தொடர்கள்
அழகு
இனி இஸ்திரியும் ஆட்டோமேடிக் !! மாலா ஶ்ரீ

2025911101242153.jpg

நாம் அனைவரும் பழைய உடைகளை புதிய ஆடைகளாக, உடைகள் சுருக்கமின்றி மிடுக்காக இருக்க இஸ்திரி செய்வது இயல்பாக நடந்து வரும் செயல். பொதுவாக இஸ்திரி போடுவதற்கு, அக்காலத்தில் மரக்கட்டைகளின் கரியை தீயிட்டு, இஸ்திரி பெட்டிக்குள் அடைத்து, அதில் வெளிப்படுகிற வெப்பத்தை வைத்து உடைகள் இஸ்திரி செய்யப்பட்டன. பின்னர் வீட்டிலேயே இஸ்திரி செய்யும் வகையில் எலக்டரிக் அயர்ன்பாக்ஸ் அறிமுகமாகி, மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

தற்போது அயர்னிங் தொழிலையும் நவீன தொழில்நுட்பம் விட்டு வைக்காமல், அதில் முன்னேற்றத்துக்கும் வித்திட்டிருக்கிறது. இந்த நவீன இயந்திரம் தாமாக உடைகளை நீராவி வெப்பத்திலும் வெப்ப காற்றிலும் அயர்ன் செய்து, அயர்ன் செய்யப்பட்ட உடைகளை தாமாக மடித்து தருகிற வகையில், கோவையில் ‘ஆட்டோமேட்டிக் அயர்னிங் அண்ட் போல்டிங் மெஷின்’ தயாரிக்கப்பட்டு உள்ளது. இதற்கு ‘டாக்டர் பேப்ரிக் ஆட்டோமேடிக் அயர்னிங் அண்ட் போல்டிங் மெஷின்’ என்று பெயர் சூட்டியுள்ளனர்.

இந்த நவீன இஸ்திரி இயந்திரத்தில், அனைத்து விதமான ஆடைகளையும் இஸ்திரி செய்யும் வகையில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புரோகிராமிங் செய்யப்பட்டுள்ளன. அவை ஆடைகளின் தன்மைக்கேற்ப வெப்ப அளவை மாற்றி, வெப்பக்காற்று மற்றும் நீராவி வெப்பம் ஆகிய 2 முறைகளில் அயர்னிங் செய்து தருகின்றன. இந்த மெஷினில் ஒரு மணி நேரத்தில் 60 உடைகள் வரை அயர்னிங் செய்து கொள்ளும் வகையில் டெக்னாலஜியுடன் மெஷினை தயாரித்துள்ளனர். இந்த நவீன இயந்திரத்தில், நீராவிக்காக தண்ணீரை ஊற்றும் புனலும் அமைக்கப்பட்டு உள்ளன. இவை மின்சாரத்தால் இயக்கப்படுவதால், கரி பயன்படுத்துவதால் ஏற்படும் புகையைத் தடுக்கின்றனர்.

முதன்முறையாக இந்த ஆட்டோமேடிக் அயர்னிங் அண்ட் போல்டிங் அமைப்புடன் கூடிய மெஷினை ஒன்றரை வருட உழைப்பின் மூலம் தயாரித்திருக்கிறோம் என்று தயாரிப்பாளர் ஆனந்த் தெரிவித்தார். மேலும், இதன் காப்புரிமைக்காக நிறுவனத்தின் மூலம் விண்ணப்பித்திருப்பதாக கூறுகிறார். இதுகுறித்து கோவை, ராமநாதபுரத்தை சேர்ந்த தயாரிப்பாளர் ஆனந்த் கூறுகையில், ‘‘இந்த ஆட்டோமேடிக் அயர்னிங் அண்ட் போல்டிங் மெஷின் மூலம் அனைத்து விதமான உடைகளையும் இஸ்திரி செய்ய முடியும். இது, லாண்டரி துறையில் ஒரு புரட்சி எனக் கூறலாம்.

இந்த மெஷின் மூலம் நாளொன்றுக்கு 500 முதல் 600 துணிகள் வரை அயர்ன் செய்யலாம். இதில் ஒரு நிமிடத்துக்கு ஒரு துணி அயர்ன் என்ற முறையில் மெஷின் நேரத்தை செட் செய்யும் வசதி உள்ளது. இந்த மெஷின் மூலம் அயர்னிங் தொழிலிலும் ஈடுபட முடியும். இதுவரை இந்தியா முழுவதிலும் 100க்கும் மேற்பட்ட மெஷின்களை தயாரித்து கொடுத்திருக்கிறோம். இதற்கு ஒரு வருட வாரண்டியும் கொடுக்கப்பட்டு உள்ளது. இதன் விலை ரூ.3.90 லட்சம் ஆகும். இதில் அயர்னிங், போல்டிங் மெஷின் உள்ளிட்டவை சேர்ந்து வரும். குறிப்பாக, பள்ளி மாணவர்களுக்கு ‘அரோமா அயர்னிங்’ செய்து கொடுக்கப்படுகிறது. இந்த மெஷினில் 4 வகையான வாசனை கொண்ட ஸ்பிரே செய்து, குழந்தைகளின் பள்ளி சீருடைகள் வழங்கப்படுகிறது.

பொதுவாக துணிகளை துவைக்கவோ அல்லது அயர்ன் செய்யவோ கொடுக்க வேண்டுமெனில் சலவையகம் சென்று கொடுத்து, பின்னர் அவற்றை வாங்கிவர வேண்டும். எனினும், இந்த தொழில்நுட்ப வளர்ச்சியால் கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள ஆஃப் மூலம் துணிகளை பொதுமக்களிடம் இருந்து ஆர்டர் வாங்கும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது!’’ என்று தயாரிப்பாளர் ஆனந்த் மகிழ்ச்சி தெரிவித்தார்.