நம் முன்னோர்கள் எதைச் செய்தாலும் அதில் ஒரு அர்த்தம் இருக்கும். அவர்களின் அனுபவ அறிவானது நம் வாழ்க்கையை வளப்படுத்துவதற்காகவே பயன்படுத்தப்பட்டன. தொன்று தொட்டு நம் தமிழர் மரபில் வாழை மரங்களும், மாவிலைத் தோரணமும் இன்றும் நீங்காத இடத்தை பெற்றுள்ளது. அதனால்தான் நமது வீட்டில் நிகழும் திருமண நிகழ்வுகளிலும், அனைத்து சுப நிகழ்ச்சிகளிலும், திருவிழாக்களிலும் நுழைவு வாயிலில் மாவிலைத் தோரணமும், இருபுறமும், குலையுடன் கூடிய வாழை மரம் கட்டப்படுகிறது. குறிப்பாக வாயிலில் வாழைமரம் கட்டுவது ஒரு மங்கலகரமாக கருதப்படுகிறது.
இதில் நமது கலாச்சாரமும், தமிழர் பண்பாடும் அடங்கி உள்ளது. அதுமட்டுமல்லாமல் வாழை மரம் போலத் திருமண வாழ்வும் வாழையடி வாழையாகத் தழைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கட்டப்பட்டது. புராணங்களின் படி வாழை மரம் குரு பகவான் மற்றும் மஹா விஷ்ணுவின் அம்சமாகக் கருதப்படுகிறது.
வாழை மரம் கட்டப்பட்ட வீடு மற்றும் தெரு வழியாக நுழையும் போது நம்முடைய எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறையாக மாற்றக்கூடிய சக்தி வாழை மரத்திற்கு இருப்பதாக நம் முன்னோர்கள் நம்பினார்கள்.
மேலோட்டமாகப் பார்த்தால் அது நமக்கு மூடநம்பிக்கை போலத் தெரியும். ஆனால்… இதற்கு அறிவியல் ரீதியான காரணங்களும் உண்டு.
அறிவியல் ரீதியான காரணம்:
நம் முன்னோர்கள் வாழைமரம் கட்டும் பழக்கத்தை வெறும் சடங்காக மட்டும் கருதவில்லை. அதன் பின்னணியில் உள்ள அறிவியல் காரணங்களையும் நன்கு அறிந்திருந்தனர். சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மற்றும் மனநலம் ஆகிய அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டு இந்த பழக்கத்தை உருவாக்கியுள்ளனர். பொதுவாகவே, தாவரங்கள் காற்றில் இருக்கும் கார்பன்-டை-ஆக்ஸைடை எடுத்துக் கொண்டு, ஆக்சிஜனைப் பரவச் செய்கின்றன. ஒரு வீட்டில் சுபநிகழ்ச்சி என்றால் ஏராளமான விருந்தினர்களின் வருகை இருக்கும்
அவர்கள் ஒவ்வொருவரின் மூச்சுக் காற்றிலுள்ள கார்பன்டை ஆக்ஸைடு காற்றில் கலக்கும். அத்துடன் கூட்டம் அதிகப்படியாகச் சேரும் போது அவர்களின் உடல் உஷ்ணம், வியர்வை ஒன்றாகச் சேரும் போது ஒருவித மூச்சு அடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அப்போது கட்டியிருக்கும் மாவிலை தோரணங்களும், வாழை மரங்களும் ஒன்று சேர்ந்து காற்றில் பரவி இருக்கும் கிருமிகளை அழிப்பதோடு, உஷ்ணத்தையும் குறைக்கும்.
வாழை இலை, தண்டு ஆகியவற்றிலிருந்து எடுக்கப்படுகின்ற சாறு சிறந்த நச்சு முறிப்பார்களாகச் செயல்படுகிறது. வாழையிலையில் உள்ள குளோரோபில் எனும் வேதிப்பொருள் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகிறது. வாழை இலையில் உணவு உண்பது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவகுக்கிறது. வாழை மரத்தின் அனைத்து பாகங்களும் இயற்கையான கிருமி நாசினிகளாகச் செயல்படுகின்றன. பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருமிகளை அழிக்கும் தன்மையும் இவை பெற்றிருக்கின்றன. வாழைமரத்தின் கிருமி நாசினி தன்மை நோய்த் தொற்றுகளைத் தடுக்க உதவுகிறது.
இன்றைய நவீன வாழ்க்கையில், இத்தகைய பாரம்பரிய பழக்கங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அவற்றைத் தொடர்ந்து கடைப்பிடிப்பது நமது கடமை. இதை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்லி ஆரோக்கியமான, சுகாதாரமான சுற்றுப்புறத்தை உருவாக்குவோம்!!
Leave a comment
Upload