தொடர்கள்
கதை
அன்யோன்யம் முனைவர் என். பத்ரி

2025911083924734.jpeg

அனந்து என்னுடைய வீட்டிற்கு அருகில் வசிப்பவன். என் வயதுதான் அவனுக்கும் இருக்கும். எப்பொழுது என்னைப் பார்த்தாலும் சிரித்துக் கொண்டு செல்பவன்,அவன் இன்று காலை என்னை கைப்பேசியில் அழைத்தான்.

’பேசலாமா? வேண்டாமா?’ என்று எண்ணிக் கொண்டிருந்த என்னை என்னுடைய மனைவிதான் உசுப்பி விட்டு பேசச் சொன்னாள்.

தொடர்ந்து அலறிக்கொண்டிருந்த ஃபோனை எடுத்து,’ஹலோ’ என்றேன்.

’உனக்கு நம்ம லயன்ஸ் கிளப் சார்பில் பாராட்டு விழா ஒன்று வைத்திருக்கிறோம். நம்ம வீட்டுக்கு பக்கத்துல இருக்க கல்யாண மண்டபத்தில்தான்.வரும் ஞாயிற்றுக் கிழமை மாலை. டேட்டை ப்ளாக் பண்ணி வைச்சுக்கோ’ என்று சொல்லிய அவன்,’உன் ஃபோட்டோ ஒன்று வேண்டும். சாயந்திரம் நானே உன் வீட்டிற்கு வந்து வாங்கிக் கொள்கிறேன்’என்று சொல்லி விட்டு ஃபோனை வைத்து விட்டான்.

’எதற்கு பாராட்டு விழா. நீங்கள் என்ன பண்ணி கிழித்துவிட்டீர்கள்?’என்று எனது பார்யாள் என்னை பார்த்து முறைத்து கேட்காமல் கேட்டாள்.

‘உங்களுடன் இத்தனை வருடம் குடும்பம் நடத்துவதற்கு எனக்குத்தான் பாராட்டு கொடுக்க வேண்டும்’அவள் முனகிக் கொண்டிருந்தது என் காதில் விழாமல் இல்லை.

எனக்கு நாள் முழுவதும் மிகவும் குழப்பமாக இருந்தது.உள்ளுக்குள் மகிழ்ச்சிதான்.என்றாலும் என் மனைவிக்கு கிடைக்காதது எனக்கு கிடைக்கிறது. இதில் அவளுக்கு ஏனோ மகிழ்ச்சி இல்லை.நாள் பூராவும் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு இருந்தாள்.

அனந்து அன்றுமாலை வரட்டும்.எனக்கு இந்த பாராட்டேல்லாம் வேண்டாம்.என் மனைவிக்கு கொடுத்து விடு எனச் சொல்லுகிறேன்’ என்றேன் என் மனைவியிடம்.

’யாரும் எனக்கு பிச்சை போட வேண்டாம்.நான்தான் எல்லோருக்கும் தினமும் போடுகிறேனே?’என்றாளே பார்க்கலாம்.

முறைத்துப் பார்த்த என்னை நான் கோவில் வாசலில் உள்ள பிச்சைக்காரர்களைச் சொன்னேன்’ என்று சொல்லி சமாளிக்கப் பார்த்தாள்.

’அவளது பென்ஷன் காசில் சாப்பிட்டு வரும் என்னைத்தான் சொல்லுகிறாள்.’என்று எனக்கும் புரியும். அவளுக்கும் தெரியும். 70 வயதில் நான் எங்கேயும் ஓடவும் முடியாது.ஒளியவும் முடியாது.மேலும் அசிங்கப்படுவதை தவிர்க்க நினைத்த நான் உள்ளே போய் படுத்தேன்.உறக்கம் வரவில்லை.

என் கைப்பேசியில் யூ டூயுபில் ஒரு பிரபல பேச்சாளர் பேசத் தொடங்கினார்.அடுத்த நிமிடம்,’கொர்..கொர்தான்’

அன்று மாலை 4 மணியிருக்கும். நான் அனந்துவுக்காக காத்திருந்தேன்.

சொன்னபடி வந்தான்.அவனிடம் கையில் தயாராய் வைத்திருந்த ஃபோட்டாக்களைக் கொடுத்தேன். ‘சிரிச்சாப் போல ஒரு ஃபோட்டோவும் இல்லையா?’என்றான்.

வந்தவனுக்கு காஃபி போடப்போன என்மனவி சமையலறையில் இருந்தாள்.

தைரியமாக நான் கல்யாணத்துக்கு முன்னாடி எடுத்த ஃபோட்டாவா இருந்தால் தேவலையா?என்றேன்.

விழுந்து,விழுந்து சிரித்த அனந்துவின் சிரிப்புச் சத்தம் சமையல் அறையில் ஒலிபரப்பாகி விட்டது.

ஹாலுக்கு காஃபியுடன் வந்த அவள் ,’என்னஜோக்? என்னசிரிப்பு ?’என்றாள் அவசர,அவசரமாக.

அவளிடம் விஸ்தாரமாக விவரத்தைச் சொல்லி என்னைப் போட்டுக் கொடுத்த மகிழ்ச்சியில் இருந்தான் அனந்து.

’ஆமாம். கல்யாணத்துக்கு அப்புறம் அவரையே நம்பி வந்த அவரோட மனைவியாகிய நான் அதிகம் சிரிக்கனும்னு அவரோட சிரிப்பையும் எனக்கு கொடுத்து விட்டார்.அங்கு குறைந்து விட்டது.இங்கு கூடி விட்டது.’என்று சொன்னவள்;உங்க வீட்டில் நீங்கள் தான் ரொம்ப சிரிச்ச முகமாக இருக்கீங்க” என்று வேறு சொன்னாள் என் புத்திசாலி மனைவி பார்வதி.

’சரி,சரி’ இந்த ஃபோட்டோ நல்லா இருக்கு .நான் எடுத்துக் கொள்கிறேன்.’என்று புறப்பட்டான் அசிங்கப்பட்ட அனந்து.

எனக்கு,’ ஒரு வேளை பாராட்டு விழா கேன்சல் ஆகி விடுமோ? என்ற சிந்தனை ஏற்பட்டது.

புத்திசாலி மனைவி பார்வதியைப் பார்த்து புன்னகைத்தேன் நான்.

‘பின்ன என்னங்க?உங்களை கலாய்க்க எனக்கு மட்டும்தான் உரிமை. அதை யாருக்கும் நான் விட்டுக் கொடுக்க மாட்டேன்” என்றவாறு என மார்பில் சாய்ந்தாள் என் பார்வதி. அன்யோன்யம் என்பது என்ன என்பது எங்கள் இருவருக்கும் நன்கு புரிய வந்த நேரம்தான் அது.

சமீபத்தில் முதியோர் தினவிழா நிகழ்வை முன்னிருந்து சிறப்பாக நடத்தினேனாம்.அதை உள்ளூர் செய்தித்தாள்கள் பறைச்சாற்றியிருந்தனவாம்.அதற்காகத்தான் இந்த பாராட்டு விழாவாம். விழாவில் மேடையில் அனந்துவுடன் சிரித்து பேசிக் கொண்டிருந்தேன்.முன்வரிசையில் பார்வதி கைத்தட்டி என்னைப் பார்த்து கைத்தட்டி ஊக்கப்படுத்திக் கொண்டிருந்தாள்