நூற்றியெட்டு வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் எனச் சிறப்பு பெயர் பெற்றது ஸ்ரீரங்கம். இத்திருத்தலம் ஆழ்வார்கள் பதின்மரால் மங்களாசாசனம் செய்யப்பெற்று வைணவத் திருத்தலங்களின் தலைமைபீடமாக விளங்கி வருகிறது. இக்கோயில் மூலஸ்தானத்தில் ஸ்ரீரங்கநாதர் ஆதிசேஷன் மீது சயன திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார்.
இங்கு வருடத்தில் 322 நாட்கள் திருவிழா நடைபெறும். மேலும் ஸ்ரீரங்கநாதப் பெருமாள், பெரியாழ்வாரின் மாப்பிள்ளை என்றும் புராணம் கூறுகிறது. இங்கு ஒவ்வொரு வருடமும் தீபாவளி பண்டிகை சிறப்பான முறையில் கொண்டாப்படுகிறது.
தீபாவளி என்றால் மாமனார் மாப்பிள்ளைக்கு சீர் செய்வது வழக்கம். அந்த வழக்கப்படி தன் மகள் ஆண்டாளை ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு மணமுடித்து தந்த பெரியாழ்வார் தன் மாப்பிள்ளைக்கு தீபாவளி சீர் செய்யும் வைபவம் இக்கோயிலில் தீபாவளி அன்று ஜாலி அலங்காரம் (சாளி உற்சவம்) நடைபெறும்.
இவ்வைபவம் தீபாவளி அன்று மட்டுமே நடைபெறும். தீபாவளிக்கு முந்தைய தினம் மாலை வேளையில் இக்கோயில் நிர்வாகத்தினருக்கும், பணிபுரியும் ஊழியர்களுக்கும் மற்றும் பக்தர்களுக்கும் எண்ணெய் மற்றும் சீயக்காய் தூள் வழங்குவார்கள். அதனை மறுநாள் காலையில் தீபாவளியன்று நல்லெண்ணெய்யை தலையிலும், உடலிலும் தேய்த்து, சீயக்காய் போட்டு குளித்து ரங்கநாதரை வழிபட்டால் உடல் மற்றும் மன நோய்கள் தீர்ந்து போகும்.
தீபாவளியில் ஸ்ரீரங்கநாதருக்கு ஜாலி அலங்காரம்:
ஒவ்வொரு வருடமும் ஸ்ரீரங்கத்தில், ரங்கநாதர் தீபாவளிப் பண்டிகையைக் கோலாகலமாகக் கொண்டாடி வருகிறார்.
தீபாவளிக்கு முந்தைய நாள் மாலை, மேள தாளங்கள் முழங்க மூலவரான பெரிய பெருமாளுக்கு எண்ணெய் அலங்காரம் செய்யப்படும். இரவு உற்சவரான நம்பெருமாளுக்கும் எண்ணெய் காப்பு அலங்காரமும் செய்யப்படும். அதன்பின்னர் ரங்கநாயகி தாயார், ஆழ்வார்கள், ஆச்சாரியர்கள் சந்நிதிகளுக்கு எண்ணெய், சீகைக்காய், மஞ்சள் உள்ளிட்டவை அர்ச்சகர் மூலம் அனுப்பி வைக்கப்படும். தீபாவளியன்று அதிகாலை தாயார் மற்றும் ஆழ்வார், ஆச்சாரியர் சந்நிதிகளில் எண்ணெய் அலங்காரம் செய்யப்பட்டு திருமஞ்சனம் நடைபெறும். பின்பு மூலவர் மற்றும் உற்சவர்களுக்குப் புத்தாடை, மலர் மாலை அணிவித்து அலங்காரம் செய்வார்கள். அலங்காரம் முடிந்ததும் ஆழ்வார்கள், ஆச்சாரியர்களின் உற்சவமூர்த்திகள் அனைவரும் புறப்பட்டு, பெரிய சந்நிதிக்குக் கிழக்கில் உள்ள கிளிமண்டபத்துக்கு வந்து பெருமாள் வருகைக்காகக் காத்திருப்பார்கள். அப்போது பெருமாளின் மாமனார்- ஸ்ரீஆண்டாளின் வளர்ப்புத் தந்தையான பெரியாழ்வாரும் மாப்பிள்ளை ஸ்ரீரங்கநாதருக்காக தீபாவளி சீர் தருவதற்காகக் காத்திருப்பார்.
பெரிய சந்நிதியில் அருள்புரியும் உற்சவர் நம்பெருமாள் காலை மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு, சந்தனு மண்டபத்திற்கு எழுந்தருளி அவருக்கு திருமஞ்சனம் நடைபெற்றதும், சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்புரிவார். அதற்குப் பின், அவர் ஆஸ்தான மண்டபத்துக்கு வருவார். அங்கு பெரியாழ்வார் தன் மாப்பிள்ளைக்கு தீபாவளி சீர் சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். பெரியாழ்வாரின் சார்பில் அரையர்கள் நம்பெருமாளின் திருவடிகளை சுற்றி ஆயிரம் ஒரு ரூபாய் நாணயங்களை இரண்டு புது கைலிகளில் மூட்டையாகக் கட்டி பெருமாள் திருவடிகளில் மேளதாளங்கள் முழங்க, நாதஸ்வர இசை ஒலிக்க, வேத பாராயணத்துடன் சமர்ப்பிப்பார்கள்.
நாணய மூட்டைகளுக்குச் சாளி என்று பெயர். இதை சாளி அலங்காரம் என்பர். 'சாளி அலங்காரம்' என்று அழைக்கப்பட்ட இந்த உற்சவம், நாளடைவில் 'ஜாலி அலங்காரம்' என்றாகிவிட்டது. ஜாலி அலங்காரம் என்பது தீபாவளி அன்று மட்டுமே நடைபெறும்.
தனது மாமனாரான பெரியாழ்வார் தனக்கு அளித்த இந்த தீபாவளிச் சீரை அனைவருக்கும் காட்டி, மாமனாரின் பெருமையைப் பறை சாற்றுவதற்காக அந்த நாணய மூட்டைகளோடு இரண்டாம் பிராகாரத்தில் நம்பெருமாள் வலம் வருவார். மாலையில் கிளி மண்டபத்துக்கு எழுந்தருளும் நம்பெருமாள் அங்கு காலை முதல் காத்திருக்கும் ஆழ்வார் ஆச்சாரியார்களை அழைத்து அவர்களுக்கு புத்தாடை, சந்தனம், வெற்றிலைபாக்கு, பூ, பழங்கள் உள்ளிட்டவற்றை தீபாவளி பரிசாக தந்து கௌரவிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறும்.
பெருமாளிடம் தீபாவளிப் பரிசு பெற்ற ஆழ்வார்கள் மற்றும் ஆச்சாரியர்கள், பெருமாளிடம் விடை பெற்றுக் கொண்டு தங்கள் சந்நிதிக்குத் திரும்புவார்கள். இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கநாயகித் தாயார் மற்றும் ஸ்ரீஆண்டாள் கலந்துகொள்ள மாட்டார்கள். பின்னர் இரவு நம்பெருமாள் மூலஸ்தானம் சென்றடைவார்.
ஶ்ரீரங்கம் நம்பெருமாளை தீபாவளி அன்று இந்த 'ஜாலி அலங்காரத்தில்' தரிசித்தால் ஆடை, ஆபரணங்கள் பெருகி வாழ்வில் செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை!!
Leave a comment
Upload