதவர்கள் யார். எந்தத் துறையிலும் தவறுகள் குளறுபடிகள் நடக்கத்தான் செய்கிறது. நடப்பது எதுவும் அவன் செயல் எனும் போது அதை ஒரு சமநிலையில் நின்று ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வருகிறது.

என்னைப் போன்ற ஆசாமிகளுக்கு, மூன்று முறையல்ல முப்பது முறை கைலாயம் சென்றாலும் வராத அந்த பக்குவம் பிரவீன் மற்றும் சிவாவிற்கு இயற்கையிலேயே அமைந்திருப்பது ஆச்சரியம் தான்.

பிரவீன் மட்டும் ஞாலம் வந்ததும் அவர் மனைவிக்கும், குழுவிற்கும் பெரும் நிம்மதி. உணர்ச்சிவசமான தருணம் அது.

பிரவீன் வந்ததும் குழுவாக சிவாவின் வருகைக்கும் பிரார்த்தனை பலமாக செய்தோம். ஆனால் பர்மிட்டே வாங்காமல் மனித தவறுக்கு கடவுள் எப்படி பொறுப்பாவார் ???

சிவா நேபாளத்திலிருந்து வீடு திரும்ப வேண்டியதாகி விட்டது. சிவன் அடுத்த வருடம் வா என்பதற்கு ஒரு காரணத்தை விட்டு வைக்கிறான்.

கைலாயம் செல்லும் யாத்திரீகர்களுக்கு இந்த சஸ்பென்ஸ் கொஞ்சம் தேவையில்லாதது. கடைசி நிமிடம் வரை பர்மிட் கிடைக்குமா அல்லது விசா கிடைக்குமா என்பது கவலைக்குரிய விஷயமாகத் தான் இருக்கிறது.

20250827080446342.jpeg

பாரதி ராஜா ஸ்டைலில் என் இனிய கிராமத்து மக்களே என்று சொல்லும் வகையில் கிராமத்து ஆட்கள் எல்லோரும் ஒன்று கூடி விட்டாங்கய்யா……

20250827080509517.jpeg

கார்த்திக் டிராவல்ஸ் மனோகருடன். மனிதர் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வரலாம்.

20250827080535956.jpeg

இவர் பாஜக மகளிர் அணி தலைவி என்று அறிமுகப்படுத்தினார்கள். பெயர் சட்டென நினைவுக்கு வரவில்லை.

இங்கு தான் மனோகர் டிராவல்ஸ் குழு நண்பர்களை சந்திக்க நேர்ந்தது.

20250827080931788.jpeg

அதுவரை படு கேவலமாக இருந்த சாலைகள் சீனாவில் கன ஜோராக மாறியது.

20250827080956806.jpeg

சாலையில் கால் வைக்கவே மனமில்லை. அத்தனை நேர்த்தியாக்கும்.

20250827081036414.jpeg

சென்னிமலையிலிருந்து ஒரு சிவனடியார். (பெயர் பாபு) செருப்பும் போடவில்லை. குளிருக்கு ஜாக்கெட்டும் போடவில்லை. கடைசியில் எல்லோரும் கெஞ்சிக் கேட்டு மனமிரங்கி போட்டுக் கொண்டார். நாங்கள் விடிய விடிய டெக்கத்லானில் ஷு என்ன, இத்யாதிகள் என்ன, இவரைப் பார்க்கையில் இது தாண்டா பக்தி என்று உள்மனம் சொல்லியது. அவர் இந்த யாத்திரை மட்டுமல்ல, கடந்த நாற்பது வருடங்களாக எந்த புனிதயாத்திரைக்கும் செருப்பு, ஜாக்கெட் போன்றவற்றை அணிந்து செல்லவில்லையாம்.

20250827081100725.jpeg

சாலையோரம் சோலையொன்று பாடும்.......( பின்ன பஸ்ஸில் பத்து மணி நேரம் பயணம் செல்கையில் ஆங்காங்கே இறக்கி விட்டா பொழுது போக வேண்டாமா ??)

20250827081124713.jpeg

பிரம்மபுத்திரா ஆறு… முதல் முறை பிரம்மபுத்திரா தரிசனம். அது ஒரு பரவசம். குறிப்பாக தென்னிந்தியாவில் நாம் பள்ளி காலத்தில் பிரம்மபுத்திரா ஆறு பற்றி பல முறை படித்திருப்போம். முதல் முறை பார்க்கும் போது, கடல் இல்லாத ஊரிலிருந்து வந்து கடல் பார்க்கும் மக்களைப் போல்….. ஒரு எக்ஸைட்மெண்ட்.

20250827081149276.jpeg

ஒரு சின்ன முக சுளிப்பு கூட இல்லாமல் ஒரு நாளைக்கு பல நூறு கிலோ மீட்டர்கள் அசராமல், முக்கியமாக அலுங்காமல் குலுங்காமல் ஓட்டிய ஓட்டுனர். பெயர்…. பெயரா முக்கியம். அந்த புன்னகை முகம் போதும். நினைவு வைத்துக் கொள்ள.

சாகா 4640 மீட்டர்கள்.

அக்கிளிமிடேஷன் அதாவது உயரத்திற்கு நம் உடலை தயார் செய்தவற்காகத்தான் இது போன்ற நகரங்களில் ஒரு நாள் இரண்டு நாட்கள் தங்க வைக்கப்படுகிறார்கள். ஏனெனில் ஆக்சிஜன் குறைவான அந்த பிரதேசங்களுக்கு நம் நுரையீரல் தயாராக இருக்காது.

உள்ளூர் ஆசாமிகள் ஓடுவார்கள். நமக்கு நடக்கையிலேயே மலையேறும் மூச்சு வாங்கும் எஃபெக்ட் இருக்கும். அப்படியென்றால் இமயமலை ஏறும் போது எப்படி இருக்கும்.

நடப்பதை விடுங்கள். பேசும் போது கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு ஏற்ற இறக்கத்துடன் பேசினாலே மூச்சு முட்டும்.

இரண்டு இரவுகள் சாகாவில் கழித்து விட்டு

ஒரு வழியாக மானசரோவர் சென்று சேர்ந்தோம்.

20250827081238895.jpeg

மானசரோவர் ஏரியில் குஜராத் குடும்பம்.

மானசரோவர் ஏறி பற்றி ஒரு சிறு குறிப்பு.

உலகின் மிக உயரமான நல்ல தண்ணீர் ஏரி இது. முன்பெல்லாம் மானசரோவர் ஏரியில் குளிக்க முடியும். தற்போது சீன அரசாங்கம் அதை தடை செய்து விட்டது. பாதுகாப்பு மற்றும் சுற்றுபுற சூழல் காரணமாகத்தான்.

மானசரோவர் ஏரி சுற்றி கெஸ்ட் ஹவுஸ் இருக்கிறது. ஆனால் கழிவறைகள் கிடையாது. இதற்காகவே 30 கி.மி. அருகாமையில் உள்ள தார்ச்சன் நகருக்கு சென்று விட்டோம்.

இரவு மானசரோவர் ஏரியில் சப்தரிஷிகள் வந்து செல்வதாக ஐதீகம் இருக்கிறது. பெங்களூர் போகாமல் பெங்களூர் பற்றி எழுதாதே என்று சுஜாதா சொல்வது போல அந்த அதிசய தெய்வீக நிகழ்வை பார்க்கும் பாக்கியம் இது வரை கிடைக்கவில்லை. இனி கிடைத்தால் அதைப் பற்றி எழுத உத்தேசம்.

அருகேயே 10 கி.மீ தூரத்தில் இராட்சதல ஏரியும் இருக்கிறது. இங்கு தான் இராவணன் தவம் செய்தாராம்.

2025082708133426.jpeg

மானசரோவர் இருக்கும் உயரம் கடல் மட்டத்திலிருந்து 4590 மீட்டர்கள்

ஏரியின் சுற்றளவு சுமார் 88 கி.மீ. அதிகபட்ச ஆழம் 90 மீட்டர்களாம். இந்த ஏரியில் இருந்து தான் பிரம்மபுத்திரா, சட்லஜ், சிந்து ஆறுகள் உற்பத்தியாகிறதாம்.

இவையும் நாம் பள்ளியில் படித்த ஆறுகள் தான்.

மானசரோவர் ஏரி இந்துக்களான நமக்கு மட்டுமல்ல, புத்த மதத்திற்கும், ஜைன மதத்திற்கும் புனிதமான ஏரி. ஜைன மதத்தில் முதல் தீர்த்தங்கரா ரிஷப்நாதருடன் தொடர்புடையது இந்த ஏரி.

நாங்கள் மானசரோவரில் தங்கவில்லை. எங்கள் 8 பேர் குழு மட்டும் நேராக சென்று தார்ச்சனில் தங்கி விட்டோம்.

தார்ச்சனிலும் இரண்டு இரவுகள் தங்குவது போலாகி விட்டது.

ஏனெனில் மனோகர் குழுவோடு தான் எங்கள் பெர்மிட்டும் இருக்கிறது என்பதனால் அவர்கள் சேலை தலைப்பை பிடித்துக் கொண்டே நாங்களும் செல்ல வேண்டியிருந்தது.

20250827081420442.jpeg

தார்ச்சனில் சீன சைவ உணவு. எத்தனை சாப்பிட்டாலும் மவனே பசி அடங்க மாட்டேன் என்கிறது.

தார்ச்சனில் தங்குவதற்கு சில பல காரணங்கள்.

மானசரோவரில் கழிவறை வசதிகள் கிடையாது. அதனால் தார்ச்சனில் தங்கலாம் என்ற யோசனை அனைவருக்கும் பிடித்துப் போக தார்ச்சன் வாசம்

அடுத்த நாள் எப்படியாவது அஷ்டபத் செல்ல வேண்டும் என்று புர்பு. எங்கள் திபத் ஏஜெண்ட்டிம் கேட்க அதெல்லாம் ரொம்ப கஷ்டம் என்று அலட்டிக் கொண்டார்.

சென்ற இரண்டு முறை சென்ற போதும் அஷ்டபத் மட்டும் பார்க்க கொடுத்து வைக்கவில்லை.

அதனால் முன்னாள் திபத் கைடு. தாஷியை அழைத்துக் கேட்கையில். தாஷியும் புர்புவும் ஓரே பள்ளி நண்பர்கள் என்பது ஒரு வகையில் வசதியாகப் போக புர்பு மனது வைத்து ஏற்பாடு செய்து விட்டார்.

அதற்கு ஒரு ஆளுக்கு கட்டணம் நம்மூர் கணக்கிற்கு ஆறாயிரம் ரூபாய். அதில் உள்ளே என்ன சூட்சுமம் இருக்கிறது என்பது தெரியாது ஆனால் அது தான் கட்டணம்.

20250827081540679.jpeg

அஷ்டபத் செல்ல இன்னொரு யோசனை கொடுத்தது நன் என்று அறிமுகமான ஒரு சீன பெண் குடும்பத்தினர். அவர்கள் இருவரும் அன்னை தெரசா மையத்தில் கொல்கத்தாவில் சந்தித்து காதலித்து இணைந்தவர்கள். இந்த முறை திபத்திற்கு லாசாவிலிருந்து கார் வாடகைக்கு எடுத்துக் கொண்டு ஓட்டி வந்திருக்கின்றனர்.

வீசாட் தொடர்பில் இருக்கிறார்கள்.

ஒரு ஆங்கிலப் பழமொழிப் படி, உங்கள் எந்தப் பயணமும் பூர்த்தியாவதில்லை, ஒரு புதிய நட்பை தேடிக் கொள்ளாதவரை. அப்படி நண்பர்களானது இந்தக் குடும்பம்.

அவர்களது உபயத்தில் அல்லது வழிகாட்டுதலில் திபத்தை நம்ம வண்டி ஓட்டி கடக்க வேண்டும் என்பது அடுத்த திட்டம். பார்க்கலாம்.

அஷ்டபத் கடந்த இரண்டு முறை போகாதது, அல்லது போக முடியாதது எத்தனை துரதிருஷ்டம் என்பது இந்த முறை புரிந்தது.

ஏனெனில் அங்கு காணக்கிடைத்த காட்சி.

அதை வர்ணிக்க வார்த்தைகள் எத்தனை மொழியிலும் பத்தாது.

ஒரு அற்புத அனுபவத்திற்கு.......

அடுத்த வாரம்….