பக்கத்தில் இருந்த காலியான படுக்கை பொத்தென்று நிஜத்தில் தள்ளியது அவரை. இது என்ன காலம்! எதற்கு இப்படி நடக்கிறது.
எங்கே அவள்? எப்படி காணாமல் போகமுடியும்? சச்சிதானந்தத்திற்கு ஒன்றும் புரியவில்லை. 1975 இல் இருந்து கூடவே பயணித்த உயிர் தனியாக எப்படி போகமுடியும். முன்னும் பின்னுமாக மனம் அலைந்தது. முதல் முறை அவளை பெண் பார்த்த பின் அம்மாவிடம் வந்து புலம்பியது நினைவிருந்தது. “அப்பாகிட்ட சொல்லுமா எனக்கு இந்த பொண்ணு வேண்டாம். உயரம் ரொம்ப கம்மி, பல்லு வேற கொஞ்சம் தூக்கல்.சரியா வராது மா.”
“இங்க பாரு, எல்லாம் சரியா வரும்.அத்தை பொண்ணு. நீயே வேண்டாம்னு சொல்லிட்டா யாரு கட்டிப்பா அவள? ஒரு தியாகத்தில் ஆரம்பித்ததுதான் தான் தன் வாழ்க்கை என்று ஆரம்பத்தில் எப்போதும் ஒரு கர்வம் இருந்தது அவருக்கு. ஒரு பெரிய மனிதத்தனத்தை காட்டுவது போல் நீ வேணும்னா மேல படி என்றார். படித்தாள். இரண்டு வருடம் வேலைக்குச் சென்றாள். குடும்பம் கொஞ்சம் தள்ளாடியது. வேலையை விட்டாள். எல்லாம் எப்போது அவள் கைமாறியது என்று கூட அவரால் யோசிக்க முடியவில்லை. அவள் உயரமோ, பல்லோ அவருக்கு ஒரு பொருட்டாகவே இல்லாமல் போனதும் எப்போதென்று அவருக்குப் புரியவில்லை. எல்லாவற்றையும் அவள் செய்தாலும் அவர் செய்தது போல பிம்பத்தை அவளால் எப்படி ஏற்படுத்த முடிந்தது என்றும் அவருக்குப் புரிந்தது இல்லை. ஆனால் அவளுக்கு எல்லாமே புரிந்திருந்தது. அவள் தன்னை வெளியில் காட்டிக்கொள்ளவே இல்லை. அவள் யாரென்று யாருக்கும் தெரியாது. அவள் எங்கும் இருந்ததால் எங்கேயுமே இல்லாமல் போயிருந்தாள். அவருடன் தனியே வெளியே போக மாட்டாள்.
எந்த புகைப் படமும் எடுத்துக் கொண்டது கிடையாது. இதெல்லாம் ஒரு விஷயமாக கூட அவர் இத்தனை வருடங்களாக அவர் நினைத்ததில்லை. ஒரு பத்து நாட்களுக்கு முன்பு அவருக்கு லேசாக ஜுரம் வந்தது. வேறு யாருமே இல்லாததால் டாக்டரிடம் அவள் அழைத்து செல்லவேண்டிய கட்டாயம். அவளுடைய தயக்கத்தை வைத்து தான் அவருக்கு இதுவரை அவள் தனித்து தன்னுடன் வந்ததில்லை என்பதே புரிந்தது. கட்டாயப் படுத்ததிக் கூட்டிச் சென்றார். நாலு அடி பின் தங்கியே தான் நடந்தாள்.
டாக்டர் பேசும் போதும் நின்று கொண்டுதான் இருந்தாள். வெளியில் வரும்போது அவள் கால் தளர்ந்து போயிருந்தது. அவர் கை தாங்கலாக அழைத்து வர வேண்டியிருந்தது. ஒன்றும் பேசாமல் தான் வந்தாள். வீட்டுக்கு வந்ததும் எப்பொழுதும் போல சாமி அறைக்குச் சென்று கும்பிட்டாள். அன்று அவள் சற்று அதிக நேரம் சாமி அறைக்குள்ளேயே இருந்தது போல அவருக்குத் தோன்றியது.
வெளியில் வந்ததும் அவளைப் பார்த்தார். கண்கள் கலங்க லேசாக சிரித்தாள். அவள் சிரித்த பின் தான் இது போல இது வரையில் நடந்தது இல்லை என்று அவருக்குப் புரிந்தது. அவரும் சிரித்தார். அவள் அவருக்கு இரவு சாப்பாடு போட்டு விட்டு அறையில் சென்று படுத்தாள். எழுந்திருக்கவில்லை.
“ஆச்சு இன்னியோட பத்து நாள் “ தனக்குள்ளே சொல்லிக் கொண்டார். மெதுவாக நடந்து கட்டிலைச் சுற்றி அவள் படுக்கும் பக்கம் சென்றார். “காமாக்ஷி” என்று சொல்லிக்கொண்டே அந்த காலியான மெத்தையை வருடினார். பெயர் சொல்லும் போதுதான், தான் அவளை பெயர் சொல்லிக்கூப்பிட்டதே இல்லை என்று புரிந்தது. “காமாக்ஷி, காமாக்ஷி என்று பிதற்ற ஆரம்பித்தார்.
“அப்பாவும் அம்மாவும் ஒருத்தருக்கொருத்தர் ரொம்ப பிரியம்” குழந்தைகள் யாரிடமோ அவர்களுக்கு புரிந்ததை சொல்லிக்கொண்டிருந்தனர்.
Leave a comment
Upload