கேதார கௌரி விரதம் என்பது என்ன? தீபாவளியை ஒட்டி அதை ஏன் கொண்டாடுகிறார்கள்? நரகாசுரவதத்திற்காக மட்டுமே தீபாவளி ஒரு நன்னாளாக கொண்டாடப்படுகிறதா?
பெரும்பான்மையூர் நரகாசுரனை கண்ணபிரான் சங்கரித்தார் அப்படி அந்த அரக்கனை அழித்த நாளையே தீபாவளியாக கொண்டாடுகிறோம் என்று நினைக்கிறார்கள். எத்தனையோ அரக்கர்கள் இவ்வாறு அழிக்கப்பட்டு இருக்கிறார்கள் அந்த நாட்களை எல்லாம் கொண்டாடுவது என்று முயன்றால் நம் ஆய்விலே போதாது ஆகையால் தீபாவளி நரகாசுரனை கொன்றதற்காக ஏற்பட்டது அன்று.
தீபம்- விளக்கு ஆவளி- வரிசை, தீபத்தை வரிசையாக வைத்து சிவபெருமானை வழிபடுவதற்கு உரிய நாள் தீபாவளி என உணர்க. தீபாவளியன்று பகல்-இரவு முழுவதும் பட்டினி இருந்து இரவில் தீபங்களை வரிசையாக வைத்து சிவ பூஜை செய்து பிரம்ம முகூர்த்தத்தில் எண்ணெய் தேய்த்து நீராடி, சிவபூஜை செய்து, விடியுமுன் புத்தாடை உடுத்தி சுத்த சைவ உணவு உண்டு கொண்டாடுவதே தீபாவளி விரதம் ஆகும்.
மாசிமாத அமாவாசைக்கு முன்தினம் மகா சிவராத்திரியும், ஐப்பசி மாத அமாவாசைக்கு முன்தினம் தீபாவளியும் வரும்.
சிவபெருமானை வழிபடும் விரதங்கள் 8 என கந்தபுராணத்தில் ஏழாவது காண்டமாகிய உபதேச காண்டம் புகழ்கின்றது. அவை கார்த்திகை சோமவார விரதம், உமா மகேஸ்வர விரதம், திருவாதிரை விரதம், மகா சிவராத்திரி விரதம், கல்யாண விரதம், பாசுபத விரதம், அஷ்டமி விரதம், கேதார கௌரி விரதம் ஆகியவை ஆகும்.
இந்த (தீபாவளி) விரதம் நோற்கும் முறையை பார்ப்போம். புரட்டாசி மாதம் பூர்வ பட்ச அஷ்டமியில் தொடங்குதல் வேண்டும். நிறைகுடம் வைத்து அதில் சிவபெருமானை ஆவாகனம் செய்து 21 இழைக்கொண்ட நூலை கையில் பிணைந்து அர்ச்சனை செய்து தூப தீப நிவேதனம் புரிந்து வழிபட வேண்டும். ஐப்பசி மாத அமாவாசைக்கு முந்திய நாள் சதுர்த்தசி என்று அதிகாலையில் எழுந்து நீராடி தூய்மையான ஆடை உடுத்தி நெல்லின் மீது நிறை குடம் வைத்து மாவிலையும் தர்ப்பையும் வைத்து அதில் சிவமூர்த்தியை நிறுவி சிவமாகவே பாவனை புரிந்து பக்தி பூர்வமாக அர்ச்சித்து பாராயணம் புரிந்து தூப தீப நிவேதனங்களை செய்து வழிபட வேண்டும். மறுநாள் அமாவாசை அன்று காப்பை அவிழ்த்துவிட்டு உணவருந்த வேண்டும். இந்த விரதம் கேதார விரதம் எனப்படும். இந்த விரதத்தை கௌதம முனிவர் கூற உமை அம்மையார் நோற்று இறைவனுடைய இடப்பாகத்தை பெற்று மகிழ்ந்தார் கௌரி நோற்ற காரணத்தால் இதுக்கு கேதார கௌரி விரதம் எனவும் பெயர் பெற்றது. 21 நாட்கள் அனுஷ்டிக்க முடியாதவர்கள் ஐப்பசி தேய்பிறை சதுர்த்தசி அன்று மட்டுமாவது மேற்கூறிய விரதத்தை முறைப்படி அனுஷ்டிக்க வேண்டும்.
-திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்
"தீபாவளி தத்துவ விளக்கம்"என்ற நூலில் இருந்து
தொடர்கள்
பொது
Leave a comment
Upload