தொடர்கள்
கதை
மாறும் தலைமுறைகள் . சுந்தர மணிவண்ணன்.

202591108511254.jpeg

இரண்டு நாட்களாக எனக்கு இருப்புக் கொள்ளலை.ஒரு வித பயம் உள் மனசை ஆட்டி வைத்தது.பயத்தோடு ஒரு பதட்டமும் சேர,

எப்படி அவளிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதென ஒரு குழப்பமும் என் மனசை பிசைந் தெடுத்தது.

இதே நிலையில் தான் என் தந்தையும் அன்று தவித்திருந்தார்.

அதை அறியாமல், அவரை எப்படி யெல்லாம், அலைக் கழித்தேன்..

எத்தனை முறை, என்னைக் கெஞ்சிக் கேட்டிருப்பார்.

“நல்ல வரன் நிறைய வருது. உன் மனசுக்கு எது பிடிச்சிருக்கோ அதையே பேசி சட்டுபுட்டுன்னு முடிச்சிடலாம்னு பார்க்கிறேன்”.

“நீ ஏண்டா எதுக்குமே ஒத்து வரமாட்டேங்கிற”.

என் மவுனம் கலைந்த பாடில்லை. என் அப்பாவும் கொஞ்சம் நொந்து போனார்.

“வெளிப்படையாகவே கேட்கிறேன் .நீ யாரையாவது காதலிக்கிறையா?” மனம் விட்டு என் அப்பா கேட்டதும் ,

இனியும் மறைப்பது தப்பு என்று எனக்குத் தோன்றிச்சு.

“அப்படி ஏதாவது இருந்தால் காலம் வரும்போது சொல்கிறேன் பா” என்றுசொல்லி அச் சமயம் தப்பித்துக் கொண்டேன்.

அவள் வீட்டில், அவளுக்கு இன்னும் சம்மதம் கிடைக்கவில்லை. கிடைத்ததும், உண்மையை உடைத்து விடலாம் என்ற முடிவில்,

இத்தனை காலமும் கடத்தி வந்தேன்.

இதுவே தக்க தருணம் என முடிவெடுத்து அப்பாவை நெருங்கினேன்.

என்னடா ! என்ன முடிவெடுத்த? அப்பா ஆவலோடு என் பதிலுக்கு காத்திருந்தார்.

தயங்கித் தயங்கிச் சொன்னேன். “கல்யாணம் பண்ணிக்க முடிவு செஞ்சுட்டேன் பா”.

“நான் தேடிய வரனா. இல்ல நீயே தேடிகிட்டேயா” அப்பாவின் சந்தேகம் அப்படியே இருந்தது.

“என் ஆஃபிஸில் என்னோடு ஒர்க் பண்ற பெண் தான் பா”.என் பதில் கேட்டு அப்பாவின் முகம் சுருங்கியது.

“யாருடா அந்த பெண்” அப்பாவின் குரலில் அழுத்தமும், வருத்தமும் தெரிந்தது.

இனியும் இந்த விஷயத்தை இழுத்தடிக்க விரும்பவில்லை. நான்

நேரடியாகச் சொல்லிவிடத் துணிந்தேன்.

“அப்பா… அவள் நம்ப ஜாதி இல்ல, இருந்தாலும் எனக்கு எல்லா விதத்திலும் ஏற்றவளா இருக்கா. எனக்கு அவளை ரொம்பவே பிடிச்சிருக்கு”.

“ஓஹோ ! இண்டர்கேஸ்ட் மேரேஜா? சபாஷ்”. அப்பா அந்த நாள் மனுஷர். அவர் தொனியில் ஏமாற்றம் தெரிந்தது..

அப்பாவும் நிலைமை கை மீறி விட்டதை உணர்ந்து,

…”.உன் சந்தோஷத்துல நான் குறுக்க நிக்கல.எல்லாம் நல்லபடியா நடந்தா சரி….அட்சதை தூவி ஆசீர்வாதம் செய்வது போல் பச்சைக் கொடி காட்டினார்,

கலப்புத் திருமணம். எங்கள் காதல் கதை எல்லாம் என் மகளுக்குத் தெரியும்,

நாங்கள் ஜாதி விட்டு ஜாதிமாறி கல்யாணம் செய்து கொண்டோம்.

இவள் அதையும் தாண்டி…..எனக்குள் ஒரே குழப்பம் .கேட்டுத் தெரிந்து கொள்ளும் அந்த நேரத்துக்குக் காத்திருந்தேன்.

என் கல்யாண விஷயத்தில் முடிவு தெரிந்து கொள்ள அன்று என் அப்பா எத்தனை வேதனைப் பட்டாரோ, அத்தனையும் உணரும் அனுபவம் எனக்கு வந்துவிட்டது.

“அம்மாடி….. உனக்கு யாரை பிடிச்சிருந்ததாலும் என் கிட்ட பயப்படாம சொல்லுமா” எங்கப்பா போல் இல்லை. என் தாராள மனசை அவள் அறியும் படிச் சொன்னேன்.

சற்று நேரம் மவுனமாகி, என் அருகில் அமர்ந்து சொல்லத் தொடங்கினாள்.

“அப்பா அவனும் நானும் ஸ்கூல் டேய்ஸ் லேர்ந்து காதலிக்கிறோம்.இல்லை..இல்லை நான் தான் அவனை தீவிரமா காதலிக்கிறேன்”.

“அவன் குலம் கோத்திரம் ஏதாவது தெரியுமா” என் கேள்வி அவளுக்கு புதிதாய் இருந்தது.

“அவனுக்கு ஜாதி,மதம் எதுவுமே தெரியாதாம் பா”

“என்னம்மா சொல்ற. அவனுக்கு பிடிக்காதா…தெரியாதா?”

“அவனுக்குத் தெரியாதுப் பா”

“எதுவுமே தெரியாதா?”.. மேலும் குழம்பினேன்.

“ஆமாம் பா ! அவன் ஒரு ஆர்ஃபன். கண்டெடுக்கப்பட்ட குழந்தை.அவன் ஒரு அனாதை,

அவனுக்கு ஜாதி ஏது. மதம் ஏது. அந்த எதுவுமே வேணாம்னு நினைக்கிற எனக்கு அவன் தான் பொருத்தமானவன்”.

சொல்லி முடித்ததும் வாரிஅணைத்தேன் ,என்னைவிட எட்டு மடங்கு தைரியம் உள்ள என் மகளை.