அவிழ்ந்து அவிழ்ந்து விழும் தன் டிரௌசரை ஒரு கையால் பிடித்துக் கொண்டு, குனிந்து எதையோ ஆர்வமாக எடுத்துக்கொண்டிருந்தான் அந்தச் சிறுவன். வெடிக்கப்படாத அந்த ஊசி வெடியை பார்த்ததும் உடைந்த பற்கள் தெரிய சிரித்துக் கொண்டான். மெதுவாக காலால் பட்டாசு குப்பையை தள்ளிவிட்டுக் கொண்டே நடந்தான். இன்னும் கொஞ்ச நேரத்தில் தெரு முழித்துக் கொண்டு விடும். இரவே வரலாமென்றால் 12 மணி வரை பட்டாசு சத்தம் அடங்கவே இல்லை. ஓசை அடங்கிய பின்னர், யாருக்கும் தெரியாமல் தன் வீட்டிலிருந்து மெதுவாக வடக்குத் தெருவிற்கு வந்தான். இரண்டே தெரு இருக்கும் ஒரு கிராமம் அது. வடக்குத் தெருவில் பட்டாசு எப்போதுமே அதிகம் வெடிப்பார்கள். சற்று பணக்காரர்கள் இருக்கும் இடம் அது. குழந்தைகளும் அதிகமாக இருக்கும் தெரு. இவன் இருக்கும் தெற்குத்தெருவில் தினக் கூலிகள் தான் அதிகம். இவனின் அம்மா அப்பாவும், தினம் கூலி வேலைக்குச் செல்பவர்கள் தாம். இவன் வயது குழந்தைகளும் அங்கே குறைவாகத்தான் இருந்தார்கள். (இவனுக்கு ஒரு ஏழு எட்டு வயதிருக்கலாம்)
காலால் அளைந்துகொண்டே, தெருவின் மறுமுனைக்குச் சென்றான். வெடிக்காத பட்டாசுகள் ஒரு இருவது இருபத்தைந்து தேறியிருக்கும். எல்லாவற்றையும் பத்திரமாக ஒரு நெகிழி பையில் சேகரித்துக்கொண்டான். மறுபடியும் காலால் துளாவியபடியே
தெருவின் ஆரம்பத்திற்க்கு வந்தான். கூட ஒரு நாலைந்து வெடிக்காத ஊசி பட்டாசு கிடைத்தது. சிரித்துக்கொண்டே, குதூகலமாக கால் மாற்றி நொண்டியடித்துக்கொண்டே தன் தெருவிற்குச் சென்றான். இந்த தெரு சற்று மெதுவாகத்தான் விழிக்கும். வேலைக்கு போகும் பரபரப்பு அன்று கிடையாது என்பதால். அரிசியும், பருப்பும், கூலியுடன் சேர்ந்து கிடைத்ததால் அன்று சாப்பாடுக்கு கவலைப்படாமல் நிம்மதியாக சற்று நேரம் தூங்கலாம் என்று முடிவெடுத்திருப்பார்கள். அவன் மெதுவாக தன் வீட்டிற்கு வந்தான். வெடியை பற்ற வைக்க ஊதுபத்தி இல்லை. வீட்டின் பின்புறம் சென்று காய்ந்த துடைப்பக்குச்சியை எடுத்து வந்தான். அடுப்பு பக்கத்திலிருந்த தீப்பட்டியை எடுத்தான். வெளியில் வந்து பற்ற வைக்க முயற்சி செய்தான். பெட்டி நமத்து போயிருந்தது. நிமிர்ந்து பார்த்தான்.
எதிரே உள்ள ஆலமரத்து பிள்ளையார் கோவிலில் விளக்கு மெதுவாக இன்னும் எரிந்து கொண்டிருந்தது. அதில் தன் குச்சியை பற்ற வைத்துக் கொண்டான். விளக்கும் அவனுக்கென்று காத்திருந்தது போல வெளிச்சம் குடுத்து விட்டு மலை ஏறியது. எப்பொழுதும் சீக்கிரமாக கூவும் சேவல் இன்னும் அமைதியாகவே இருந்தது. அவன் வேகமாக ஓடி இரண்டு தெருக்களும் சந்திக்கும் இடத்திற்கு வந்தான். கையில் வைத்திருந்த அத்தனை வெடிகளின் திரிகளையும் ஒன்று சேர்த்து கீழே வைத்தான். கையில் இருந்த குச்சியால் அதை பற்ற வைத்தான். அந்த குவியலை விட்டு சற்று விலகி நின்றான். இவனுக்காகவே தங்களை பதுக்கி வைத்தது போல அத்தனை பட்டாசும் வெடித்தது. இரண்டு தெருக்களையும் முதலில் தான் எழுப்பி விட்ட சந்தோஷத்தில் ஓசை அடங்கும் வரை கை தட்டி குதித்துவிட்டு, வீடு திரும்பினான். கைகளிலும், கால்களிலுமிருந்த பட்டாசு வாசனை அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. இன்றிரவு மறுபடியும் போகவேண்டும் என்று நினைத்துக் கொண்டான். கடைசி பட்டாசும் தான் தான் வெடிக்க வேண்டும். வடக்குத் தெருவில் வெடிக்காமல் சில பட்டாசுகள் இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டான். தானே சொந்தமாக பட்டாசு வாங்கவேண்டும் என்று ஆசை படக் கூடத் தெரியாதவனாக அவன் இருந்தான். தொலைவில் பட்டாசு சத்தம் கேட்க ஆரம்பித்தது.
Leave a comment
Upload