தொடர்கள்
அனுபவம்
எனது இளமைத் தீபாவளி அனுபவங்கள் - ஆசிரியர் மதன்

2025916180146697.jpeg

தீபாவளி என்று சொன்னவுடன் என்னுடைய சிறுவயது நினைவுகள் மனதில் அலை அலையாய் எழுகிறது.

என்னுடைய இளமைப் பருவம், கிட்டத்தட்ட 20 வருடங்கள் திருவல்லிக்கேணியில் தான் கழிந்தன மிக மிக அருமையான குழந்தைப் பருவ பள்ளிப்பருவ நாட்கள் அவை.

பார்த்தசாரதி கோவில் மாடவீதி தான் எங்களுடைய விளையாட்டு மைதானம். வாடகை சைக்கிளில் சுற்றுவது எங்களுக்கு பிடித்த பெண்கள் எதிர்வரும் நேரத்தில் இரண்டு கைகளையும் விட்டு சைக்கிள் ஓட்டுவது போன்ற ஹீரோயிச வேலைகள் செய்ததெல்லாம் இன்றும் பசுமையாய் நினைவில் நிற்கிறது.

தீபாவளிக்கு முதல் நாளும் தீபாவளி அன்றும் கை நிறைய பெரிய பெரிய வெடிகளாக எடுத்துக்கொண்டு எங்களுக்கு பிடித்த பெண்கள் இருக்கும் தெருக்களுக்கு சென்று அவர்கள் பார்க்கும் வகையில் அந்த பட்டாசுகளை வெடிப்பதில் ஒரு அலாதி பெருமிதம்.

எங்களைப் பார்த்த உடனேயே அவர்கள் காதுகளை பொத்திக்கொண்டு வீட்டிற்குள் ஓடுவதும், கதவு இடுக்கு வழியாக பார்ப்பதும் அது தெரிந்து நாங்கள் அங்கேயே பெரிய பெரிய வெடிகளை கொளுத்துவதும் என மிக ரசனையாய் கழிந்த நாட்கள் அவை.

ஹிந்து உயர்நிலைப் பள்ளியில் தான் எனது பள்ளி பருவம் கழிந்தது.

அது மிகப் பசுமையான நினைவுகளை இன்றைக்கும் எனக்கு தந்து கொண்டிருக்கிறது. அப்போது புதிதாக கட்டப்பட்ட என் கே டி கலா மண்டபத்தில் வருடா வருடம் ஆண்டாள் நாட்டிய நாடகம் நடைபெறும். மிகுந்த பக்தி மனநிலையோடு அந்த நாடகங்களை பார்த்த நினைவுகள் இன்றும் என் மனதில் நிழலாடுகின்றன.

கோடை விடுமுறைக்கு எனது தாத்தா ஊரான தஞ்சாவூருக்கு செல்வது வழக்கம். அங்கே நிறைய வரைவதுண்டு.

மகிஷாசுரமர்த்தினி ஓவியத்தை கலர் சாக்பீஸ்கள் கொண்டு தரையில் வரைந்து அதன் கீழே "இதை மிதிக்காமல் போகவும்" என்று எழுதி வைத்ததை எனது பாட்டி நினைவு கூர்ந்து அடிக்கடி சொல்வதுண்டு.

ஓவியம் வரைவதை நான் எங்கும், யாரிடமும் கற்றுக்கொள்ளவில்லை. ஆர். கே. லக்ஷ்மன் மற்றும் டேவிட் லோ இருவரும் தான் என் ஆதர்ச ஓவியர்கள்.

2025916141750762.jpg

அப்போது பிரசிடென்சி கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தேன். விடுமுறைக்கு தஞ்சாவூர் சென்ற போது தஞ்சை பெரிய கோயிலை வாட்டர் கலரில் வரைந்து எனது நண்பர்களிடம் காண்பித்தேன்.

அப்போது நடைபெற்ற கல்லூரிகளுக்கு இடையேயான ஓவியப் போட்டிக்கு எனக்கு தெரியாமலேயே எனது நண்பர்கள் அதனை அனுப்பி இருந்தனர்.

அந்த ஓவியம் முதல் பரிசினை வென்ற போது எனக்கு மகிழ்ச்சி கலந்த ஆச்சரியம் ஏற்பட்டது. எனது ஓவியம் எல்லோராலும் கவனிக்கப்படுகிறது என்பதை நான் அறிந்து கொண்ட நாள் அது.

தீபாவளி என்று சொல்லும் போது அதனோடு இணைந்த தீபாவளி பட்சணங்கள் உடனே என் நினைவுக்கு வருகிறது.

குறிப்பாக கேசரி, தேங்காய் பர்பி, பாதுஷா மூன்றும் எனக்கு மிகவும் பிடித்தவை.

என் பாட்டியும் சரி, அம்மாவும் சரி இப்போது என் மனைவியும் சரி இந்த மூன்றையும் மறக்காமல் தனியே எடுத்து எனக்கென தருவார்கள்.

விகடகவி வாசகர்களுக்காக என்னுடைய இளமைப் பருவ தீபாவளி நினைவுகளை மீண்டும் ஒருமுறை அசை போட்டது மிக சந்தோஷமான தருணம்.

விகடகவி வாசகர்களுக்கு என்னுடைய மனம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

ரெட்டைவால் ரெங்குடுவின் குறும்புத்தனத்தோடு , இந்த தீபாவளியை மகிழ்வோடு கொண்டாட வாழ்த்துகிறேன்...

2025916180221822.jpeg