மாலாவின் கணவர் இன்று காலை இறைவனடி சேர்ந்தார்! எங்கள் வீட்டிற்கு அடுத்த காம்பவுண்டில் இருக்கும் குடும்பம். நடுத்தர வர்க்கம். அந்த காலத்து அசல் இன்ஜினியர். ஒரு தசாப்தம் பின்னர் பிறந்து இருந்தால் இந்த ஐடி அலையில் அவரும் படகோட்டி இருப்பார். அவர் நேரம், நிஜ பொறியாளர் வேலையில் இருந்து கிட்டதட்ட ரிடையர்மண்ட் வரை வந்து விட்டார். சின்ன திட்டமிட்ட(?) குடும்பம். அவர் மனைவி மாலாவும் என் மனைவியும் சிநேகமாக இருப்பார்கள். ரொம்ப ஒட்டுதல் இல்லை, இருந்தும் ஒரு நல்ல புரிதல் உண்டு. சில லேடீஸ் ஸ்பெஷல் சமாச்சாரங்களை பகிர்ந்து கொள்வர். இருவருக்கும் பெண் பிள்ளைகள் என்பதால் ஒரு வேவ்லென்த் - சில பல புலம்பல்கள், கொலு, கச்சேரி என அவர்கள் சம்பாஷனைகள் அவர்களை நெருக்கமாக வைத்து இருந்தன. சில நேரம் WhatsApp புரளிகள், நாட்டு நடப்பு, GST, விலை வாசி, பருவத்தில் மொபைலால் வரும் அபாயங்கள் என்று அவர்களின் அலசலில் சில நீயா நானா எபிசோடுகள் தேற்றலாம்!
ஆனால் எனக்கு சாருடன் பெரிய பரிச்சயம் இல்லை. என்னிலும் 8-10 வயது மூத்தவர் என்று ஒரு மரியாதை. அவ்வப்போது பார்க்கும் போது ஹாய், ஹலோ! வண்டி சர்வீஸ் எங்க விடறீங்க? மைலேஜ் எப்படி? வேலை எப்படி இருக்கிறது (நான்)? வேலை எப்படி போகுது (அவர்)? இப்படி பட்டும் படாமல் கபடி கேள்விகளில் 12 வருடங்கள் அருகருகே காலம் தள்ளி விட்டோம். கடைசியாய் அவரிடம் உரையாடியது எங்கள் பொது குழாயை ரிப்பேர் செய்யும் நிமித்தம் நாங்கள் ஒரு பொது குழுவாக மேற்பார்வை பார்த்த போதுதான்! அன்றும் அப்படியே! சவுக்கியமா? என்ன இப்படி தோண்டி போட்டு நம்ம பைப்ப உடைச்சிட்டாங்க! தேர்தலுக்கு முன் ரோடு போடுவார்கள் இல்ல? இப்படி வழக்கம் போல சின்ன சடுகுடு விளையாடி விட்டு அவர் அவர் கூட்டுக்கு திரும்பி விட்டோம்!
நவராத்திரி சமயத்தில் அவர் உடல் நலம் குன்றி, இதய குழாயில் ஸ்டென்ட் வைக்கப்பட்டு மருத்துவமனையில் இருக்கிறார் என்று அறிந்தோம். நல்லாத்தானே இருந்தார். ஒல்லி உடல்வாகு தானே! எல்லா இடத்திற்கும் நடந்தே செல்வாரே என்று வழக்கமான சிறு ஆச்சரியங்களை வெளிப்படுத்தி எங்கள் அபார்ட்மெண்டில் பேசி கொண்டு இருந்தோம். ICU என்பதால் யாரும் சென்று பார்க்க அனுமதி இல்லை. தவிர உறவினர் பலர் வந்து போய்க்கொண்டு இருந்ததால் யாரும் முயன்று பார்க்கவில்லை.
பின்னர் திடீர் என்று சில பல காம்ப்ளிகேஷன்கள், சடசடவென நிலைமை முற்றி இன்று காலை மனிதன் போயே விட்டார்!
நல்ல மனிதர். அதிர்ந்து பேசாதவர். டீசன்ட் ஆன ஜென்டில்மேன். தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருந்தவர். இன்று இல்லை!
மனதை ஏதோ செய்கிறது! அவர் உடல் நலம் குன்றி சற்று சிரமப்படுகிறார் என்று அறிந்ததில் இருந்தே மனதின் ஓரத்தில் ஒரு சஞ்சலம். ஏன்? ஒரு பத்து ஆண்டுகளாக அருகருகே வசித்து வந்து இருக்கிறோம். இருவர் குடும்பங்களும் பல ஒற்றுமைகளை கொண்டு உள்ளன. இதெல்லாம் தாண்டி, இவர் நம் போன்ற நடுத்தர வர்க்க நாயகர்களின் ஒரு பிரதிநிதி என்று தோன்றுவதால்தான் இந்த மனக்கிலேசமோ?!
கரண்டு கம்பியில் ஒரு காகம் அடிபட்டு வீழ்ந்தால் காக்கைக்கூட்டமே சுற்றி அமர்ந்து கரையுமே, அது போல ஒரு வலி. அவரை இன்னும் சற்று அணுகி அறிந்து நட்பு பாராட்டாமல் விட்டுவிட்டோமே என்ற சிறு குற்ற உணர்வு. மறைந்தது கூட்டத்தில் ஒருவர் இல்லை, நம்மில் ஒருவர். என்னை ஒத்தவர். நம்மில் பலரை போன்றவர். நாம் அவராக இருந்திருக்கக்கூடும் என்ற உணர்வு மேலோங்க மனதில் ஒரு இனம் புரியாத சங்கடம்!
பாரதி சற்றே சீற்றத்துடன் சாடிய 'தேடிச் சோறு நிதம் தின்ற வேடிக்கை மனிதர்' இல்லை இவர். உண்மையில் எந்த மனிதனும் அப்படி இல்லை. மாலாவின் கணவர் வாடிக்கை மனிதர் இல்லை. அவர் கனவுகள் வைத்து இருந்திருப்பார். சிலவற்றை நனவாக்கியும் இருப்பார். நல்லதொரு இடத்திற்கு தம் குடும்ப நிலையை அடைய வைக்க அவரால் முடிந்த யத்தனங்கள் அனைத்தும் செய்து இருப்பார்! தன் மனைவி மகள் என்றும் நல்ல நிலையில் வாழ வேண்டும் என்று தினமும் உழன்று இருப்பார். அவர் அளவில் அவர் ஒரு நாயகன்! அவரின் கதையில் அவர்தான் கதாநாயகன். அந்த நாயகனின் வாழ்க்கை பாதி படத்தில் முடிந்ததா? அல்லது முழு கதையும் இவ்வளவு தானா? இனி என்ன? அந்த குடும்பம் இனி எப்படி இருக்கும்? நல்ல பின்னணி உள்ளதால் அதிக சிரமங்கள் இருக்காது என்றே தோன்றுகிறது. ஆனால் நாளை என்ன நடக்கும் என்று
யாருக்கு தெரியும்?
இதையெல்லாம் தாண்டி ஒன்று என் மனதை அரித்து கொண்டு இருக்கிறது. மாலாவின் கணவர்...சார்...அவர் பெயரை தெரிந்து கொள்ளாமலே விட்டுவிட்டோமே என்று! சரி, நகர வாழ்வின் விசித்திரங்கள் வரிசையில் இதுவும் கடந்து போகும் என்று அமைகிறேன்!
மாலாவின் கணவரின் ஆன்மா இறைவனின் நிழலில் அமைதி காண வேண்டியபடி, மதியம் ஆபீஸ் வேலையை தொடர கிளம்பிவிட்டேன்!
அவர் வீழவில்லை! நம்மில் வாழ்ந்து
கொண்டுதான் இருப்பார்!
Leave a comment
Upload