தொடர்கள்
தொடர்கள்
கைலாய பயணம் 6.    பரிக்கிரமா தினங்கள். - ராம்

2025911091812237.jpeg

நேபாளில் வளைய வந்தது, பசுபதிநாத் தரிசனம், இன்ன பிற தினங்கள் அனைத்தும் நம்மை செலுத்துவது இந்த பரிக்கிரமா நோக்கித் தான்.

இங்கு தான் கைலாய பயணம் மேற்கொள்பவர்கள் சில விஷயங்களை கவனிக்க வேண்டும்.

யமத் வார் வரை வண்டியில் கொண்டு விட்டு விடுவார்கள். அதற்குப் பின் தான் நடை. அதிகமில்லை 15 கி.மீ மட்டுமே.

இதில் பெரிய சிகரங்களோ அல்லது கடினமான மலையேற்றமோ கிடையாது. இருப்பினும் அந்த உயரத்தில் அந்த குளிரில் ஏறுவது கடினம்.

எங்கள் குழுவில் டாக்டர் பிரபா, செல்வி குதிரையை அமர்த்தி விட்டனர். அஞ்சலியை கேட்டோம் குதிரை வைத்துக் கொள் என்று. ஹூஹூம். நடக்கிறேன் என்று மறுத்து விட்டார்.

அந்த குதிரைகளை கூட்டமாக எடைக்கு போட்டாலே நாப்பதாயிரம் ரூபாய் போகாது. ஆனால் பரிக்கிரமாவிற்கு நாற்பதாயிரம் ரூபாய் வாங்குகிறார்கள். அந்த காசுக்கு குதிரையுடன் ஒருவர் வருவார்.

முதல் நாள் கூட பரவாயில்லை. அடுத்த நாள் டோல்மாலா பாஸ் மலையேறுவதற்கு நடக்க முடியாதவர்களுக்கு குதிரை அவசியம்.

ஆனால் குதிரையில் அமர்வதும் சுலபமல்ல. தொடை, ஆடுசதை, பின்னே வலி பின்னியெடுத்து விடும்.

டோல் மாலா பாஸ் செல்வதும் அந்த உச்சிக்கு குதிரையில் போவதற்கு நிறைய தைரியம் வேண்டும்.

குதிரை வேண்டாம் என்று சொன்ன அஞ்சலிக்கு முதல் நாள் ஏற முடியவில்லை. மூச்சு வாங்கியது.

அடிக்கடி தளர்ந்து போய் அமர்ந்து கொள்ள வேண்டியிருந்தது பாவம்.

நாக்ஸ், டாக்டர், பிரவீன், கோமதியெல்லாம் அனாயசமாக நடந்து விட்டனர். எனக்கும் அவ்வளவு சிரமம் தெரியவில்லை.

மனோகர் டிராவல்ஸ் ஆட்களில் பலர் நடந்து வந்து விட்டனர். அதில் செருப்பு போட்டுக் கொண்டு வந்த சிவனடியார் ஆச்சரியப்படுத்தினார்.

2025911092701991.jpeg

பரிக்கிரமாவிற்கு முதல் நாள் ஆக்சிஜன் அளவு எடுப்பது வழக்கம். அதில் ஒரு பெண்மணிக்கு 40 தான் இருக்க அவரை பரிக்கிரமா ஏறக்கூடாது குதிரை தான் வைக்க வேண்டும் என்று திபத் கைடு சொல்ல அவருக்கு ஒரே வருத்தம்.

என்னடா இது சிவன் கொடுக்கும் சோதனை என்று ஏறக்குறைய அழவே துவங்கி விட்டார். இறுதியில் அவரது உறுதி வென்றது. முதல் நாள் மட்டுமல்ல இரண்டாவது நாள் பரிக்கிரமாவும் ஜம்மென்று நடந்து விட்டார்.

கைலாயம் செல்லும் ஒவ்வொருவருக்கும் ஒரு அனுபவம். நிச்சயம்.

நாங்கள் நேபாளில் பார்த்த சூரிய நாராயணன் என்ற சிவனடியாருடைய அனுபவம் சிலிர்ப்பானது. இனி ஊர் திரும்ப முடியாது என்ற நிலையில் அவருக்கு ஒரு ஏயிம்ஸ் மருத்துவ குழுவையே ஆச்சிரியமாக ஏதேச்சையாக அனுப்பி வைத்தார் எம்பெருமான்.

அதில் இன்னொரு விசேஷம் அவரது விலை மிகுந்த பொருட்கள் இருந்த பையை நேபாளில் தொலைத்து விட அது ஒரு கடைக்காரருக்கு கிடைத்து அவர் அதிலிருந்த தொலை பேசி எண்ணில் சூர்யநாராயணன் மனைவியாரை தொடர்பு கொண்டு எப்படியோ அந்த பை சில நாட்கள் கழித்து மீண்டும் அவரிடமே திரும்ப வந்து விட்டது. இதை அவர் விளக்கி சொன்ன போது வியப்பை அடக்க முடியவில்லை.

இது போன்ற அனுபவம் ஒவ்வொருவருக்கும் உண்டு.

முதல் சில கி.மீட்டர்களிலேயே கைலாய மலை தரிசனம் கிடைக்கத் துவங்கி விடும்.

கைலாய மலை அடிவாரத்தை அடையுமுன்பு ஒரு சில இடங்களில் குடிக்க டீ கிடைக்கிறது.

2025911092751721.jpeg

மலையின் உயரங்கள், அந்த பள்ளத்தாக்கு, தூரத்து மலைமுகடில் தெரியும் தொடுவானம், சினிமாக்களில் மட்டுமே பார்த்திருக்கக் கூடிய பிரம்மாண்ட காட்சிகள்……..

ஒவ்வொரு நடையும் ரசித்து ரசித்து சிவனின் நினைவில் லயித்து லையித்து நடக்க வேண்டிய நிமிடங்கள்…….

எங்களுடன் வந்த குஜராத் குடும்பத்தில் பாவம். அந்த அம்மாவிற்கு நடக்க முடியாமல் போக அவர்கள் தான் கடைசியில் வந்தார்கள்.

கூட்டம் அதிகமாக இருந்ததான் கொட்டடி போல ஆறு ஆறு பேர்கள் இருபது பேர்கள் தங்க வைக்கப்பட்டோம்.

இரவு தலை மாட்டில் சிவன். இரவு நேரமும் கைலை மலை தகதகத்தது.

2025911093256458.jpeg

இரவு படுக்கை அறைக்குள் மனோகர் டிராவல்ஸில் வந்த ஆளுடன் ஒரு சின்ன வாக்குவாதம். அவர் லைவ் பூஜை எங்கோ பார்த்துக் கொண்டிருக்க நானும் நாகராஜும் அந்த ஆளுடன் மல்லுக்கட்டி, இந்த கணத்தில் அவரிடம் மன்னிப்பு கேட்க தோன்றுகிறது.

கைலாயம் போவதே புண்ணியம் தேடி. அன்பே சிவம். அதில் முகம் தெரியாத அந்த மனிதரிடம் எதற்கு துவேஷம். மனதார அந்த இரவுக்கு அவரை மன்னித்து எங்களையும் மன்னிக்க இந்த சந்தர்ப்பம் உதவட்டும்.

அடுத்த நாள் காலை அஞ்சலி மலையேற விருப்பமா என்று கேட்ட போது சிவனைப் பார்த்து ஒரு கும்பிடு போட்டு விட்டார்.

எங்கள் குழுவில் பிரபா, செல்வி, அஞ்சலி திராபுக் என்ற இடத்திலிருந்து மீண்டும் தார்ச்சன் திரும்பி விட்டனர். இருவர் குதிரையில் ஒருவர் ஜீப்பில். நடக்க முடியாதவர்களுக்கு ஜீப்பில் திரும்ப 500 சீன யுவான்கள் மட்டுமே.

டாக். மகாதேவன், நாகராஜ், பிரவீன் கோமதியுடன் நான் டோல் மாலா பாஸ் வழியாக ஜுதுல்புக் வந்து சேர்ந்தோம்.

அதிலும் மலையிறக்கம் கடினம். வழியே கெளரி குண்ட் என்ற குளம் வருகிறது.

அதில் இறங்கி தண்ணீர் தெளித்துக் கொண்டு வர ஆசை தான். ஆனால் இறங்கி ஏற நேரமாகும் என்பதால் ஜூதுல் புக் முன்னே. இருக்கும் டீக்கடை வரை வந்து அங்கிருந்து ஜீப் எடுத்துக் கொண்டு தார்ச்சன் வந்து விட்டோம்.

2025911093406938.jpeg

டோல் மாலா பாஸ் என்ற உச்சியில் நம் குடும்ப உறுப்பினர்களின் பெயர்களை ஒரு கொடியில் எழுதி கட்டி விடும் திபத்திய வழக்கம் இருக்கிறது.

இந்த இடத்தில் ஒரு விஷயம்.

நாங்கள் செய்ய முடியாத, செய்ய கிடைக்காத விஷயங்களை எங்களுடன் வந்திருக்க வேண்டிய பார்த்தசாரதி செய்து முடித்து விட்டார்.

அவருக்கு எழுபது வயது ஆகி விட்டது அதனால் கைலாய மலைக்கு போகவே முடியாது என்று சொல்லி விட்டனர்.

அவருக்கு சிவன் மீது ஏக கோபம். இனி சாமியாவது பூதமாவது என்று சூளுரைத்து விட்டார்.

ஆனால் அந்த ஆச்சரியம் அவருக்கு நிகழ்ந்தது சிவனின் பரிபூரண அருள் இருந்ததால் தான்.

யாருக்கும், கற்பனையிலும் கிடைக்காத ஒரு பேறு.

2025911093501717.jpeg

அவருடைய மகத்தான அனுபவத்துடன் இந்த மினி தொடர் அடுத்த வாரம் நிறைவு பெறும்.

அடுத்த வாரம்