அர்ச்சனாவிற்கு கடந்த மாதம்தான் திருமணமாகியது. வரும் தீபாவளி அவர்களுக்கு தலை தீபாவளி. திருச்சிக்கு அருகில் உள்ள குளித்தலைதான் சொந்த ஊர். காரில் சென்றாலே குறைந்தது 6 மணி நேரமாகி விடும். விடுமுறைக் கால போக்குவரத்து நெரிசலில் எப்போது போக முடியும்? என்று சொல்லவே முடியாது.
அவளுடைய கணவன் கோபி ஓர் ஐடி ஊழியர். கால நேரம் இல்லாமல், ’கால்’ கால்’ என்று வேளையிலே இருப்பவன். புது மனைவியுடன் பேசக் கூட அவனுக்கு நேரம் கிடைப்பதில்லை.
தனது திருமணத்தைக் கூட விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமை அன்று வைத்துக் கொண்டான் என்றால் பாருங்களேன்!
’ஏதாவது அரசு வேலையில் இருப்பவர் கணவராக இருந்தால் காலையில் 10 மணிக்கு போனோமா, மாலை 5 மணிக்கு வந்தோமா, என்று இருக்கும்.பணத்திற்கு ஆசைப்பட்டு இவனுக்கு கழுத்தை நீட்டி விட்டோமே?’ என்ற எண்ணம் கூட அர்ச்சனாவின் மனதில் எட்டிப் பார்ப்பதுண்டு. அவளுடைய அப்பா அம்மாவுக்கும் இதே எண்ணம்தான்.
விடிந்தால் தீபாவளி. கோபி அலுவலகத்திலிருந்து இதுவரை வரவில்லை. இப்பொழுது மணி 7. சென்னையிலிருந்து இப்போது கிளம்பினால் கூட குளித்தலைப் போக விடியற்காலையாகி விடும்.
இதோ கோபி வந்து விட்டான்…..வெளியில் இருந்தபடியே ஃபோனில் வந்தான்.’என்ன ரெடியாயிட்டியா? லக்கேஜே எடுத்துட்டு வெளியே வா.போகலாம்’என்றான்.
வீட்டை பூட்டிக் கொண்டு வெளியே வந்தாள்.டிக்கியில் லக்கேஜை வைத்து விட்டு காரின் முன் சீட்டில் உட்கார்ந்தாள் அர்ச்சனா.
காரின் ஆடியோவில் காயத்ரி வீணை வாசித்துக் கொண்டிருந்தாள். ’காயத்ரி வீணையை காரில் இசைத்தால் அவன் டென்ஷனாக இருக்கிறான்’ என்று பொருள்.
தாம்பரம் வரை ஓரளவு வேகமாக போன கார் அதற்குப் பிறகு முப்பதை தாண்டவில்லை. அவ்வளவு போக்குவரத்து நெரிசல். இதனால்தான்,’வந்தாரை வாழவைக்கும் சென்னை என்கிறார்கள் போலிருக்கு’மனதில் நினைத்துக் கொண்டாள் அர்ச்சனா.
‘எல்லோரும் விடுமுறைக் காலத்தில் ஒரே நேரத்தில் புறப்பட்டு, ஒரே நேரத்தில் திரும்பினால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாதா என்ன?’அர்ச்சனா கேட்காத கேள்விக்கு கோபியே பதில் சொன்னான்.
’எல்லோரும் நேரத்திற்கு ஊருக்குப் போய் மகிழ்ச்சியாக பண்டிகைகளை கொண்டாட முடியுமா? போன வேகத்திலேயெ சென்னைக்கு திரும்பி வேலைக்குப் போக வேண்டும்.என்னடா வாழ்க்கை இது? ‘உள்ளுக்குள் சலித்துக் கொண்டான் கோபி.
நகரங்களில் வேலை பார்க்கும் அனைத்து இளைஞர்களின் நிலையும் இதுதான்.எந்த பெற்றோரும் அவ்வளவு எளிதாக கிராமத்தை விட்டு நகரத்துக்கு வர விரும்புவதில்லை.இப்படித்தான் கோபி, .அர்ச்சனாவின் பெற்றோர்களும்.
சென்னையில் மழை பெய்தால் தொலைக்காட்சியை பார்க்கத் தவற மாட்டார்கள்.தன் குழந்தைகளுக்கு நீச்சல் தெரியும் என்பதில் அவர்களுக்கு பெருமிதம் அதிகமாகவே இருந்தது.
மாநில நெடுஞ்சாலையில் எட்டு இடங்களில் டோல்கேட் ஸ்பீட் பிரேக்கர்கள் பணத்தை கறப்பதுடன் பயண காலத்தையும் வெகுவாக கரைக்கின்றன.
’பேசாமல் சென்னையிலேயே பெண் எடுத்து இருக்கலாம்’ மனதில் எண்ணினான் கோபி. இப்படித்தான் அர்ச்சனாவும்,’உள்ளூரில் விவசாயிக்கு மனைவியாக இருந்தால் நிம்மதியாக இருந்திருக்கும்’என்று நினைத்தாள்.
கார் ஊர்ந்து கொண்டே திருச்சிக்கு போன போது மணி 3 ஆகிவிட்டது.பின்னர் குளித்தலை செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசல் அவ்வளவு இல்லை.கடைசியில் அர்ச்சனாவின் வீட்டின் முன்னே கார் காலை 6 மணிக்குச் சென்று நின்றது.
’எப்பொழுது தூங்குவது? எப்பொழுது தீபாவளியை கொண்டாடுவது? இந்த சடங்கையெல்லாம் யார்தான் கொண்டு வந்தார்களோ?’மனதில் எண்ணிக் கொண்டே மாமனார் வீட்டிற்குள் நுழைந்தான் கோபி மனைவி அர்ச்சனாவுடன்.
உள்ளே சென்ற கோபியும் அர்ச்சனாவும் அடுத்த சில நிமிடங்களில் தலைக்கு குளித்தார்கள். பெரியவர்கள் அன்போடு கொடுத்த இனிப்பினை சாப்பிட்டார்கள். புது உடைகளை அணிந்து கொண்டார்கள்.
தூக்கக் கலக்கத்திலேயே இருவரும் இயந்திரத்தனமாக தீபாவளியைக் கொண்டாடினார்கள். பிறகு கோபி படுக்கை அறைக்கு சென்று ஏசியை போட்டுத் தூங்கத் தொடங்கினான். அம்மாவுடன் கொஞ்ச நேரம் பேசிவிட்டு அர்ச்சனாவும் தூங்கத் தொடங்கினாள்.
3 மணி அளவில் தூங்கி எழுந்தார்கள்.மதிய உணவை சாப்பிட்டவுடன்,’மாமா நான் புறப்படுகிறேன். எனக்கு வேலை இருக்கிறது. இங்கு பகல் என்றால் அமெரிக்காவில் இரவு. அமெரிக்காவில் இரவு என்றால் இங்கு பகல். நான் என்ன செய்யட்டும்? வேறு ஒரு நாள் வந்து பொறுமையாக இரண்டு நாள் இங்கு இருக்கின்றேன்.
‘நான் என்னுடைய கடமையை சரியாக செய்யவில்லை என்ற குற்ற உணர்வு எனக்கும் இருக்கிறது. ’என்று சொல்லி வைத்தான் கோபி
மாலை 6 மணிக்கு கார் சென்னையை நோக்கிப் புறப்பட்டது.
காரை ஓட்டும் போதே காலில் கனெக்ட் ஆகிய கோபி தன்னுடைய ’ஒர்க் ஃபிரம் கார்’ஐ துவக்கி விட்டான்.
மறுநாள் காலை 8 மணிக்கு சென்னைக்கு வந்த கோபி அவனுடைய அறைக்குச் சென்று தனது லேப் டாப்பை ஆன் செய்து தன் வேலையைத் தொடர்ந்தான்.
பக்கத்து வீட்டு மாமி அர்ச்சனாவை நெருங்கினாள்.அவளிடம் ’தீபாவளி ஆச்சா?;’என்று கேட்டாள். அதற்கு அர்ச்சனா சூப்பரா போச்சு’என்று சிரித்துக் கொண்டே சொன்னாள்,உள்ளே இருந்த கோபியின் காதில் விழும்படி.
Leave a comment
Upload