வில்லுக்கு விஜயன் என்ற பெயர் பெற்ற அர்ஜுனன் பஞ்சபாண்டவர்களில் தருமனுக்கும் பீமனுக்கும் பின் பிறந்தவன். இரு கைகளாலும் அம்பை பிரயோகிக்க வல்ல சவ்யசாசி. பார்த்தன், பல்குணன், தனஞ்செயன், பீபத்ஸூ என வேறு பெயர்களும் கொண்டவன். வீரமும் மன உறுதியும் அழகு உணர்ச்சியும் கொண்ட அர்ஜுனன் எல்லோரும் உள்ளங்களையும் கவர்ந்தவன் (திரௌபதி சுபத்திரை உட்பட)
அர்ஜுனன் செய்த அரிய செயல்கள் பல. துரோணாச்சாரியாரை முதலையிடமிருந்து காப்பாற்றினான். இந்திரலோகம் சென்றபோது இந்திரன் கட்டளைக்கிணங்க மாதலி தேர் செலுத்த அசுரர்களையும் காலகேயர்களையும் அழித்து பிளக்க முடியாத கவசத்தை பரிசாக பெற்றான்.
சூதில் தோற்ற தருமரை அனைவரும் பழித்தபோது அர்ஜுனன் பகைவர்களின் சூழ்ச்சி அறிந்து பீமனை அமைதி படுத்தினான். அதற்குப் பிறகு விகர்ணன் நியாயம் கூறினான்.
வியாசரின் அறிவுரைப்படி வனவாச காலத்தில் துரியோதனனின் பலம் பெருகும் வேளையில் பாண்டவர்கள் வலிமை அடைய வழி பெற்றனர். அதன்படி அர்ஜுனன் இமயமலை சென்று தவம் மேற்கொண்டு சிவனிடம் இருந்து பாசுபத அஸ்திரம் பெற்றான். அதற்கு முன் சிவனே வேடனாக அர்ஜுனனிடம் போரிட்டு பரிசீலனை செய்தார்.
இந்திரலோகத்தில் இந்திரன் உதவியால் நுண் கலை (நடனம், இசை)களை கசடற கற்றான். இந்திரன் அனுப்பிய சித்திரசேனன் ஊர்வசியை அனுப்பி மனவலிமையை சோதித்தான். பீபத்ஸூவிடம் ஏமாந்த ஊர்வசி அவனை பேடியாக சாபமிட்டாள். பீபத்ஸூ என்றால் ‘தகாத செயல்களை செய்ய மாட்டான்; கூச்சப்படுவான்’ என்று பொருள். இந்திரன் அருளால் - சாபம் வரமாகி - விராட தேசத்தில் பிரகன்னளையாக உருமாறி அஞ்ஞான வாசம் செய்யவும் இளவரசி உத்தரைக்கு நடனமும் இசையும் பயிற்றுவிக்கவும் உதவியது.
துரியோதனன் சேனை ஆநிரை கவர்ந்த போது அரசகுமாரன் உத்தரன் நல்ல சாரதி கிடைத்தால் அர்ஜுனனை போல போரிடல் எளிது என எண்ணவே சைரந்தரி(திரௌபதி) பிரகன்னளை பற்றி கூறி பின் சாரதியாக அனுப்பினாள். கௌரவ சேனை கண்டு உத்தரனோ திகைத்து ஓட, பிரகன்னளை ஓடிப் பிடித்து, ஊக்கம் அளித்த பின் உத்தரன் தேரை செலுத்த வன்னி மரத்தில் ஒளித்து இருந்த ஆயுதங்களை எடுத்து காண்டீபம் ஏற்றி சேனையை துரத்தி அடித்தான்.
பிரகன்னளை அர்ஜுனனே என அறிந்த விராட அரசர் அரசகுமாரி உத்தரையை அர்ஜுனனுக்கு கன்னிகாதானம் செய்து தர விரும்பினார். அர்ஜுனனோ “அது தகாது; உத்தரை என்னிடத்தில் நாட்டியமும் கானமும் கற்றதால் நான் அவளுக்கு ஆசாரியனும் தகப்பனும் போல் ஆவேன்” என்று கூறி தன் மகன் அபிமன்யுவுக்கு மணம் செய்வித்து மருமகள் ஆக்கிக் கொண்டான்.
குருஷேத்திரத்தில் திரண்டிருந்த கௌரவ பாண்டவ அணிகளுக்கு இடையில் உடலும் உள்ளமும் நடுங்கி அர்ஜுனன் யுத்தத்தை தொடங்கவில்லை. கண்ணன் அறவுரை கேட்டதும் பார்த்தனின் மனக்குழப்பும் தீர்ந்தது. பின் பார்த்தசாரதி தேரை செலுத்த அவர் உள்ளம் அறிந்த பார்த்தன் அதன்படியே யுத்தம் செய்து வெற்றி கண்டான்
பத்தாம் நாள் யுத்தத்தில் சிகண்டியை முன்னிறுத்தி போரிட்டு (கூகையை காக்கை வெல்வது போல) பீஷ்மரை வீழ்த்தினான்.
பிரிய மகன் அபிமன்யு வதத்துக்கு பழி தீர்க்க சபதம் செய்து ஜெயத்ரதனை (கொக்கு போல)கொன்ற போது(அருவினை) வேளை முக்கிய பங்கு வகித்தது. அத்துடன் அர்ஜுனன் அம்பால் ஜெயத்ரதனின் தலை துண்டாடப்பட்டு சிந்துராஜன் தலை மீது விழ அவனும் தலை சிதறி சாபப்படி இறந்தான்.
குருஷேத்திர யுத்தத்தில் பாண்டவர் அணிகள் இடையூறு ஏற்பட்ட போதெல்லாம் அர்ஜுனன் வந்து பாதுகாத்தான். அதே வேளையில் கௌரவர்களுக்கு இடையூறு முன்னரே திட்டமிட்டோ கண்ணனால் ஏற்பட்ட கணமே உடனடியாக ஏற்படுத்தப்பட்டோ முயற்சிகள் வீணடிக்கப்பட்டன. விதிவிலக்கு - சுபத்ராபுத்திரன் பத்ம வியூகத்தில் அகப்பட்டு வீரமரணம் அடைந்தது. பீஷ்மரும் துரோணரும் பலமுறை யுத்தத்தின்போது “பாண்டவர்களை யாரும் கொல்ல முடியாது” என்றும் “அர்ஜுனனை போரில் வெல்ல முடியாது” என்றும் கூறினர். அவ்வாறே குருஷேத்திரப் போரில் வென்று தருமனுக்கு முடிசூட அர்ஜுனனும் சகோதரர்களும் துணையாக இருந்தனர்.
குறளும் பொருளும்
பெருமைக்குரியவர்கள் மற்றவர் குறைகளை மறைப்பார்கள்; சிறியவர்கள் அதை மட்டும் எடுத்துக் கொள்வார்கள்.
அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
குற்றமே கூறிவிடும் 980
அரிய செயல்களை நல்ல வழியில் செய்பவர்கள் பெருமை உடையவர்கள்.
பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை உடைய செயல் 975
காக்கை ஆந்தையை பகலில் வெல்ல முடியும்; அதுபோல் அரசர்களும் பகைவர்களை வெல்வதற்கு தக்க சமயம் வர வேண்டும். (.ஜெயத்ரதன் வதம்)
பகல் வெல்லும் கூகையை காக்கை இகல் வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது 481
கொக்கை போல காத்திருந்து, தக்க சமயம் வரும்போது அதன் குத்தை போல் விரைந்து செயல்பட வேண்டும் (.பீஷ்மர், துரோணர், ஜெயத்ரதன், கர்ணன் வதம்)
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத் தொக்க சீர்த்த இடத்து 490
வெற்றி பெறுவதற்கு சரியான காலம் வந்துவிட்டால் உடனே சிறப்பாக செய்து விட வேண்டும்.
எய்தற்கு அரியது இயைந்தக் கால் அந்நிலையே
செய்தற்கு அரிய செயல் 489
ஒரு காரியத்தை சரியாக செய்யும் முறை அதைப்பற்றி தெரிந்தவன் (பார்த்தசாரதி) உள்ள கருத்தை அறிவது.
செய்வினை செய்வான் செயல்முறை அவ்வினை
உள் அறிவான் உள்ளம் கொளல் 677
ஒரு காரியத்தை, எந்த வழிகளில் எல்லாம் தன்னால் இயலுமோ, அந்த வழிகளில் எல்லாம் முயலுதல் நன்று. அவ்வாறு தான் முயன்ற வழிகளில் இயலாத விதத்தில், அதன் போக்கை ஆராய்ந்து, வேறு எவ்வழியில் அது முடியுமோ அவ்வழியில் செயற்படுக.
ஒல்லும்வாய் எல்லாம் வினை நன்றே ஒல்லாக்கால்
செல்லும்வாய் நோக்கிச் செயல் 673
ஒரு செயலால் மற்றொரு செயலை செய்து கொள்வது, யானையால் யானையை பிடிப்பது போல.( உத்தரன் தேர்-போர்-அபிமன்யு திருமணம் ; ஜெயத்ரதன் வதம்)
வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று 678
காரியம் முடியுமா? தடங்கல் வருமா முடிந்தால்? நமக்கு என்ன பயன்? இவைகளையும் பார்த்துச் செய்ய வேண்டும்.
முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்
படு பயனும் பார்த்துச் செயல் 676
தவ நெறிக்கேற்ற மன இயல்பு கொண்டவருகே தவமும் கைகூடும். அந்நல்லொழுக்கம் இல்லாதவர், அதை தானும் மேற்கொள்வது வீணான முயற்சியே.
தவமும் தவம் உடையார்க்கு ஆகும் அவம் அதனை
அஃதிலார் மேற்கொள்வது 262
துறவு என்றால் ஐம்பொறிகளால் நுகரும் புலன்கள் ஆசைகள் ஐந்தையும் வென்று அடக்கி ஆள வேண்டும்; நாம் விரும்புகிற அனைத்திலும் ஒரு சேர பற்று விட வேண்டும்.
அடல் வேண்டும் ஐந்தன் புலத்தை விடல் வேண்டும்
வேண்டிய எல்லாம் ஒருங்கு 343
எந்த காரியத்தையும் எளிதாக கருதாமல், முழுவதும் சரியான இடம் கண்ட பின் தான் தொடங்க வேண்டும்
தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடம் கண்ட பின் அல்லது 491
தக்க கருவிகளால் தக்க சமயத்தில் செய்தால்,செய்ய முடியாதது என்பது இல்லை.
அருவினை என்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின் 483
Leave a comment
Upload