தொடர்கள்
தொடர்கள்
நயத்தகு நற்றிணை- 40 மரியா சிவானந்தம்

2025910152705498.jpg

தலைவிக்கும் தோழிக்கும் இடையில் விவாதம் தொடங்கியது.

தலைவனின் பிரிவை நினைத்து வருந்திக் கொண்டே இருக்கிறாள் அத்தலைவி. இரவு வந்த போதும் வராத தலைவனை நினைத்துப் புலம்பிக் கொண்டே இருக்கிறாள் தலைவி.

அவளைத் தேற்றும் விதமாக, " நீ புலம்புவதை நிறுத்து. தலைவன் உன்னைத் தேடி வருவான்" என்கிறாள் தோழி.

அவ்வளவு விரைவாக தன் மனநிலையை மாற்றிக் கொள்வாளா அந்தக் காதலி?

" என் காதலன் வரும் தேரொலி என் காதில் இன்னும் விழவில்லை.நீ சொல்கிறபடி அவன் இப்போது வரமாட்டான், நான் வருந்தாமல் என்ன செய்ய முடியும், சொல் ? " என்று எதிர் கேள்வி கேட்கிறாள் அவள்.

அவள் கூறுவாள் , " வெங்கதிரோன் மேற்கில் சென்று மறைந்து விட்டான். அடும்புக் கொடியினை அறுத்துக் கொண்டு வரும் சக்கரங்களைக் கொண்ட அவனது தேரின் ஒலியை என் காதுகள் இன்னும் கேட்கவில்லை.

என் காதல் நோய் பெருகி நான் துயர் கொள்கிறேன் , நீ பிறர் அறிய என் துயரை வெளிப்படுத்த வேண்டாம் என்று சொல்கிறாய்.

அதோ அந்த குருகினைப் (நாரை போன்ற சிறு பறவை) பார்!

அது பரந்து விரிந்த கடற்பரப்பில் தன் இரையைத் தேடி உண்ணும்.

பின்னர் புலால் மணம் வீசும் கடற்புறத்து குடியிருப்பில் உள்ள பனை மரத்தின் மடலில் அமர்ந்துக் கொண்டு தன் பேடையைக் கூடிட தன் கூட்டுக்கு அழைக்கும். அக்குருகின் அழைப்பொலி கேட்கும் நான் எப்படி வருந்தாமல் இருக்க முடியும் ?" என்று கேட்கிறாள்.

நெய்தல் நிலத்தின் அழகான பாடல் இது . ஒரு பறவை எழுப்பும் ஒலி காதல் உணர்வுகளை ஏற்படுத்துவதாக கூறும் கவித்துவம் அழகு .

கடுங் கதிர் ஞாயிறு மலை மறைந்தன்றே;

அடும்பு கொடி துமிய ஆழி போழ்ந்து, அவர்

நெடுந் தேர் இன் ஒலி இரவும் தோன்றா;

இறப்ப எவ்வம் நலியும், நின் நிலை;

''நிறுத்தல் வேண்டும்'' என்றி; நிலைப்ப

யாங்ஙனம் விடுமோ மற்றே! மால் கொள

வியல் இரும் பரப்பின் இரை எழுந்து அருந்துபு,

புலவு நாறு சிறுகுடி மன்றத்து ஓங்கிய

ஆடு அரைப் பெண்ணைத் தோடு மடல் ஏறி,

கொடு வாய்ப் பேடைக் குடம்பைச் சேரிய,

உயிர் செலக் கடைஇப் புணர் துணைப்

பயிர்தல் ஆனா, பைதல்அம் குருகே?

(நற்றிணை 338)

இப்பாடலை இயற்றியவர் மதுரை ஆருலவிய நாட்டு ஆலம்பேரி சாத்தனார் என்னும் புலவர்.

மேலும் ஒரு அற்புதமான பாடலுடன் சந்திப்போம்.

தொடரும்