தொடர்கள்
கவிதை
இன்றைய தீபாவளி மாறிவிட்டது...!! - கோவை பாலா

2025916212950854.jpeg

இன்றைய தீபாவளி மாறிவிட்டது...!!

அந்த காலத்தின் தீபாவளி...
இந்த நேரத்தில் நினைவாகி,
மீண்டு வந்ததோ எண்ணங்கள்...!
மீண்டும் வருமோ தருணங்கள்...!

ஏங்க வைத்ததோ நம்மை...?

விடியும் பொழுது வருமுன்னே,
வீட்டில் தீபாவளி வந்ததென்று,
வீதிக்கே பறைசாற்றி விடும்
பாட்டியின் முதல் செயல் ஒன்று‌‌...!

வெண்ணீர் அடுப்பின் தீயினிலே
தண்ணீர் வைக்கும் முன்னரே,
ஊசிவெடிக் கட்டை ஒன்றை ,
வீசி வீட்டையே எழுப்பிடுவாள்...!

அப்பா பிள்ளைகள் எல்லோரும்
வாரிச் சுருட்டி எழுந்திடுவார்...!

சுற்றி யாவரும் அமர்ந்திருக்க,
நெற்றி திலகம் இட்டிடுவாள்...!

உள்ளங்கை எண்ணை எடுத்து,
பித்தம் நீங்கிட தலையில் வைத்து,
சத்தம் வந்திட தட்டித் தேய்த்து,
எண்ணெய் நீராடச் செய்வாள்..!

குங்குமும் மஞ்சளும் தொட்டு,
குடும்பத்தில் அனைவருக்கும்,
புத்தம்புது ஆடைகள் கொடுப்பாள்..!
குலதெய்வம் வணங்க வைப்பாள்...!

பண்டிகையின் பதார்த்தங்கள்
பத்து நாளாய் வீட்டில் செய்தோம்..!
பட்டாசு வெடிப்பதற்கு, பத்து மணி
விதிமுறைகள் இல்லாதிருந்தோம்..!

பெற்றோரை வணங்கி அன்று
பண்டிகைக் காசு பெற்றோம்..!
அண்ணன் தம்பி அக்காள் தங்கை
அன்பால் மகிழ்ந்து இருந்தோம்...!

உற்றார் உறவினர்கள் அமர்ந்து
ஒருசேர உண்டு மகிழ்ந்தோம்...!
பதார்த்தங்கள் பரிவர்த்தனையில்
பக்கத்து வீட்டோடு பகிர்ந்தோம்...!

இத்தனையும் இருந்தது அன்று...!
எத்தனை அதில் இல்லை இன்று?

விடியும்முன் எழும் தீபாவளி இல்லை...!
விரைந்து எழச்சொல்ல யாரும் இல்லை...!
குடும்பம் சிறிதாகிப் போனது இன்று...!

குடும்பம் சில சிதறிப் போனது இன்று...!

நண்பர்கள் கூட்டம் நட்பாய் நிற்கிறது,
முதல்நாள் காட்சியில் முண்டியடித்து..!
இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்,
இல்லத்தில் முதல் முறையாகிறது...!

கடையில் வாங்கிய பதார்த்தங்கள்
கடவுள் மனையில் பிரசாதங்கள்...!
சுப வேளையில் பூஜை செய்ய
சுற்றத்தார் என்று யாருமில்லை..!

கொண்டாட்டமோ சுருங்கி விட்டது...!
குதூகலமோ அடைபட்டு விட்டது...!
பாரம்பரியம் ஏனோ மாறுகிறது...!
இன்றைய தீபாவளி மாறிவிட்டது...!

2025916195452841.jpeg