தொடர்கள்
கவர் ஸ்டோரி
குழந்தைகளுக்கு எமனான இருமல் மருந்து -தில்லைக்கரசிசம்பத்

2025911100344340.jpeg

மத்தியபிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் இருமல் மருந்து குடித்து அடுத்தடுத்து 20 குழந்தைகள் இறந்தது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

தமிழகத்தையும் சேர்த்து சில மாநிலங்கள் “கோல்ட்ரிஃப்”(Coldrif Cough Syrup ) என்ற இந்த மருந்தை தடை செய்து வரும் நிலையில் இம்மருந்தை ஏற்கனவே குடித்து வந்த குழந்தைகள் மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறார்கள்.

இருமல் மருந்தை சோதித்ததில் 49% டையேத்திலின் க்ளைக்கால் (DEG) இருந்திருக்கிறது.

DEG என்பது தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் இரசாயன கரைசலாகும். மிகவும் விஷத்தன்மை வாய்ந்த இதனை மனிதர்கள் உட்கொண்டால் மரணம் வரை கொண்டுப்போகும்.

DEGஐ சாப்பிடும்போது அதனை கல்லீரல் கடும் விஷமாக மாற்றி, சிறுநீரகத்தை செயலிழக்க வைத்து, இரத்தத்தை அமிலம் நிறைந்த நிலையில் மாற்றி, நரம்பு மண்டலத்தை மற்றும் இதய செயல்பாட்டையும் பாதிக்கிறது.

சிறிய குழந்தைகளுக்கு சில தேக்கரண்டிகள் மட்டுமே கொடுக்கப்பட்டாலும் அது மரணத்திற்கு வழிவகுக்கும்.

DEG வாசனையற்ற மற்றும் நிறமற்றது. அதிக இனிப்பு சுவை கொண்டது.

இருமல் மருந்தில் உண்மையில் சேர்க்க வேண்டிய மருத்துவ தரமிக்க க்ளிசரினை (glycerin) சேர்க்காமல் அதற்கு பதில் பல மடங்கு விலை குறைந்த DEGஐ சேர்த்திருக்கிறார்கள்.

இந்த இருமல் மருந்து உற்பத்தி மற்றும் விற்பனை செய்தது Sresan Pharma என்ற சென்னையை சேர்ந்த நிறுவனம்.

இந்நிறுவனத்தின்இயக்குநர்கள் மற்றும் இதற்கு பொறுப்பானவர்கள் மீது காவல் துறை முதல் தகவலறிக்கையை பதிவு செய்துள்ளது.

அதிக குழந்தைகள் மரணம் நிகழ்ந்த மத்தியபிரதேசத்தில், 10 நாட்கள் கடந்தும் இருமல்மருந்து தான் இறப்புக்கு காரணம் என்பதனை அம்மாநில அரசு கண்டறிய முடியாமல் இருந்த நிலையில், தமிழக அரசு அதனை ஒரே நாளில் ஆய்வு செய்து இருமல் மருந்துதான் காரணம் என்ற செய்தியை வெளியிட்டது.

அதன் பிறகு தான் மத்தியபிரதேச அரசு இருமல் மருந்துக்கு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

இருமல் மருந்தால் குழந்தைகள் சாவது, இது முதன்முறை அல்ல.

2022ல் இந்திய இருமல்மருந்தை குடித்து காம்பியா நாட்டை சேர்ந்த 70 குழந்தைகள் மரணமடைந்தது நினைவிருக்கலாம்.

1998ல் டெல்லி குர்கானில் ( குருகிராம்)கலப்பட இருமல் மருந்து (17.5% DEG ) குடித்து 33 குழந்தைகள் உயிரிழந்தனர்.

இதே பிரச்சனையில் 2020ல் ஜம்மு காஷ்மீரின் ராம்நகர் மாவட்டத்தில் 17 குழந்தைகள் உயிரிழந்தனர்.

குழந்தைகளுக்கு கொடுக்கும் மருந்தில் கூட கலப்படம் செய்து பணம் சம்பாதிக்கும் அளவிற்கு மனசாட்சி இல்லாத மனிதர்கள் இங்கே இருக்கிறார்கள் என்பது வேதனைக்குரியது.

கலப்படம் செய்பவர்களுக்கு நீதிமன்றம் உச்சபட்ச தண்டனை அளிக்க வேண்டும்.

இந்த சோகமான சம்பவங்கள், இந்திய மருந்துகள் தரக்கட்டுப்பாடுகளில் புதிய ஆய்வுகளும், கடுமையான விதிகளும் தேவைப்படுவதாக காட்டுகிறது.

இனியாவது குழந்தைகள் உயிரிழப்பது தவிர்க்கப்படவேண்டும்.