தொடர்கள்
தொடர்கள்
நயத்தகு நற்றிணை 41- மரியா சிவானந்தம்

2025916215556770.jpg

நீண்ட நாட்களுக்குப் பின் காதலன் திரும்பி வந்துள்ளான்.

அவனுக்காக காத்திருந்த காதலி கண்ணீருடன் அவனை எதிர் கொள்கிறாள்.

அவள் காதல் பெருக்கெடுக்க அவனை அணைத்துக் கொள்வாளோ அல்லது ஊடல் கொண்டு ஒதுங்கி நிற்பாளோ?

சற்றே அருகில் சென்று கவனிப்போம்.

அக்காதலியின் கண்ணீரில் காதல் மட்டும் அல்ல, துயரும் கலந்துள்ளது.

வெளியூர் சென்ற அவள் காதலன் பொருள் மட்டும் தேடவில்லை. மற்றும் ஒரு துணையையும் தேடிக் கொண்டான். இந்தக் காதலியை மறந்து ஒரு பரத்தையின் உறவை நாடிச் சென்றான்.

இந்த சங்கதி காதலிக்கு வந்து சேர்ந்தது. காதலன் வரும் முன் வந்த செய்தியால் அவள் கலங்கி போய் இருந்தாள்.

இப்போது காதலன் நேரில் வந்து நின்ற போது காதலி தடுமாறி விட்டாள்.

“கணிகையின் வீட்டுக்குச் சென்று அவளுடன் உறவு கொண்டு வந்துள்ள உன்னை என்னால் அணைத்துக் கொள்ளவும் முடியாது.. உன்னைச் சினத்துடன் ஒதுக்கி விடவும் முடியாது” என்று ஆற்றாமை பெருக சொல்கிறாள் அவள்.

அவள் சொல்கிறாள்:

“பாகன் தரும் ஆணைகளைத் தவிர்த்து, வேறு ஒருவரின் சொல்லுக்கும் கட்டுப்படாத யானைகள் பூட்டிய தேரினைக் கொணடவன் செழியன். அவன் கட்டிய பெருங்குளம் என்னும் ஏரியில் தேக்கி வைத்த நீர் மடை திறந்த போது, பாய்ந்து கால்வாயை அடையும்.

அக்கால்வாயில் உள்ள வரிகள் கொண்ட வாளை மீன் கால்வாய் நீருடன் சேர்ந்து வயலை அடையும். .அவ்வயலில் உழவுக்காக நிற்கும் எருதுகளின் காலில் அம்மீன்கள் சிக்கி, வெண் புள்ளிகளைப் பெறும்.

அவ்வயலில் சால் அடிக்கும் உழவரின் கையில் உள்ள கோலுக்கும் அஞ்சாமல் இம்மீன்கள் ‘திமிறிக்’ கொண்டு பக்கத்து வயலில் உள்ள நாற்றங்காலில் விழுந்து புரளும்.

இத்தகைய செழுமை வாய்ந்த சிறுகுடி என்னும் ஊரின் சிற்றரசன் வாணன். அச் சிறுகுடி போலவே பெருமை வாய்ந்த என்னை காதலில் வீழ்த்தி, என் வளையல்கள் நெகிழச் செய்தவனே, உன்னை நான் தழுவி அணைத்துக் கொள்ளவும் மாட்டேன், உன் மேல் சினம் கொண்டு ஒதுக்கி விடவும் மாட்டேன்” என்று தன் உள்ளத்து உணர்வை வெளிப்படுத்துகிறாள் அவள்.

வயலில் துள்ளும் மீன்களும், உழவுக்கு நிற்கும் எருதுகளும் என மருத நிலத்தின் வளமையைப் படம் பிடிக்கும் இந்த மருதத்திணைப்பாடலை இயற்றியவர் “நக்கீரர்.,

கணிகையிடம் சென்று வந்த காதலனை சேற்றில் உழலும் எருதுக்கு ஒப்பிடாமல் மறைபொருள் உவமையாக கூறும் நேர்த்தி அருமை .

புல்லேன், மகிழ்ந! புலத்தலும் இல்லேன்

கல்லா யானைக் கடுந் தேர்ச் செழியன்

படை மாண் பெருங்குள மடை நீர் விட்டென,

கால் அணைந்து எதிரிய கணைக் கோட்டு வாளை

அள்ளல்அம் கழனி உள்வாய் ஓடி,

பகடு சேறு உதைத்த புள்ளி வெண் புறத்து,

செஞ் சால் உழவர் கோல் புடை மதரி,

பைங் காற் செறுவின் அணைமுதல் பிறழும்

வாணன் சிறுகுடி அன்ன, என்

கோள் நேர் எல் வளை நெகிழ்த்த நும்மே!

நற்றிணை 340

மேலும் ஓர் அழகான பாடலுடன் மீண்டும் சந்திப்போம்

தொடரும்