இப்படித்தான் எனக்குள் சினிமா வந்து சேர்ந்தது. சினிமாவின் வசீகரம் மகத்தானது. நுட்பமானது. அந்தரங்கமானது. ரகசியமானது. அப்போதெல்லாம் ஒவ்வொரு முறையும் சினிமா துவங்கிய சில நிமிடங்களில் அந்த முக்கியமான கதாபாத்திரமாக மாறி சாகசம் செய்யவோ, ஆபத்பாந்தவனாக மற்றவர்களை ஆபத்திலிருந்து காப்பாற்றுவதோ, அபயம் கேட்டு வருகிற நாயகிகளுக்கு உதவுவதோ, பிற்பாடு காதல் செய்வதோ என்று மனது உளம்மாறிப்போகும். அப்போது நான் நானில்லை. அந்த பிடித்தமான நாயகன். அவன் சிரிக்கும்போது சிரிப்பேன். அழும்போது அழுவேன். ஏழைப்பங்காளனாக மாறும்போது காலரை தூக்கிவிட்டுக்கொள்வேன். காதலிக்கும்போது ரகசியமாய் நானும் காதலிப்பேன். அந்த நேரங்களில் எப்படி நாம் படம் தொடங்கிய சில நிமிடங்களில் நம்மை தொலைத்து விடுகிறோம் என்று தோன்றும்.
அதை ஒரு சவாலாகவே எடுத்துக்கொண்டு அடுத்தமுறை திரைப்படம் பார்க்க செல்கிறபோது, தன்னுணர்வு தவறாதபடி கவனமாய் அந்தந்த கதாபாத்திரங்களில் இருந்து விலகியிருக்க பிரயத்தனப்படுவேன். ஆனால் ஒவ்வொரு முறையும் ஒருசில நிமிடங்கள் முன்னப்பின்ன என்று அந்த திரைப்பட நாயகர்கள் எப்படியோ, என்ன மாயம் செய்தோ கவர்ந்திழுத்து விடுவார்கள். அதனால் அந்த திரைப்படம் முடிகிறவரை அது ஒரு திரைப்படம். ஒரு கலை. ஒரு நிகழ்ச்சி. நாம் அதை பார்வையிட வந்திருக்கிறோம் என்கிற எண்ணமே அற்றுப்போய்விடும். நிஜஉலகம் மறைந்து போகும். அந்த திரையில் தோன்றுகிற நிழல் உலகம் அதிநிஜஉலகமாகிவிடும். அப்போதெல்லாம் சாகசகாரனாக பிரபஞ்ச நாயகனாக மனம் உருவெடுத்துவிடும்.
அப்படிப்பட்ட நாயக பிம்பம் உள்ளூர பயணித்து முழுமையாக ஆக்கிரமித்துக்கொள்கிறதில், என்னை நோக்கிப் பார்த்தபடி எரிந்து போயிருந்த அந்த அணிற்குஞ்சின் அசையாகாட்சி மனதில் இப்போதும் சமயங்களில் திடுமென வந்து குற்றவுணர்ச்சியாய் நிழலாடும். நீ எப்படியும் காப்பாற்ற வந்துவிடுவாய் என்று அந்த கடைசி நொடி வரை நம்பிக்கையோடு இருந்தேன் என்று அந்த அணில் எனக்குள் வந்து உணர்த்தும். என் இயலாமை குறித்து அப்போதெல்லாம் இதயம் கூனிக்குறுகிப்போகும். உண்மையில் எனக்கு நினைவு தெரிந்து நான் இரண்டாவது முறையாக அழுதது அப்போது தான். முதல் முறை பாலர்பள்ளி என்கிற எல்.கே.ஜி வகுப்பில் சேர்ப்பிக்க அம்மா கையில் காசு தந்து, கருப்பையா அண்ணன் கடையில் குச்சிமிட்டாய் வாங்கித்தந்து, இடுப்பில் தூக்கிக்கொண்டு போய் விட்டபோது அழுதது ஞாபகம் இருக்கிறது. இரண்டாவது குத்திக்கொண்டு உறைந்து போயிருந்த அந்த அணிலின் பார்வையை சந்தித்தபோது என்றே நினைவின் அசைபோடல் பதிலளிக்கிறது. எத்தனை சோகமான நிகழ்வுகளை சந்திக்க நேர்கிறபோதும்கூட, பொதுவாக அழுகை வருவதில்லை. ஆனால் சினிமா பார்க்கிறபோதும், புத்தகங்கள் படிக்கும்போதும், ஒரு நாவலோ, திரைக்கதையோ எழுதும்போதும், அதிலுள்ள கதாபாத்திரங்கள் நெகிழும் தருணங்களில், என்னையறியாமல் கண்களில் தாரைதாரையாக பொங்கிக்கொண்டு வந்துவிடும்.
சினிமா பாரடைசோ என்றொரு இத்தாலிய படம் இருக்கிறது. இது ஆஸ்கார் விருது பெற்ற படம். இதில் வரும் டோட்டோ என்கிற சிறுவன் என்னைப்போலவே சினிமாவை உயிருக்கு மேலாக மதிப்பவன். சினிமா தொடர்ந்து பார்ப்பதற்காக அந்த கிராமத்தில் உள்ள திரையரங்கின் புரஜக்டர் ஆப்பரேட்டரோடு நட்பு கொள்வான். பிற்காலத்தில் அவன் மிகச்சிறந்த திரைப்பட இயக்குநராக உருவெடுக்கிறான். அதற்காக அவன் தந்த விலை காலம், காதல் என்று விலைமதிப்பற்றவை. கதையின் இறுதியில் அந்த திரையரங்கம் இடிக்கப்படுகிறது. அந்த திரையரங்கம் இடிக்கப்பட இருக்கிற விசயம் கேள்விப்பட்டு நீண்ட காலத்திற்கு பிறகு தன் கிராமத்திற்கு வருகிறான். அது ஒருவகையில் வேரை நோக்கிய பயணம். அந்த காட்சியை கண்ணுறுகிறபோது அவன் கண்கள் சிலிர்க்கின்றன. இனி ஒருபோதும் அவனால் அந்த திரையரங்கை பார்க்கமுடியாது. இப்படியொரு திரையரங்கு இருந்தது. அது எண்ணற்றவர்களின் கவலைகளை மறந்து சிரிக்க வைத்திருக்கிறது என்பதை இனி வருபவர்கள் அறியப்போவதில்லை அந்த திரையரங்கு இருந்ததற்கான சுவடு இன்றோடு முற்றாக கரைந்து போய் விடும். அவன் நினைவுகளில் மட்டுமே இனி அது உயிர்த்திருக்கும். சினிமா என்பது பொழுதுபோக்கு சாதனம் மட்டுமல்ல. அது மனித உணர்வுகளை மகோன்னதபடுத்தும் கலை.
Leave a comment
Upload