தொடர்கள்
Other
பட்டாசு வெடிக்கணுமா ?? விலங்கு ஆர்வலர்களின் பார்வையில் - ப.ஒப்பிலி

2025917174722712.jpeg

பொதுவாக மனிதர்களுக்கு தீபாவளி என்றாலே ஒரு தனி சந்தோஷம் தான். அலுவலகத்தில் போனஸ் தருவார்கள், குதூகலமாக புத்தாடைகள் வாங்கி, பட்டாசு வெடித்து மகிழ்ச்சியாக கொண்டாடும் நாம், இந்த வெடி சத்தத்தால் விலங்குகள், குறிப்பாக மனிதனின் உற்ற நண்பனான நாய்கள் படும் அவஸ்தை பற்றி எவருக்கும் அக்கறை இல்லை. மற்றொருபுறம் அந்த பயம், நடுக்கம் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

விலங்குகளை பொறுத்தவரை அவற்றின் ஒலி கேட்கும் திறன் மனிதர்களை விட பத்து மடங்கு அதிகம். நமக்கு ஒரு டெசிபல் என்பது விலங்குகளுக்கு 10 டெசிபலாக கேட்கும். இதனால் நாய்களுக்கு வெடி சத்தம் கேட்டாலே உடம்பு நடுங்கும்.

என் வீட்டில் உள்ள எனது செல்லம் கியாரா, இதற்கு ஒரு விதி விலக்கல்ல என்பதுதான் சோகம். தீபாவளிக்கு மூன்று நாட்களுக்கு முன்பிலிருந்தே பட்டாசு வெடிக்க ஆரம்பித்து விடுவார்கள். அதே போல பண்டிகை முடிந்து குறைந்த பட்சம் இரண்டு நாட்களுக்காவது வெடி சத்தம் கேட்டு கொண்டே தான் இருக்கும். இந்த காலங்களில் எனது செல்லத்திற்கு விலங்குகளுக்கென்றே மனதை சாந்தப்படுத்தும் பிரத்தியேகமான ஒரு மாத்திரை விற்கிறார்கள். அதை வாங்கி கொடுத்து அதன் பயத்தை குறைப்போம்.

சில வருடங்களுக்கு முன் எங்கோ படித்த ஒரு செய்தி என்னை மிகவும் பாதித்தது. இந்த பட்டாசு வெடிக்கும் கலாச்சாரம் நம் நாட்டில் தோன்றிய ஒன்றே அல்ல. வடகிழக்கு பருவ மழைக்கால மாதங்களான ஐப்பசி மற்றும் கார்த்திகை மாதங்களில் வெயிலின் தாக்கம் குறைந்து இரவு பொழுதுகளில் லேசான குளிர் தாக்கம் இருக்கும்.


இந்த பருவநிலை மாற்றத்தை மனதில் கொண்டே நம் முன்னோர்கள் தீப ஒளி ஏற்றி குளிரை சமாளித்தார்கள்.

முன்னூறு ஆண்டுகளுக்கு முன் சீனாவிலிருந்து பட்டாசு இந்தியாவிற்கு வணிகர்களால் கொண்டுவரப்பட்டு அதை தீபாவளி நன்னாளில் வெடிப்பது என்ற ஒரு கலாச்சாரம் உருவாக்கப்பட்டது. அதற்கு முன் வெடி வெடிப்பது என்பது நமது கலாச்சாரத்தில் இல்லை.

எது எப்படியோ இந்த வருடம் முதல் இந்த பூமி பந்து மனிதர்களுக்கு மட்டுமல்ல, விலங்குகளுக்கும் கூட இடம் தந்துள்ளது. அதை மதிக்கும் வகையில் பட்டாசு வெடிப்பதை நிறுத்த முடியாவிட்டாலும் குறைக்கலாமே ??

இது தான் விலங்கு ஆர்வலர்களின் பார்வை.