தொடர்கள்
தொடர்கள்
எழுதிக் கிழித்தவை - 41 சொற்கள் அகராதியிலா, அகத்திலா? - மூத்த பத்திரிகையாளர். ஆர். நடராஜன்

2025911073035559.jpeg

குடும்ப விவகாரம் கொலு மண்டபத்திற்கு வந்திருக்கும் விசித்திரத்தை சரித்திரம் இப்போதுதான் முதன் முதலாகச் சந்திக்கிறது என்று கருணாநிதி மனோகரா திரைப்படத்திற்கு வசனம் எழுதியபோது “அவருக்கு குடும்பம் இருந்தது. கொலுமண்டபம் இல்லை. கொலுமண்டபம் வந்ததும் குடும்பம் அதில் குடியேறிவிட்டது’என்று அவன் ஒரு கட்டுரையில் முகப்பு வாசகமாக எழுதியபோது, கருணாநிதி திடமாக இருந்தார், அரசியலில் மும்முரமாக இருந்தார்.

அவருக்கு அவன் நண்பரும்கூட. இருந்தாலும் மேற்சொன்ன வாசகங்களைப் படித்து நெளிந்தார். ‘இவரே இப்படி எழுதிவிட்டாரே’ என்று நெருக்கமான கட்சிக்காரரிடம் வருத்தத்துடன் சொல்லியிருக்கிறார். அவனது நண்பர்களில் ஒருவரான திமுக முன்னாள் மேயர் சா.கணேசன், ‘நாங்க சொல்ல முடியாததை நீங்க சொல்லிட்டீங்க’ என்றார். கட்சியில் குடும்பத்தின் ஆதிக்கம் பற்றி அப்போதே வெளியே சொல்லிக்கொள்ள முடியாத முணுமுணுப்பு இருந்தது’ என்பதை அவன் தன் கட்டுரையின் எதிர்வினையின் மூலம் தெரிந்து கொண்டான். அந்தக் கட்டுரை ஸ்டாலின், அழகிரி சண்டை நடந்த காலத்தில் ‘அண்ணன் ஏதடா, தம்பி ஏதடா’ என்ற தலைப்பில் தினமலரில் ‘உரத்த சிந்தனை’ பகுதியில் எழுதப்பட்டது.

பல ஞாயிற்றுக்கிழமைகளில் அழுத்தமான அவனது கட்டுரைகள் ‘உரத்த சிந்தனை’ பகுதியில் வெளிவந்தன. அதற்கெல்லாம் வாசகர்கள் ஆதரவும் இருந்தது. மக்கள் மனதை பிரதிபலித்த திருப்தி அவனுக்கு கிடைத்தது. தவறு செய்த அரசியல்வாதிகளை அவன் தொடர்ந்து விமர்சித்துக் கொண்டிருந்தான்.

டெல்லி முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் தன் முதல் ஆட்சி காலத்தில் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொண்டபோது அதை துக்ளக்கில் விமர்சித்தான். கெஜ்ரிவால் பதவி விலக நேர்ந்தபோது ‘விலகிச் சென்ற விளக்குமாறு’ என்ற தலைப்பில் தினமலரில் கட்டுரை எழுதினான். அதேபோல் மம்தா பானர்ஜியின் அகங்காரம் பற்றி தினமலர் மற்றும் துக்ளக்கில் கடுமையாக விமர்சனம் செய்து வந்தான். அகந்தையில் மம்தா, ஜெயலலிதாவை

விஞ்சிவிட்டார். மம்தா பானர்ஜி ராஜ துரோகக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட வேண்டியவர் என்றே எழுதினான். இன்றும் அவனுக்கு அந்த எண்ணம் இருக்கிறது.

நன்கு அறிந்திருந்த போதிலும் ஜெயலலிதாவையும் அவன் விட்டுவைக்கவில்லை. அவரை விமர்சனம் செய்த கட்டுரைகளை அப்போது ‘நக்கீரன்’ மட்டுமே பிரசுரம் செய்தது. ஒரு தனி நபரோ, தனி நிறுவனமோ ஒரு கல்லூரி தொடங்க வேண்டும் என்றால், பல்கலைக்கழகத்துக்கு முந்தைய கல்வி ஆண்டில் அக்டோபர் மாதத்திலேயே மனு செய்திருக்க வேண்டும். பல்கலைக்கழக சிண்டிகேட் அந்த மனுவை பரிசீலனை செய்த பிறகு பிப்ரவரி, மார்ச் மாதத்தில் பல்லைகக்கழக பிரதிநிதி ஒருவர் அல்லது ஒரு குழு கல்லூரி தொடங்கப்பட இருக்கும் இடத்திற்குச் சென்று வசதிகளை ஆய்வு செய்யும்.

புதிய கல்லூரியை தொடங்க இருக்கும் நிர்வாகிகளை அந்தக்குழு சந்திக்கும். அதன் பிறகு மனுவை ஏற்பது பற்றி துணைவேந்தர் கூட்டும் சிண்டிகேட் முடிவு செய்யும். இந்த நடைமுறைகள் எதுவும் இல்லாமலேயே, ஜூன் மாதம் தொடங்கும் கல்வியாண்டில், காலத்தை தவறவிட்டு செப்டம்பர் மாதம் அரசியல் காரணங்களுக்காக சென்னையில் ஒரு அரசு கலைக்கல்லூரியைத் தொடங்கினார் ஜெயலலிதா. ‘முதல்வர் என்றால் சட்டவிதிகள் வளைந்து கொடுக்குமா? கல்வி ஆண்டின் நாட்கள் குறைக்கப்படலாமா?’ என்ற கேள்விகளை எழுப்பி அவன் நக்கீரனில் ஒரு கட்டுரை எழுதினான்.

சென்னையில் வெகு காலமாக இயங்கிவரும் தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவர்களாக கல்வியாளர்கள் இருந்திருக்கிறார்கள். ஜெயலலிதா தன் கட்சிக்காரப் பெண்மணி வளர்மதியை அந்தப் பதவியில் நியமித்தார். அவனுக்கு கோபமோ கோபம். தமிழ் பெரும் புலவர் சரவண ஆறுமுக முதலியார் என்கிற அறிஞர், கல்லூரி முதல்வர் பதவியில் இருந்தவர். அவர் இருந்த இடத்தில் ஒரு அரசியல்வாதியா? ‘யார் இடத்தில் யார்?’ என்ற கட்டுரையை எழுதினான். கையெழுத்துப் பிரதி கிடைத்தவுடனேயே, நக்கீரன் பத்திரிகையின் ஆசிரியர் ஆர்.ஆர்.கோபால் அவனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ‘ஆறுமுக முதலியாரின் புகைப்படம் கிடைக்குமா?’ என்று கேட்டார். முதலியார் அவனது பெருமதிப்பிற்குரிய ஆசான் (1962-&-1965). அவரது புகைப்படத்தை உடனடியாக அவன் அனுப்பி வைத்தான்.

சரியான நபர்களை சரியான பொறுப்புகளில் நியமிக்கவும் செய்தார்; பொருந்தாதவர்களையும் சில பதவிகளில் நியமித்தார் ஜெயலலிதா. அதுதான் அவர் நிர்வாக முரண். அதேபோல் பிரபல அரசியல்வாதி பழ.கருப்பையா அவனுக்கு 1970இல் இருந்தே அறிமுகமானவர். ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் அவர் அஇஅதிமுக எம்.எல்.ஏ. ஒரு பொங்கல் திருநாளன்று துக்ளக் ஆண்டு விழாவில் பேசிய பழ.கருப்பையா சொந்த கட்சியை பொது மேடையில் விமர்சனம் செய்தார். ‘கோயில் உண்டியலில் போடப்படும் பணம் எங்கெங்கோ போகிறது’ என்றும், வேறு சில முறைகேடுகள் பற்றியும் பேசினார். அவர் மைக்கை விட்டு விலகி வந்தபோது, ‘அண்ணே, உங்களை நாளை கட்டம் கட்டிடுவாங்க’ என்றான் அவன்.

மறுநாள் அது அப்படியே நடந்தது. அவர் அஇஅதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். அந்த நேரத்தில் பழ.கருப்பையாவை ஆதரித்தும், ஜெயலலிதாவை விமர்சித்தும் நக்கீரனில் இரண்டு பக்க கட்டுரை எழுதினான். சமீபத்தில் நடைபெற்ற துக்ளக் ஆண்டுவிழாவில் பழ.கருப்பையா பேசினார், அவர் பேசத் தொடங்கும் முன்பு துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி இப்படி குறிப்பிட்டார், ‘முன்பு பழ.கருப்பையா இப்படி பேசியபோது, ‘அவர் பதவி இழப்பார்’ என்று எங்கள் கட்டுரையாளர் அந்த மேடையிலேயே சொன்னார், அப்படித்தான் ஆயிற்று’.

பல காரணங்களினால் அவனுக்கு எம்.ஜி.ஆரைப் பிடிக்காது, அவர் மிக நல்ல மனிதர் என்று சமூகமே சொன்னாலும்கூட. நல்ல மனம் உண்டு, ஆனால் அவருக்கு நிர்வாக மூளை இல்லை என்பது அவனது அபிப்பிராயம். எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு அவருக்கு நெருக்கமாக இருந்த போலீஸ் அதிகாரி K..மோகன்தாஸ், ‘MGR, the Man and the Myth’ என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதினார். பதிப்பாளர் அதை தமிழில் மொழிபெயர்க்கும்படி அவனை கேட்டுக்கொண்டார். தனக்குப் பிடிக்காத ஒருவர் பற்றிய புத்தகம் என்றாலும், மொழிபெயர்ப்பு என்கிற முறையில் கச்சிதமாகப் பணி செய்ய வேண்டுமென்று அவன் செய்து முடித்தான். ஆங்கிலத்தில் 180 பக்கங்கள் என்றால், தமிழில் 224 பக்கங்கள் என்று கணக்குப் போட்டிருந்தார் பதிப்பாளர். ஆனால் அவன் உள்ளடக்கத்தில் ஒன்றைக்கூட விடாமல் அதே 180 பக்கங்களில் மொழிபெயர்த்துக் கொடுத்தான் அதுவும் ஒரு வார காலத்தில்.

ஆங்கில புத்தகம் வெளிவந்தபோது அதன் சில பகுதிகளை தமிழில் மொழிபெயர்த்து சில பத்திரிகைகள் வெளியிட்டன. அந்தச் சமயத்தில் அவனது நண்பரான முரசொலிமாறன் அவனை தொலைபேசியில் அழைத்து, ‘நீங்கள் மொழி பெயர்க்கிறீர்கள் என்று கேள்விப்பட்டேன். புத்தகத்தின் தலைப்பை எப்படி மொழி பெயர்த்திருக்கிறீர்கள்?’ என்று கேட்டார். ஏன்? என்று அவன் கேட்டதற்கு, ‘சில நண்பர்கள் தலைப்பை மொழிபெயர்த்தார்கள், ‘எம்.ஜி.ஆர் ஒரு கட்டுகதை, எம்.ஜி.ஆர் ஒரு புதிர், எம்.ஜி.ஆர் ஒரு மாயை’ என்று. எனக்கு எதுவும் திருப்தியில்லை. நீங்கள் எப்படி தலைப்பை மொழிபெயர்த்திருக்கிறீர்கள் என்று தெரிந்துகொள்ள விரும்புகிறேன் என்றார். அவன் சொன்னான், ‘எம்.ஜி.ஆர் நிஜமும் நிழலும்’ என்று. ‘சபாஷ்’ என்று பாராட்டிய முரசொலிமாறன் சொன்னார், ‘மற்றவர்கள் சொற்களை மொழிபெயர்த்தார்கள். நீங்கள் உணர்வை மொழி பெயர்த்திருக்கிறீர்கள். Hats off என்றார்.